இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 14 அக்டோபர், 2010

வன்னிப் பெருநிலமும் வீரம் உலவிய கடைசிப்பகலும்

வியாழன், 14 அக்டோபர், 2010 0

வக்கிரம் சூழ்ந்து கொள்ள

வன்னிப் பெருநிலத்தின் உக்கிரம்

குறைந்துகொண்டிருந்தது

நிணத்தின் நெடி படர்ந்த சினிக்காற்றைக் கிழித்து

இருட்டறைந்த தெருக்களில்

முடிவுத்தடங்களைப் பதித்தபடி உருண்டுகொண்டிருந்தன

விளக்கற்ற குருட்டு வாகனங்கள்

சத்தியங்களின் சிதைவில் அசாத்தியங்கள் நிகழ

ஈனத்தின் குரல்கள் மங்கி

விழுப்புண்களில் விறைத்தது பெருநிலம்

வந்தவர் தத்தம் பணி முடித்துப் போய்கொண்டிருந்தனர்

தீர்க்கப் போகும் கடைசி வேட்டுக்காக

ஒரு தமிழனின் துப்பாக்கி காத்துக் கிடந்தது

சபதங்களிலான பீஷ்மரின் அம்புப்படுக்கையில்

அதே சபதங்களால் பலர்

துரோகங்களின் நாறிய வாய்க்குள்

சரித்திரம் சரிந்து கொண்டிருந்தது

நாளைக்கான சகுனங்களற்றிருந்தன

போராடிக்களைத்து சாக்குறி தரித்த முகங்கள்

எக்கிய வயிறும் ஏறிட்ட பல்லுமாய்

பதுங்கு குழிகளுள் உறைந்து போயிற்று மனிதம்

இதுவரை நிகழாததும் இனி நிகழப்போகாததுமான

பெருவலியைச் சுமந்து

உப்பிப்பெருத்து சீழ் வடிந்த காயங்களில்

புழுவாய் நெளிந்தது சுதந்திரம்

மௌனங்கள் இறுகிய இரவு கழிந்து

ஒரு வரலாற்றை சப்பி ஏவறை விட்டபடி

இன்னுமொரு காலையை பிரசவித்தது காலம்

ஊமையாய் விடிந்த காலையின் நிசப்தங்களினூடே

அங்கொன்றுமிங்கொன்றுமாய்க் கேட்ட

துப்பாக்கி வேட்டுடன் அடங்கிற்று ஒரு வரலாறு

தீர்க்கப்பட்ட துப்பாக்கி வேட்டுக்களுள் ஏதோ ஒன்று

தமிழன் ஒருவனின் கடைசி வேட்டொலியாகவும்

வீரம் வீழ்ந்ததன் சமிக்ஞையாகவும் இருந்திருக்கும்.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

காதலியுடனான கடைசிச் சந்திப்புக்கள்

ஞாயிறு, 10 அக்டோபர், 2010 0

பிரிவுக்கான

எந்தச்சாத்தியக் கூறுகளும் அற்றதாய்

நிகழ்ந்து போயிற்று நம் கடைசிச் சந்திப்பும்

இயல்புகளின் ஆக்கிரமிப்புக்குள்

வர்ணங்களற்ற கோடுகளை இறுக்கி

போலிகளின் முதுகில் அமர்ந்து

புண்ணகைத்த உதட்டின் அர்த்தங்களை

யூகிக்க முடியவில்லை


சந்திப்பின் பின்னரான தொலை துர உலையாடலில்

நீ மாறியிருந்தாய்

பிரிவுக்காண காரணங்கிளை ஒப்புவித்தபடி

தப்பித்தலின் இடுக்குகனில் இருந்து

அந்த உரையாடலை நிகழ்த்தியிருந்தாய்


உனக்கிருந்த சூழல் கோபுