இருத்தல் என் சுதந்திரம்

திங்கள், 21 நவம்பர், 2011

விடுதலை ஒரு இனத்தின் கனவு

திங்கள், 21 நவம்பர், 2011 0

அகமும் முகமும் புதைந்த

உருவற்ற வெளியின் சிதைவுகளில்

எனக்கான விடுதலையையும்

எனக்கான சுதந்திரத்தையும்

பாடல்களில் இசைக்கிறேன்

பேய்கள் சிதைத்த நிலத்திலிருந்தும்

கொலையுண்ட கல்லறைகளிலிருந்தும்

எனது பிரகடனத்தின் சொற்கள் எழுகின்றன

துரத்தப்பட்ட ஊரின் குழந்தைகள்

அந்தச்சொற்களை உச்சரிக்கிறார்கள்

கசிகின்ற முதுகண்களில்

அந்த சொற்கள் உறைகின்றன

எரிந்த நிலமெங்கிலும் அலைவுறும் ஆன்மாக்கள்

இன்னுமின்னுமாய் அதே சொற்களை ஆர்ப்பரிக்கின்றன

நிலமெங்கிலும் பேய்கள் பெருநடம் புரிகையில்

பசியில் அலையும் கொடுமிருகம்

மண்ணை தின்னத்தின்ன

மரத்தில் இருந்தும் மலைமுகட்டில் இருந்தும்

எனது சொற்கள் உதிர்கின்றன

மூடப்பட்ட பதுங்கு குழிகளுள்

மூடாது விரிந்த விழிகளின் பார்வை

உறையும் புள்ளிகளெங்கிலும்

விடுதலையின் சொற்கள் அழுகின்ற சத்தத்தில்

குழந்தைகள் அரண்டெழுகிறார்கள்

விடுதலை பிரபஞ்சத்தை உடைக்கிறது

விடுதலை கண்ணீரிலும் உதிரத்திலும்

உயிர்க்கிறது

விடுதலை ஒரு இனத்தின் கனவு

விடுதலை உடைத்துயரும் வீரத்தின் விலை

விடுதலை ஆனந்தத்தின் உச்சம்

விடுதலை ஆன்மாவின் யாத்திரை

விடுதலை ஒரு அறைகூவல்

விடுதலை எப்போதும் அடுக்கப்பட்ட

முன்னோர்களின் சிதைகளிலிருந்தே

எழுவதாயிருக்கிறது

வெள்ளி, 4 நவம்பர், 2011

குழி பூக்கும் காலம்

வெள்ளி, 4 நவம்பர், 2011 0

கொட்டும் மழையில்

கொல்லப்பட்ட நிலமெங்கிலும்

உயிர்க்குழிகள் பூக்கத் தொடங்கையில்

ஆர்ப்பரிப்பற்ற அகழ் வெளியில்

புதைந்த கனவுகளின் வியர்வை

மண்ணில் கசிகிறது

மானம் நிறைந்து குழியில் முளைத்த

காவல் சிலைகள்

நொருங்கிச் சிதறிய துண்டங்கள்

மண்ணில் வீழ்ந்து துடித்த தருணத்தில்

பார்க்க வராத அம்மாவைப் பற்றியும்

பழகி மறந்த உறவைப் பற்றியும்

புலம்பும் வாயின் சொற்கள் உறைந்த

ஆழ் நிலத்தில்

உனதும் எனதும் முகங்களைச் சுமந்து

அவர்கள் அலைகிறார்கள்

உன்னையும் என்னையும் பற்றியே

அவர்கள் பேசிக் கொள்கிறார்கள்

சமுத்திரம் உதைக்கும் அலைகள் அள்ளி வரும்

அவர்களின் குளிர்ந்த சொற்கள் நம்மைப்பற்றியதே

புள்ளி தொடாத கோடுகளோடு

நிலத்தின் அடியில் உலவும் அவர்களிடம்

எனதும் உனதும் மீதிக்கதைகளை

யாருரைப்பர்

அடக்கம் செய்யப்படாடாத நமது கல்லறைகளை

எவ்வாறறிவர்

நம் நிச்சயமற்ற வெளிகளை யார் காட்டுவர்

நாறும் நம் சொற்களை அவர்கள் கேட்காதிருக்கட்டும்

நிலத்தின் காயங்கள் மனமெங்கும் குழியாய் எழ

சீழ் படிந்த நம் காயங்களில் கழுகுகள் பசியாறுமுன்

பூக்களற்ற கைகளோடு பறிக்கப்பட்ட

இடர் நிலத்தைக் கடந்து சென்று

வா குழிப்பூக்களைப் பறித்து

தலையில் சூடிக்கொள்வோம்

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

பொய்யெனப் பெய்யும் மழை

ஞாயிறு, 30 அக்டோபர், 2011 0

வானத்தின் விழுதுகள்

நிலத்தில் பெருக்கெடுக்கும் இரவுகளில்

இமைகள் துமிக்கும் சிறு நீரினூடே

பொரித்தூரும் கனவுக் குஞ்சுகள்

கன்னத்தில் கறுத்த மயிர்த் திரளில்

கோடாய் குழிகளில் நிறைகிறது

அக்கினிப் பிரவேசத்தில் இருந்து

சீதை இன்னும் மீண்டுவர வில்லை

சிலம்போடு போன கோவலன் தேடப் படுகிறான்

தாலி அறுக்கப் பட்ட பின்னும்

கண்ணகியின் முலைகளில் நெருப்பு

உருப்படாமல் இருக்கிறது

வீதிவிடங்கன் கொன்ற கன்றின் பசு

வாயில் மணியைத் தேடித் தொலைகிறது

ஒரு சுற்றில் அவிழ்க்கப்பட்ட அம்மணத்தோடு

பாஞ்சாலி மீட்கப்படாத பணயத்தில் இருக்கிறாள்

இராமனின் வனவாசத்தில்

நடுகல்லில் உறைந்த அகலிகை

உடைக்கப் பட்டாள்

அத்தினா புரம் திருடப் பட்ட பின்

பாண்டவர் இந்திரப்பிரசத்தை இன்னும் ஏற்கவில்லை

காண்டீபத்தில் கழுகமரும்படி

கண்ணனற்ற தேரில் அர்ச்சுணன் அம்பற்றிருக்கிறான்

மூன்றாம் குலோத்துங்கன்

துறவுக்குகச் சென்றபின்பு

போதிமர முனிவர் நிலங்களை அள்ளுகிறார்

அரிச்சந்திரன் இன்னும் உண்மை சொல்ல வில்லை

பாரி கொடுத்த தேரில் முட் கம்பிகள் படர்கின்றன

ஒரு இனத்தின் தசைகளில் நிரம்பியும்

இன்னும் உயராத சிபியின் தராசில்

கல்லறைகள் குவிகிறது

ஆறு நாள் பெய்த ஓயாத பெருமழையில்

புழுதி படிந்த என் அகதிக் கூடாரம் இன்னும்

சகதியாகவில்லை

திங்கள், 24 அக்டோபர், 2011

இல்லாத போது இருக்கின்ற தேச வெளி

திங்கள், 24 அக்டோபர், 2011 0

நிலாவில் பாட்டி ஒருத்தி

வடை சுட்டுக்கொண்டிருந்த போது

அம்மா எனக்கான பாடலை

இசைத்துக்கொண்டிருந்தாள்

நிறங்களில் நிரம்பிய வெளியெங்கிலும்

நான் மிதந்தேன்

குளங்களில் எனது தூண்டில்கள்

அந்தப் பாடலை இசைத்தன

வாலறுந்து வீழ்ந்த எனது பட்டம்

அதே பாடலையே இசைத்தது

ஆலையிலே சோலையிலே

ஆலம் பாடிச் சந்தையிலே

கிட்டியும் புள்ளும் கிறுகியடிக்க

பாலாறு…. பாலாறு……

என்று தோழர்கள் வாய் விரிய கூவிய பாடலில்

நிலம் அசைந்தது

நான் தோழர்களின் பாடலிலிருந்தேன்

வடை சுட்ட பாட்டி சுடப்பட்ட போது

பாட்டி இறந்து கிடந்தாள்

காகமும் நரியும்

அவளின் பாடலை இசைத்தன

நான் காகத்தின் பாடலிலிருந்தேன்

வீதியில் மரணம் நிரம்பி மலிந்த நாட்களில்

பலர் பாடினர்

பாரதியின் சிட்டுக் குருவியின்

பாடலைப் போல

விடு…. விடு…. என்று அவர்கள் பாடினர்

வெடிச்சத்தங்களையும் மரணங்களையும் கிழித்து

காற்றில் உலவிய அந்தப் பாடல்களை

நான் கேட்ட போது

அம்மா பாடாதிருந்தாள்

ஆலையும் சோலையும் தோழர்களற்றிருந்தது

நான் தூண்டிலின் பாடகனாகவும்

தோழர்களின் பாடகனாகவும் இல்லாதிருந்தேன்

இரவுகள் ஆட்காட்டிப் பறைவையின் பாடலின்

நிறையும் தருணங்களில்

நான் காதலின் பாடகன்

நிலமும் வானும் நிறமற்ற பொழுதில்

இசையற்ற என் சொற்கள் வாழ்வின் ஆசையை

பிரகடனப் படுத்தின

நான் இனத்தின் பாடகனாய் இருந்த போது

காதலின் பாடகனாய் இல்லாதிருந்தேன்

நிலத்தின் பாடகனாய் இருந்த போது

நிலம் என்னிடம் இல்லாதிருந்தது

தேசத்தின் பாடகனாய் இருந்த போது

நான் இல்லாதிருந்தேன்

இருக்கின்ற போது இல்லாத என்னை

இல்லாத போது இருக்கிற என்னை

நாள் முழுக்க அலுக்காத ஓர் காகம்

அதன் கரிய சொண்டுகளில் தினமும்

எனக்கான அதன் பாடலை பாடிச் செல்கிறது

என்னைப் போல் புரியாத அதன் மொழியில்

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

காறி உமிழ அற்ற நிலம்

ஞாயிறு, 16 அக்டோபர், 2011 0


வெடித்தலறும் துப்பாக்கிகள்

மூச்சடங்கிப் போன எனது தேசத்தில்

மரணம் அடங்காது அலைகிறது

வாய்களை அகலத்திறந்து ஒரு பூனை போல

சத்தமின்றி கால் வைத்து

மரணம் இன்னும் அலைகிறது

கணக்கிட முடியா சனத்திரளை

தன் பேய்க்கரத்தால் கிழித்த பின்னும்

பெரு வயிறு அடங்காப் பசியில்

நிலங்களையும் அது விழுங்குகிறது

திருடப்பட்ட நிலத்தின் சனங்கள் மீது

மரணத்தின் குங்சுகள் ஊர்கின்றன

பறித்த நிலத்தை அவாவும் அப்பழுக்கற்ற

அப்பாவிக் குரல்கள்

அதிகாரக் கால்களில் மிதிபட்டு இறஞ்சுகின்றன

நிலத்தை உச்சரிக்க முடியாது அச்சுறுத்தும் கட்டளைகளில்

தளரும் சொற்கள் உறைகின்ற வெளியில்

மரணம் இன்னும் அலைகிறது

மண்ணை உதட்டில் சுமந்து மூச்சிழந்த

முதுமக்களின் ஆவிகளில் வெளி கனத்தசைய

வருடங்களைச் சுமந்த அகதிக்கொட்டில்களின் தாழ்வாரங்களில்

குழந்தைகள் தோண்டும் குழிகளில் கனவுகள் நிறைகின்றன

அதிகாரத்தின் கைகளால் மிக இலகுவாக

நிலங்களை அள்ள முடிகிறது

அதிகாரத்தின் சொற்களால் ஓரிரு வார்த்தைகளில்

காரணம் சொல்ல முடிகிறது

பாட்டனின் சொத்துக்களைப் புதைத்தும்

பரம்பரைகளை சிதைத்தும்

உரிமைக் காகிதங்களைக் கிழித்தும்

சொல்கின்ற இடங்களில் குந்த வைக்க

அதிகாரத்தால் மிக இலகுவாக முடிகிறது

எனது தேசம் தமிழ் நிலங்களை மட்டுமே

தன் அபிவிருத்திக்கு பிரியம் கொள்கிறது

எனது நிலத்தில் எரியும் நிலக்கரிதான்

மின்சக்தியை அழிக்கக்கூடும்

எனது மண்ணில் மட்டுமே

தொழிற்சாலைகள் முளைக்கலாம்

எனது பாட்டன் நடந்த தெருக்கள்தான் சித்தாத்தன்

அமர சௌகரியமானவை

அனாதைக் குலத்தின் மீது ஆக்ரோசமாய் படரும்

கொடிய காலகள் ஓய்ந்தபாடில்லை

தடுப்பற்ற வெளியெங்கிலும் நீளும்

போதி மரத்தின் வேர்கள்

விசப்பற்களோடு பாம்பாய்த் துரத்துகிறது

படுத்துறங்க பிடிநிலத்தை

பிச்சை கேட்கும் சனங்களின் சத்தத்தை

முள் வேலிகளுக்குள் அடைத்து எச்சரிக்கும் தேசத்தில்

மரணம் இன்னும் அலைகிறது

என்னினத்தில் இங்கொன்றாய் அங்கொன்றாய்

மீந்திருக்கும் சனங்கள் செத்தொளிந்து

வாய்க்குழிக்குள் ஊறுகின்ற தமிழ் எச்சில் ஒரு துளியை

காறி உமிழ நிலமில்லை என்னும்

காலம் உருப்பட்டால் உலகம் சிலவேளை

எனக்கான சுதந்திரத்தை

பிரகடனப்படுத்தக் கூடும்

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

நதிகளிறங்கும் காலம்

ஞாயிறு, 9 அக்டோபர், 2011 0

உயிருகி நீராய் உருப்பட்டு

ஓர் நாளில் என் நதிகள் இறங்கும்

எரிமலையின் சீற்றமாய் இருக்கும்

முகடொன்றில் அது புறப்படலாம்

விறு விறுவென வீரியத்துடன்

கூர்ப்பாறைகள் சிதைய

மஞ்சள் நீலம் பச்சை சிவப்பாய்

என் நதிகள் இறங்கும்

நானும் இறங்குவேன்

இருண்ட சிலுவையிலிருந்தும்

இடித்த சிறைகளிலிருந்தும்

நான் இறங்கும் போது

நீயும் இறங்கிக்கொள்

மண் அணைகளையும் முட்கம்பிகளையும்

நான் உடைக்கும் போது

நீயும் உடைத்துக் கொள்

இறங்கும் நம் நதியில்

அழுகிப்போன எமது மானத்தை

கழுவுவிக் கொள்வோம்

உந்தி வீழும் நதியில்

நிலம் பிளக்கும் குருத்து மணல் பாயும்

நிலப் பிளவுகளிலிருந்து

நம் தொன்மத்தையும்

மூதாதயரின் சொற்களையும் கல்லறைகளையும்

நான் பொறுக்குவேன்

நீயும் பொறுக்கிக் கொள்

நிலத்தில் அடியில் உறைந்து போன

ஓர் தேசிய கீதம் துடித்துக்கொண்டிருக்கும்

அதையும் அள்ளியெடு

விறு விறுவென நதியிறங்கும் காலத்தில்

சிலுவையிலிருந்தும் சிறைகளிலிருந்தும்

நான் இறங்குவேன்

மறக்காது நீயும் இறங்கிக்கொள்

திங்கள், 3 அக்டோபர், 2011

நிலத்தில் முளைக்கும் சொற்கள்

திங்கள், 3 அக்டோபர், 2011 0

இருள் கசியும் போர்வையின் சந்துகளில் சயனிக்கும்

மூச்சின் வெற்றிடமற்ற வெளியெங்கிலும்

நரைத்துப்போன கனவுகள் முளைத்து முகைக்கின்றன

அழுதூற்றியயர்ந்த கண்களில்

அரைத்தூக்கம் கவியும் தருணத்தை அணைத்து

புலம்பும் குரல்களில் நிலம் அசைகிறது

மண்ணைச் சுமந்த அவர்களின் நெஞ்சில்

திண்மித்த கனவுகள் எரியும் வெளிச்சத்தில்

தெற்கில் ஒருவன் பிரகாசிக்கிறான்

கூட்டில் தவறிய குஞ்சொன்று தன் சொண்டில்

நிலத்தை கிளறுகிறது

உதிரும் அதன் பிஞ்சிறகில் வாழ்வின் ஆசையை

அள்ளுகிறேன்

மழை சுடும் இவ்விரவில்

பூஞ்செடி நட தாயிடம் முற்றம் கேட்ட சாரு

உறங்கியிருப்பாள்

தாயிடம் முற்றமில்லை முகமுமில்லை

சாரு அதை எங்கு நட்டிருப்பாள் ?

நட்டுவைக்க முற்றமின்றி அவள் அணைத்துறங்கும்

செடியின் வேர் என்னைப் படர்கிறது

பிடி மண் மீதான அவளின் கோரிக்கையின் அழுகுரல்

என் வெட்கத்தைக் குடைகிறது

பறிக்கப்படாத சொற்கள் உசுப்பிவிட்டுப் போகும்

தொகை வலியில்

நான் நானற்றிருக்கிறேன்

நிலம் என்னுள் கனவுகளை உதிர்க்கிறது

நிலம் என்னை கோபத்தோடு அலைவிக்கிறது

நிலமே என்னை அழுகிறது

நிலமே என்னை நிரப்புகிறது

நிலத்தில் மட்டுமே என் சொற்கள் முளைக்கின்றன

நிலத்தில் மட்டுமே நான் குவிகிறேன்

நிலம் என்னுள் வாழ்கிறது

நிலம் என்னைக் கொல்கிறது

நிலம் அரட்டும் தூக்கத்தில் இருந்து விழிக்கிறேன்

நிலவும் நட்சத்திரங்களும் எரியும் இரவில்

மூர்க்கத்தைச் சுமந்து முறுவலித்த என் பார்வையில்

பிரபஞ்சம் எரிவதாயில்லை

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

உன் தாத்தாவிடம் ஒரு தாய்நிலம் இருந்தது

திங்கள், 29 ஆகஸ்ட், 2011 0

பறவைகள் அமரும் கிளைகளில்

உறைகின்ற என் விழிகள்

நிலத்தில் முளைக்கின்றன.

ஒரு பைத்தியக்காரனைப் போல

உன்னிடம் என்னைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

கரங்களை உயர்த்தி நிலம் கதறியழுத பொழுதில்

உயிர் மூட்டையைச் சுமந்துகொண்டு

தலைகால் புரியாது உன் நிலத்தைப் பிரிந்து

நீ என்றேனும் ஓடியிருக்கிறாயா?

நான் ஓடியிருக்கிறேன்.

நட்ட மாமரம் குலையாய் காய்க்கும் முன்

தங்கை அடுப்பில் வைத்த மண்சோற்றை இறக்க முன்

வாழ்வின் ஆசையை கைகளில் அள்ளிக்கொண்டு

நான் ஓடியிருக்கிறேன்.

ஒரு தமிழனாக நானிருந்த காலத்தில் அது நிகழ்ந்திருப்பின்

நீ அப்போது கர்ப்பத்தில் இருந்திருப்பாய்.

முன்பொருகாலத்தில் எனக்கென்றொரு

தாய் நிலம் இருந்தது.

எனது சிறுவர்கள் முற்றத்தை தோண்டினர்.

அன்று எங்களிடம் முற்றமுமிருந்தது.

வாரியள்ளிய நிலத்தை போர்வையென

நான் பூசிக்கொண்ட நாளில்

நிலம் என்னைப் புன்னகைத்தது.

என் கனவுகள் இன்றெனது மண்ணில்

மேடாகிக் குவிந்திருக்கும்

சாலை விழிகள் என் வருகை தோற்று

பூத்திருக்கும்

முட்கம்பிகளால் எனது நிலத்தைக் கொள்ளையடித்தவர்களிடம்

புனித நிலம் அழுகுரலை உயர்த்தி

என் பிரியத்தைப் பகிர்ந்திருக்கும்.

இப்படி நீ என்றேனும் உனது நிலத்தை நேசித்திருக்கிறாயா?

என்னைப் போல் நீயும் நேசித்தாக வேண்டுகிறேன்

ஒரு மரத்தைப் போல

கால்களை மண்ணில் புதைத்துக் கொண்டு

உரக்கக் கூவி சூரியனைப் பார்த்தபடி

யுகம் ஒன்று தீரும் வரை வாழ்ந்து

தாய் நிலத்தில் கரையத்துடித்த என் விருப்பை

மறவாது உன் காலத்திடம் பகிர்வாயா?

எனது சார்பில் உனக்கிது உரைக்கின்றேன்

உனக்கென்றொரு நிலம், மண்தோண்ட ஒரு முற்றம்

உனது காற்று, நீ உரத்துப்பேச ஒரு வெளி

இன்ன பிறவும் நீ கொள்ள விரும்பின்

உனது தாத்தாக்களைப் போல

வீரம் தெறித்து முறுகித்திமிர்த்த தமிழனாய் இருக்கும்

சாத்தியங்களைச் சிந்தனை செய்…

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

பூதங்கள் அலைவுறும் நிலம்

திங்கள், 22 ஆகஸ்ட், 2011 1

நிம்மதியின் நிழலும் கவியாத எனது வாழ்வெங்கும்

சித்தாத்தன் தன் கோடுகளை வரைகிறான்

நிறங்களை அவனே தூவுகிறான்

தூக்கம் விழிப்பு எங்கிலும்

அவனின் சொற்களே நிறைகின்றன

அவனே நிலமாக இருந்தான்

நீரும் காற்றும் அவனே

அவனின்றி என்னில் அணுவும் அசைந்த நினைவில்லை

சிறுவயதில் சோறூட்டும் போது

அம்மா அவனை அறிமுகப்படுத்தினாள்

ஒரு துப்பாக்கி காக்கி உடை தவம் கலைந்த முகம்

இப்படியே அவனைப்பார்த்தேன்

என் குறும்புத்தனங்கள் அதிகரிக்கும் போது

அவனிடம் என்னை கொடுக்கப்போவதாக அம்மா மிரட்டுவாள்

பள்ளி வகுப்பொன்றில் போதிமரத்தின் கீழ்

நிர்வாணமடைந்ததால்

சித்தாத்தன் கடவுள் என்று படித்தேன்

இருப்பினும் சித்தாத்தனும் சீடர்களும்

எங்கள் ஊருக்குள் வரும்போதெல்லாம்

அப்பா காட்டில் ஒழிந்து கொள்வார்

நினைவு வந்த நாளில் எனக்குள் அவன்

அசூரனாய் வெளிப்பட்டான்

வீடுகளை எரித்தான்

சீடர்களை அனுப்பி சூறையாடினான்

அரசமரக்கிளைகளில் காமம் சொரியும் போதெல்லாம்

எங்கள் பெண்கள் நிர்வாணமாகினர்

எல்லாம் அவன் மயமென்றான பின் கொலைகளும்

அவன் பொருட்டே நிகழ்ந்தது

நாட்டைத் துறந்தவனே எனது நிலத்தை பறித்தான்

அவனது திருவோடு எனது கைகளில் விழுந்தது

எல்லா யுகங்களிலும் அவனுக்கு வேறு வேறு முகங்கள்

அவன் அவதாரமெடுத்த எந்த முகத்திலும்

எனது இனத்தின் மீதான இரக்கக் கோடுகளை

நான் கண்டதில்லை

நேற்றும் சித்தாத்தனை சிலர் கண்டதாகக் கூறினர்

உடல் முழுவதும் கறுப்பாகி நகங்கள் நீண்டு

பூதத்தைப் போல அவன் இருந்ததாகப் பயந்தனர்

பூதங்கள் அலைவும் நிலத்தில்

போதிமரங்கள் இல்லை

வேலி பயிரை மேயும் காலத்தில்

சித்தாத்தனின் முகங்களை நானறிவேன்

நீயறிவாயா?

சனி, 13 ஆகஸ்ட், 2011

உயிர்த்தசையும் காலம்

சனி, 13 ஆகஸ்ட், 2011 1

என் உயிர்க்கொடியில் இருந்து

எழுகின்ற ஓசைகளில்

சொற்களைக் கொறித்தபடி

ஒரு பாடகன் எனக்குள் என்னை இசைக்கிறான்

நேற்றும் இன்றும் நாளையுமென

அள்ளிச்சொரியும் பாடல்களில்

இசைக்குறியென

நெளிந்தும் வளைந்தும் காற்றில் அலைகிறது

என் உயிர்ப்பிரவாகம்

சொற்களில் நிரம்பி வழிகின்ற தருணங்களில்

யுகங்களை சுமந்தபடி பிறக்கிறேன்

வாழ்வுச்சுவர்களில் மோதியும் தொங்கியும்

நிலத்தில் வீழும் என் சொற்களில்

பறவைகள் உயித்தெழுகின்றன

வெந்து தீய்ந்து மணக்கும் என் நம்பிக்கையின் சொச்சங்களை

குளிர் தேசங்களுக்கு காவிச்செல்கின்றன பறவைகள்

என்னினத்தின் மீதும் மொழியின் மீதும்

என்னைப் பூசிச்செல்கின்ற காற்று

ஓர் கணத்தில் என்னை விடுதலை செய்யும்

என் வார்த்தைகளை அள்ளியெடுத்து

தாய் ஒருத்தி என்னை கர்ப்பத்தில் சுமக்கக் கூடும்

நிலமும் சுதந்திரமும் நீண்ட பெருவாழ்வும்

அற்றவனென்றெனது நெடுந்துயரை

காலம் காற்றெல்லாம் தூவியெறியும்

மோதி விழுந்தரற்றும் என் வார்த்தைகளில்

மீண்டெழுந்த பறவைகள்

கூடு திரும்பும் காலமொன்றில்

நரைக்கண்கள் மூடாது விழிந்திருந்து

பொன்னிலத்தின் பிடி மண்ணை நான் அள்ளி முகர

பெருநிலம் என்னை இசைத்தெழும்

நிலமும் நீரும் காற்றுமென

வழிந்துருகும் வார்த்தைகளில் நிறைந்தசையும்

எனது குழந்தைகளின் முகத்தில் வாழ்வேன் நான்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

நினைவேந்தித் துடித்தழுதல்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011 0

காற்றுந்தும் வீதிகளில்

கால் தடங்களை அள்ளி

முகத்தில் அப்பும் புழுதிக் கந்தைகளூடு

கல்லறைகளைத் தேடி அலைகிறேன்

தூபிகளற்ற நினைவுகளைச் சுமந்து

காணிநிலம் துடித்துக்கசியும் சகதியில்

என்னைப் புதைக்கிறேன்

நினைவேந்தித் திரியும் அந்தியில்

பறவைகள் கூடுதிரும்புகின்றன

பழங்சோறு சுடும் காலத்தில்

சித்தாத்தன் துறவில் இருந்து மீண்டிருக்கிறான்

போதியரசனின் திருவோடு

எனது இனத்தின் ஆன்மாக்களில்

நிரம்பி வழிகிறது

தர்மச்சக்கரத்தில் கழுகுகள் ஓய்வெடுக்கின்றன

போதிமரம் வெற்றிக்களிப்பில்

மின் விளக்கென ஒளிர்கிறது

எமக்கு நினைந்தழும் வரத்துக்காக

தவத்தில் யுகங்களைக் கரைத்தவனின்

புனித்தந்தங்கள் அசைகின்றன

முலைகளைச் சிதைத்து

குழந்தைகள் பசித்திறந்த நாளில்

பாற்சோறு பகிரும் கரங்களில்

இன்னும் மறையாதிருக்கிறது

துடித்தழும் பல்லாயிரம் உயிர்களின் முகங்கள்

சரித்திரம் முடிவுற்ற நாளொன்றில்

வராமல் போனவர்களின் வார்த்தைகளை

தேடியழும் விதியில் தீபங்கள் எரிகின்றன

கிடைக்காத எனது சுதந்திரத்தின் பொருட்டு

கொல்லப்பட்ட

என் உறவுகள் என்னை மன்னிப்பார்களாக

பரிதவித்திறந்த குழந்தைகள்

என்னை சபிக்காதிருப்பார்களாக

கொலைக்கென அவர்களைப் படைத்த

கடவுளின் பெயரால் கேட்கிறேன்

சொர்க்கத்திலாவது அவர்கள்

சுதந்திரத்தை அடையட்டும்

காதல் அலையும் வெறித்த தெருக்கள்


நினைவுகளில் படுத்துறங்கும் விதியில்

நீ வந்து போகிறாய்

கணம் எனக்கழியும் நினைவில்

இன்னும் நீர்த்துவிடாத நீ

தொலைவுற்றுப் போனாய்

முன்பொரு காலத்தில் எனக்கென்றொரு

தாய் நிலம் இருந்தது

ஒரு வானம் ஒரு பூமி

இப்படி ஏதேதோ……

நான் நிலத்தில் இருந்த காலத்தில்

உனது காதலில் இருந்தேன்

பள்ளியுடையில் உன்னை தினம் கடந்தேன்

உனது தெருவே பிரியமானதாகவும்

உனது பெயரே என் மொழியாகவும் இருந்த காலம் அது

எனதும் உனதும் நிலத்தை ஓர் நாள்

அவர்கள் பறித்தனர்

நள்ளிரவில் குண்டுகளை அள்ளி எறிந்தனர்

சாமத்தில் எரிந்த நகரத்தில்

எனக்குப்பிரியமான உனது தெரு

வெறித்துக்கிடந்தது

சம்பூர் சாம்பலூரானது

ஓலங்களுக்குள் உனது குரலை

தேடியலைந்தேன்

முகம் தெரியாத இருள் வெளியில்

ஊர் பிரிந்தோம்

எடுத்துவர மறந்த பொருட்களில்

நமது காதல் கடிதங்களும் அடங்கிற்று

நம் நிலத்தை திருட அவர்கள் சொன்ன

ஆயிரம் பொய்க்காரணங்களில்

உனதும் எனதும் காதல் செத்துக்கொண்டிருந்தது

நான் மண்ணையும் உன்னையும் பிரிந்தேன்

பின்பொருநாளில்

வாலிபம் தொய்வுற்ற அந்தியொன்றில்

நீ என்னைக்கடந்திருந்தாய்

ஒரு கடைத்தெரு

வெறித்த சாலை

மூச்சிறுகிய திருவிழாக்கூட்டம்

இப்படி ஏதோ ஒன்றில் அது நிகழ்ந்திருக்கும்

மௌனங்கள் மட்டும் பேசிக்கொள்ள

நம் உடல்கள் நகர்ந்தன

உனது கைக்குழந்தையின் அழுகையை

சரி செய்யும் அவகாசத்தில்

என்னை மறந்திருப்பாய்

நாம் நடந்த தெருக்கள்

நிழல்வாகை மரம் காளிகோயில் இப்படி

எதுவும் இன்று என்னிடமில்லை

நமது காதலின் சாட்சிகளாக

நம் காதல் தெருக்கள் இன்று பாழடைந்திருக்கும்

நிலத்தை அள்ளும் பேய்கள் உலவும் நகரங்களில்

காதலில்லை

ஊரின் சாட்சியாகவும் உனது நினைவாகவும்

எனக்கென்று இப்போதிருப்பது

ஒரு அகதிக்கூடாரம் மட்டும்தான்

செவ்வாய், 10 மே, 2011

அம்மணம் விற்றுச் சுதந்திரம்

செவ்வாய், 10 மே, 2011 0

காணவிரும்பாக் காட்சிகளூடு

களமற்ற வெளியொன்றில் ஆடை அவிழ்ந்து

அசிங்கப்படுத்தப் பட்ட

உனது புகைப்படத்தையும் காலம் என்னில்

காட்டிச்செல்கிறது

உனது பிணத்தைப் புணர்ந்தவனைப் பற்றிய

எனது தேசக்குறிப்பின் மீது

காட்டெருமைகள் தமது உருவத்தை

வரைந்து கொள்கின்றன

மானத்தின் பொருட்டு

நீ மூடி வைத்த மார்பகங்களில்

கோரப்பற்களின் துண்டுகளைக் காண்கின்றேன்

உன்னைச் சுற்றி உறைந்து போன குருதியில்

எனது இரத்த நெடில் வீசுகிறது

உனது குருதியில் சிவந்த நிலத்தை போல

நான் வெட்கத்தில் சிவக்கிறேன்

உனது பெண்ணுறுப்பை சிதைத்தவன்

ஒரு தாயின் பிறப்புறுப்பில் இருந்து

வந்தவனில்லை என்பது

எவ்வளவு பெரிய உண்மையோ

அதைவிட பெரிய உண்மை

உலகில் மனிதர்கள் இல்லை என்பதும்

ஆடையற்றிறந்தபடி கிடக்கும்

உனது புகப்படத்தைக் காட்டி

சுதந்தைரத்தை யாசிக்கிறது எனது குலம்

உன் அம்மணத்தில் மலரும்

எனது சுதந்திரக் கனவை எண்ணி

நீ உயிரோடிருந்திருப்பின் ஏளனித்திருப்பாய்

இல்லையெனில் காறி உமிழ்ந்திருப்பாய்

உயிருற்றும் உயிரற்றும்

உனது பணி இனிதே நிறைவேறுகிறது

மயிர் நீர்ப்பின் வாழாத மண்ணில்

மல்லாக்க கிடக்கும் உனது தேகத்தை

கூவிக் கூவி விற்கும்

எனது சுதந்திர வீர்ரகளைப் பற்றி

உன்னிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை

எனது சார்பில் உன்னைக் கேட்கிறேன்

உனது மானத்தை விட பெரிதா

தாய்நாடும் வக்கிழந்த

எனது மண்ணாங்கட்டிச் சுதந்திரமும்

சனி, 30 ஏப்ரல், 2011

கனவடையும் குழந்தைகள்

சனி, 30 ஏப்ரல், 2011 2

நிழலற்றலையும் காற்றில்

தீயூறித் திரண்ட கனவுத் திரள்

முட்டியலையும் வெளியில்

அவலக் குரல்களின் சூட்டில்

அதிகாலை புலர்கிறது

நினைவுருண்டைகள் உரசும்

புலர்பொழுதொன்றிலிருந்து

இடைவிடாத் தருணங்களில்

இசைத்தெழும் பாடலொன்றில்

நிரம்பாக் கனவுகளை யாரோ

அள்ளிச் செல்கிறார்கள்

அவாவித்தழும் குழந்தைகள்

அள்ளுண்ட கனவுகளிலிருந்து

சுதந்திரத்தைக் கேட்கிறார்கள்

ஆமோத்தித்தலையும் ஆன்மாக்களின்

குரல்களில் உறங்கும் குழந்தைகளின் மீது

கும்மிச் சரிந்து படிகிறது வல்லிருள்

முன்பொரு நாளில்

நரத்துக்கலையும் மரணம் குந்தியிருந்த

சந்துகளிலும் முட்புதர்களிலும்

தொங்கும் வாழ்வின் சிதிலங்களில்

களைப்பற்றுறங்கும் மனிதர்களின் சுவாசம்

பெருந்தீயெனச் சுடுகிறது

உய்த்துணராப் பெருவலியில்

பனித்தெழும் எனது பாடலில்

சுவர்க்கோழிகள் துனுக்குற்றெழுகின்றன

கொலை வெளியில் கனத்துயிர்க்கும்

கருணைச்சொற்களைக் கேட்டபடி

மண்ணை இன்னும் இறுக்கமாய் பிசைகிறார்கள்

எனது குழந்தைகள்

காலச் சல்லடையில் எல்லாமும் சொரிந்துவிட

இன்னும் ஏதோ ஒன்றுக்காய்

சொரியாதிருக்கிறேன் எனது குழந்தைகளுடன்

போர்வையற்றுறங்கும் குழந்தைகளின் முகங்களில்

காலம் தன்னியல்பில் என்னைப் பூசுகிறது

இருத்தல் என் சுதந்திரம்

அநாதரவுப்பகல் ஒன்றில்

எனது வெறித்த தெருக்களை

விற்றுக்கொண்டிருக்கிறேன்

நிலமற்றலைபவனுக்கு தெருக்களில்

சினேகிதமில்லை

வெறுமை கவியும் வெளிகளில் ஒழுகும்

நிலத்தில் கசிந்தெழும்

எனது பாடல்களில்

நீ எதைக்காண்கிறாய் ?

தருணங்களற்றுக் கசியும்

எனது வாழ்வை நீ புரிந்து வைத்திருக்கிறாயா?

உகுத்தெழும் கண்ணீரில்

காலம் திணித்த எண்ணேலா

காட்சிகளை நான் கண்டுகொண்டிருக்கிறேன்

கோடுகளற்றும் நிறங்களற்றும்

என்னில் உறைந்திருக்கும் ஓவியங்களை

உன்னில் ஊற்ற மார்க்கமற்றலைதலில்

பெரு வலி அடர்கிறது

ஆலிங்கனத்துள் அகப்படாது போன

ஆனந்தத்தின் தகிப்பில்

உயிரற்றும் உடலற்றும் உலவிய

எண்ணற்ற பகல்கள் தேங்கி வழிகின்றன

படைப்பின் இருட்டறைகளின்

வித்தியாசங்களினூடு

வாழ்ந்தலைந்த பின்னும் நீ

இருத்தல் என் சுதந்திரம் என்கிறாய்

மனமற்றிருத்தலும் மனிதமற்றிருத்தலும்

சுதந்திரமெனில்

எனதிருத்தலை நீ எதில் அனுமானிக்கிறாய்

ஏதுமற்றிருத்தலிலும் நிலையற்றிருத்தலிலும்

உயிரற்றிருத்தலிலும் நான் புனைந்திருக்கிறேன்

இருத்தலின் என் சுதந்திரத்தை

வெள்ளி, 18 மார்ச், 2011

வீடுகளில் நிரம்பிய குழிகளின் நகரம்

வெள்ளி, 18 மார்ச், 2011 2

நான் அகற்றப்பட்டதோர் நாளில்

அவர்கள் எனது நிலத்தை தோண்டினர்

நிலத்தை அள்ளி அணைகளை அமைத்தனர்

சனங்க்களற்ற தெருக்களில்

அவர்கள் மட்டும் நடமாடினர்

ஆழக்குழிகளை நிரப்ப எஞ்சியிருந்த எங்கள் வீடுகளையும்

இடித்துத் தள்ளினர்

இறந்துவிட்ட பின்னும் எங்கள் வீடுகளில் குடியிருந்த

மூதாதயர்களின் ஆன்மாக்களின்

ஓலச்சத்தத்தை பொருட்படுதாமலும்

அவர்கள் அதை செய்து முடித்தனர்

சிறுவயதில் செத்துப்போய் புகைப்படமென

சுவரில் தொங்கிய எனது தங்கையும் அழுதிருப்பாள்

அவர்கள் இடித்து புதைத்த போது

அவளது புகைப்படம் மூச்சித்திணறியிருக்கும்

ஏற்கனவே புதைக்கப்பட்டவர்களை அவர்கள்

மீண்டும் புதைத்தனர்

வீடுகளில் குழிகள் நிரம்ப

வனாந்தர வெளியென்றானது பெரு நிலம்

முன்பெப்போதும் எங்களின் வாழ்வில்லாதபடி

அனைத்தையும் புதைக்க அரசன் ஆணையிட்டான்

நடு ஊரில் நாங்கள் நட்ட அரச மரத்தை மட்டும்

பாதுகாத்தனர்

நாங்கள் நட்ட அரச மரத்தில் அவர்களின்

நூற்றாண்டுகால வாழ்வை புனைந்தனர்

அந்த புனைவில் பராக்கிரம பாகுவும் பண்டுகாபயனும்

எங்கள் ஊருக்குள் வந்து போயினர்

குளக்கோட்டன் அக்ரபோதியானான்

காளியப்பு நட்ட அரச மரக்கிளைகளில்

சங்கமித்தையின் பறவைகள் அமர்ந்தன

அரசன் எனது நிலத்தை கூவிக்கூவி விற்றான்

ஊரின் சனங்கள் கூடாரங்களில் ஒதுங்கினர்

காற்றையும் மறித்தெழுந்திருக்கிறது மண்ணணை

ஊர் செல்லும் நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்

நிலத்துக்குரியவர்கள்

நிலத்தை அள்ளும் கரத்தின் நிழல்

இன்னும் அகலமாய் படர்கிறது

நிலத்தின் கீழே புகைப்படத்தில் புதைந்துபோன

எனது தங்கயின் குரல் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது

தன்னுடன் எடுத்துவராத மகளின் புகப்படத்தின்

கவலையில் உறைகிறாள் அம்மா

திங்கள், 14 மார்ச், 2011

எனது குழந்தைகளுக்காக பிராத்திக்கிறேன்

திங்கள், 14 மார்ச், 2011 1

அப்பாவித்தனமான முகத்தோடு

சற்றும் சலனமற்று சிரிக்கிறார்கள்

எங்கள் குழந்தைகள்

என்னில் உப்பிக் கிடக்கும்

அதே கேள்விக்குறியின் நிழல் கவிந்திருப்பதாய்

அவர்களுக்கு இன்னும் புலப்படாத பேருண்மையை

அந்த புன்னகையில் நான் காண்கிறேன்

வேலியோணானை சுருக்கிடுவதும்

தும்பியின் வாலில் முடிவதுமென

அவர்கள் உலகம் என்னில் வித்தியாசத்தை ஏற்படுத்துகிறது

சில குழந்தைகள் சைக்கிள் டயரை உருட்டி ஓடுகிறார்கள்

மண் சோறு ஆக்குவதிதிலும்

முடிதும்பை பூவில் இடியப்பம் செய்வதிலும்

அவர்கள் லயித்து விடுகிறார்கள்

அடுக்கப்பட்ட சிறட்டைகள் மீது குறிபார்த்து எறிவதில்

எனது பக்கத்து கூடாரத்து சிறுவன் தேர்ந்து வருகிறான்

நானும் முன்பொருநாள்

இவர்களைப் போலவே இருந்திருக்கிறேன்

கவலைகளற்ற பெரு வெளிகளில் ஊதாரித்திருக்கிறேன்

என்பதை நினைக்கையில்

அனுமதியின்றியே மனம்

குழந்தை இறக்கைகளை பொருத்தி பறக்கிறது

அவர்களிடம் அகதிக் கூடாரத்தில் வாழும்

குற்ற உணர்ச்சி இல்லை

திரும்பி வராத அப்பாவை பற்றிய

ஆராய்ச்சிகள் இல்லை

பொம்மைகளை குளிப்பாட்டி மகிழ்கிறார்கள்

இன்னும் அவர்கள் கேள்வி கேட்க தொடங்கவில்லை

இப்போதைக்கு மகிழ்ச்சி அவர்களிடம் மட்டுமே இருக்கிறது

காட்சிப்பிழைகளை காண்பிக்கும்

எனது பூதக்கண்களுக்கு மட்டும்

அவர்களின் தோள்மீது சுமக்கமுடியாத

ஏதோ ஒரு பாரம் இருப்பதாய் படுகிறது

எனினும் அந்தக் குழந்தை

பொம்மைகளைக் குளிப்பாட்டிகொண்டிருக்கிறது

காலம் எந்த சுமையையும் அவர்கள் மீது

சுமத்தாதிருக்கக் கடவக

என்னைக் காக்காத கடவுள்களிடம்

அடிமனம் வேண்டிக்கொள்கிறது

அந்த குழந்தைகளுக்கு வாலிபத்தை அளிக்காதே

குழந்தைத்தனத்தை பறிக்காதிரு

அவர்களுக்கு இனி மொழிவேண்டாம்

இனமும் வேண்டாம்

தனியான அடையாளங்கள் தேவையில்லை

அவர்களை அவர்களாக இருக்க விடு

பொம்மைகளோடும் தும்பிகளோடும்

அவர்கள் மகிழட்டும்

காலமே மறந்தும் அந்த பிஞ்சுகள் கையில்

துப்பாக்கியொன்றை திணித்து விடாதே

அந்த சிறுவன் சிறட்டைகள் மீது குறிபார்க்கிறான்

நீயென்றான பெருவெளி

நீ என்னை கடந்த தெருக்களில்

எனது யுகங்களைக் கரைக்கிறேன்

சப்தங்களின்றி நீ சொரிந்து போன பாசைகளில்

ஒரு சமுத்திரம் விம்பிக்கிறது

எனது போர்குணச் சாயலில் நீ

பூக்களை கொய்து கொண்டிருக்கிறாய்

அருகில் விலகி தூரத்து புள்ளியொன்றில்

உன்னை அன்மிக்கிறேன்

வடு நிறைந்த நெஞ்சில் உனது

துளிர்த்தலின் சாத்தியத்தை வியக்கிறேன்

நமக்கு வழங்கப்பட்ட அவகாசங்கள்

தீர்ந்தபடியே இருக்கிறது

வெறும் மெளனங்களில் ஒட்டிவிட்ட நீ

எனது வார்த்தைகளை பிடுங்குகிறாய்

நாளை பற்றிய ஏக்கங்கள் நிறைந்த

நமது வாழ்வின் நிர்ப்பந்தத்தில் இருவருக்கிடையேயும்

இன்னும் நீழ்கிறது சீனத்து பெருஞ்சுவர்

ஓய்ந்துவிட்ட மழைப் பொழுதில்

பீலியில் தங்கி நின்று நிலத்தில் வீழும்

மழைத்துளியொன்றின் பரிதாபத்தோடு

ஒவ்வொரு கணமும் வீழ்கின்றன

என்னில் தேங்கிய நீ

உன்னில் மூழ்கிவிடாதிருக்கும் பிராத்தனையில்

நீ என்ற குளத்தில் மூழ்கிக்கொண்டிருக்கிறது

எனது வெற்றுப் படகு

வெள்ளி, 11 மார்ச், 2011

சூரியனைச் சினேகித்தல்

வெள்ளி, 11 மார்ச், 2011 0

மூழ்காத சமுத்திரத்தில் மூழ்கி

தினம் எழுந்து

நாளாந்தம் என் வாசலிலே

வந்துதிக்கும் சூரிய தேவனே

இன்னும் ஆறாத நெடுந்துயரின் பாரத்தை

தோளாறத் தூக்கி வைக்க

எனக்கிங்கு மனிதரில்லை

எக்கணமும் மாறாது நீதான்

புலர்பொழுதில் வந்துந்தன் கதிர்க்கரத்தால்

மேனியெல்லாம் நனைக்கின்றாய் அதனால்

உன்னை நம்பத்துணிகின்றேன்

விடி பொழுதில் பனிப்புகையை குடித்து விட்டு

வந்தமரு

இரு தேனீர்க்கோப்பைச் சந்திப்பில்

என்னைத் திறக்கின்றேன்

ஊர் அலைந்து திரிபவன் நீ

ஊரிழந்து அலைபவன் நான்

உனக்கு யாதும் ஊரே

எனக்கு ஏதும் ஊரில்லை

சரித்திரங்கள் கண்டவன் நீ

சரித்திரம் சாய தரித்திரம் பிடித்தவன் நான்

இத்தியாதி வித்தியாசங்களுள்ளும்

உன்னை நம்பத்துணிகின்றேன்

முதல் தேனீர் கோப்பையில்

நம் முரண்பாடுகளைக் களைவோம்

என் பெரு நிலத்தை நீ அறிவாய்

நான் விட்டுவந்த என் முற்றமும் உனக்கு

புதிதல்ல

அன்று நானும் அங்கிருந்தேன்

நீயும் இருந்தாய்

இன்று நானில்லை நீயிருக்கிறாய்

எனது மண்ணை அறியும் ஆவலில்

தேங்கி வழிகிறது மனம்

நாளாந்தம் நீ கண்டுவந்த செய்திகளை

சொல்லிவிடு எந்தனுக்கு

வில்லுக்குளத்தில் தாமைரைகள் பூத்ததா

வாசல் ஒட்டுமாவில் அணில்கள் தாவினவா

முற்றத்து மல்லிகை பூத்துச் சொரிந்ததா

தென்னைகளில் தேங்காய்

குலை குலையாய் விழுகிறதா

தங்கை நட்ட பூ மரங்கள்

கருகிவிட்டனவா

வாசலில் அறுகு படர்ந்து அடர்கிறதா

முச்சந்திப் புளியடியில் பேய்கள் உறைகிறதா

விட்டுவந்த வெள்ளைப் பசு

கன்றேதும் ஈன்றதுவா

என் பிரிவை தாங்காத பெரு நிலத்தாய்தான்

அழுது தொலைத்தாளா

ஏதுமறியாதோர் இருள் வெளியில் இருக்கின்றேன்

மேய்ப்பானுமில்லை மேச்சல் நிலமில்லை

மாயக்கதைகளுக்குள் புதைகின்றேன்

மானிடர்கள் திரித்துவிடும் புரளிகளின்

உண்மைகளை நீயறிவாய்

என் மேய்ச்சல் நிலப்பக்கம் சென்றாயா

மேய்ப்பானை எங்கேனும் கண்டாயா

நாளை குறு நடையில் என் பொன்னிலத்தை

கடக்க நேர்ந்தால் அதனிடத்தில்

ஊர் நினைவில் உக்கி ஊனழிந்து

உயிரணுக்கள் உருக்குலைந்து இற்றுவிட்ட மனதுடனே

உடல் தழுவ காத்திருக்கும்

என் நிலையை சொல்லிவிடு

மேய்ப்பானைக் கண்டால் சாப்பொழுதில் ஒருதடவை

முகம் காட்ட பரிந்துரை செய்

பரிதிக் கடவுளே

உன்னை நம்பத்துணிகின்றேன்

என்னைக் கடந்த நான்

மெளனிக்கப்பட்ட எனது தேசியகீதத்தோடு

வனாந்தரப்பகல் ஒன்றில்

வெறிச்சோடிய மயானத்தெருவினூடு

எனது பிணத்தை அவர்கள்

சுமந்து சென்றனர்

வெற்றுடல் நிரம்பிய பெட்டியில்

எனது திமிரும் வைராக்கியமும்

பெருந்தோள் வீரமும்

தேசத்தின் மீதென் காதலும்

சென்னிறத் திரவமாய் சொட்டிக்கொண்டிருந்தது

சிதறிய துளிகள் ஒவ்வொன்றிலும்

நான் முளைத்தேன்

அதுவரை நிறங்களற்றிருந்த நான்

சிவப்பென காற்றில் கலந்து கொண்டிருந்தேன்

எல்லாமாகிக் கலந்த என்னை

வெற்றுடலாக்கிய வீரத்தைப் பற்றிய மாயக்கதைகளோடு

பலர் கடந்து சென்றனர்

எனது பாடல்கள் ஒலித்துக்கொண்டிருந்தது

சிறுவர்கள் என்னை நிரப்பிக்கொண்டிருந்தார்கள்

வானம் என்னை அழுதது

நான் வானத்தை சிரித்தேன்

போர்க்குணத்தோடு என் கவிதைகளை

ஒருவன் படித்துக்கொண்டிருந்தான்

எனது நாலைந்து சொற்களை காற்று

முதுகில் ஏற்றி அலைந்தது

எனது மீதிப்பகலை அந்திரத்து

மர்ம வெளிகளில் பூசினேன்

வெறித்துச் சோம்பிய முகங்களுடன்

வீதியில் குழுமிய கூட்டத்தினிடையே

நெரிசல்களை நீவி

அவர்கள் சுமந்து சென்ற என் உடலை

பாத்துக்கொண்டிருந்தேன்

எண்ண வெளிகளில் மூழ்கிப்பார்க்க

நேற்றுப் போல் இருக்கிறது தெருவில்

என்னைக் கடந்து சென்ற எனது பிணம்

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

தொலை தேசத்து தோழனுடன் உரையாடுதல்

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011 0

காதல் கசிவுகள் அற்று

பிரியத்தின் நிழலும் படராத

நெருஞ்சி வெளியென்றிருக்கும் என்னில்

நேசிப்புக்குரியவனாகிக் கொண்டிருக்கும்

தூர தேச நண்பனே

பருவகாலப் பெயர்வில் வந்தமரும்

பெயரறியாப் பறவையைப்போல அனுமதியற்று

என்னில் கூடு கட்டியிருக்கிறாய்

தூர்ந்து போன என் தெருக்களை

திரும்பிப்பார்க்கிறேன்

நீ முளைதுக்கொண்டிருக்கிறாய்

நம் தொடர்புக்கான அசாத்தியங்களின்

ஆயிரத்தெட்டுக் காரணங்களுக்குள்ளும்

என்னிலும் உன்னிலும் ஓடுகின்ற

ஏதோ ஒரு இழைக்கயிறு

நம்மை பின்னிக்கொண்டிருக்கிறது

நீ என் நம்பிக்கைக்குரியவனாகி விட்ட பிறகு

உன்னிடம் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள

மனதின் ஆழத்தில் கிடக்கிறது ஆயிரம் கதைகள்

நீ எனக்கும் சேர்த்தே தோற்றாய்

எனது தோல்வியும் உனக்கும் சேர்த்தே இருந்தது

நமது தேசம் இன்னும் மாறவில்லை நண்பா

நீ விட்டுச்சென்றதைப் போலவே

இன்னும் இருக்கிறது

சில விரும்பத்தகாத ஏற்பாடுகளுடன்

நம் தெருக்கள் நீ நினைப்பது போலில்லை

நாய்கள் அடங்கும் சத்தத்தில் இருந்து

இன்னும் அவை மீளவில்லை

வெளியில் ஓய்ந்துவிட்ட சத்தங்கள்

மனதில் ஆர்ப்பரிக்கத்தொடங்கியிருக்கிறது

வெளி உடலில் சாவதிலும் கொடியது நண்பா

மனதால் செத்துக்கொண்டிருப்பது

நிலாக்காலத்தில் கைவீசி நடந்த தெருக்கள்

தொலைந்துவிட்டதாய் உணர்கிறேன்

தூரிகையற்ற ஓவியனைப்போல

வெற்றுத்தாள்களில்

என்னை பிரதி செய்ய முயல்கிறேன்

கற்பனைகள் சிதைய சிதைய

தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு

மீண்டும் கோட்டைகளைக் கட்டுவதில்

மனம் வசப்பட்டிருக்கிறது

உண்பது உறங்குவது இவையே

இன்னும் பறிபோகாமல் இருக்கிறது

எனது தேவதைக்கிராமம் செம்மண் வீதி

மூச்செறிந்து இளைப்பாறும் முற்றம்

என எல்லாம் தொலைந்தாயிற்று

முன்பிருந்தவற்றில் எதுவுமில்லை நண்பா

நீச்சலடித்த வில்லுக் குளம்

தூண்டல் மீன் பிடித்த தோணாப்பாலம்

காதல் தேடும் காளி கோயில்

இப்படி எதுவுமில்லை

உன்னைப் போலவே பரிச்சயமாகிவிட்ட

தோழி ஒருத்தி

நான் புண்ணியம் செய்த நாட்டில் வாழ்வதாய்

என்னை பரிகசிக்கிறாள்

என் இருத்தல் விருப்பத்தெரிவுகள் அற்றது என்பதை

அவளிடம் எப்படி புரியவைக்க

பார்த்தாயா நண்பா

நீ நினைத்தது போல் எதுவுமில்லை

நீ இன்னொரு தேசத்தில் இருந்து

உன் தேசத்தை எண்ணி அழுகிறாய்

நான் எனது தேசத்தில் இருந்தே

அதை எண்ணி அழுகிறேன்

அன்னியக்காற்றை சுவாசிப்பதாய்

நீ இன்னொரு தேசத்தில் இருந்து குறுகுறுக்கிறாய்

நான் எனது தேசத்தில் இருந்து கொண்டே

அப்படி உணர்கிறேன்

சாம்பல் படியும் இரவு

போர்வைக்குள் வினாக்குறியைப்போல

சுருண்டுகிடக்கும்

என் உடல் சூட்டின் கதகதப்பில்

இரவு ஒழிந்துகொள்ள எத்தனிக்கிறது

நகரம் எரிந்து

காற்றில் படிந்த சாம்பல் படிமங்கள்

பகலை விடவும் இரவுகளில்தான்

உடலை மூடிக்கொள்ளும்படியாக படிகின்றன

நாசியில் புகும் துகள்களில் எல்லாம்

எனது தொன்மத்தை நுகர்கிறேன்

அவற்றில் வார்த்தைகளற்ற

பல்லாயிரம் குரல்கள் நிறைவேறாத வாழ்வை

ஒரு சாகரத்தைப் போல

ஆர்ப்பரித்துக்கொண்டே இருக்கின்றன

ஓசயற்ற ஒவ்வரு நடு நிசி நிசப்தத்திலும்

ஒரு கனாக்காரன் மீதிக்கனவுகளுடன்

தன்னை என் மீது எழுதிவிட்டுப் போகிறான்

செவிப்பறைகளில் இடிபாடுகளின் சத்தம்

இன்னும் கேட்டுக்கொண்டே இருக்கிறது

கற்குவியல்களுக்குள்

தொலைந்து போன நான்

தேடிச்சோர்வுற்றும் எனக்குக் கிடைக்காதிருக்கிறேன்

காலம் என்னைச் சூதாடியிருக்கிறது

நாடு நகர் தோற்றாயிற்று

பணயத்திற்கு என்னிடம் பாஞ்சாலியில்லை

அதனால் கண்ணன் வரப்போவதுமில்லை

நீயும் நானும் நினைப்பது போலில்லை காலம்

இரவும் அப்படியே

நீ இப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறாய்

கண்ணகி திருகிய முலையில்

இன்னும் மதுரை எரிந்துகொண்டிருப்பதாய்

உன்னைப் பொய்யன் என்று நினைக்காமல்

வேறென்ன செய்ய

எனது நூற்றுக்கணக்கான

பத்தினிப்பெண்களின் மார்புகள்

அறுத்தெறியப்பட்ட போதும்

இன்னும் பற்றிக்கொள்ளாதிருக்கிறது

எனது தேசத்தில் நெருப்பு

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011

கனவுகள் + கற்பனைகள் = பூச்சியம்

செவ்வாய், 8 பிப்ரவரி, 2011 0

சொல்லாது போன சொற்களை

சேகரிக்கிறது தனிமை

நிலுவையில் இருக்கும்

பாதிச்சொற்களில் பயத்தின் நெடி

இன்னும் மறையவில்லை

மூடியற்ற என் கனவுக் குடுவையினூடு

வழிகின்ற எனது விம்பங்களில்

பரிதாபத்தின் தோரணை

அப்பிக்கிடக்கிறது

பினாத்தல்களின் சுதந்திரத்தில்

லயிக்கிறது மனது

தீராத பக்கங்களில் கலக்கமேதுமற்று

நிரம்பிக் கொண்டிருக்கின்றன

விடயற்ற கேள்விகள்

தீர்வுகளற்ற முடிவுறா

நெடும் பயணத்தின்

சிராய்ப்புத் தழும்புகளில்

மறைந்துகொண்டிருக்கும் எனது

சூரியோதயத்தின் மீது

நம்பிக்கையற்றிருக்கிறது பகல்

தனித்திருத்தலின் சாத்தியம்

அதிகரிக்க அதிகரிக்க

உடலற்று வான வெளிகளில்

நீந்துகிறது உயிர்

ஒவ்வொரு காலையும்

அதே நம்பிக்கயுடன்

நான் ஏந்தும் எனது

பிச்சை பாத்திரத்தின் மீது

விரல் பதிக்க துணிவற்றிருக்கிறார்கள்

சோறூட்டும் போது அம்மா சொன்ன

கதைகளில் வரும் தேவதைகள்

உயரத்தில் பறக்கும்

இனமும் மொழியுமற்ற பறவை ஒன்று

ஆயிரம் விடைகளோடு

உதிர்த்துவிட்டு போகும் இறகுகளில்

நிறைகிறது

தேவதைகளின் கண்களில்

அகப்படாத பிச்சைப் பாத்திரம்

 
◄Design by Pocket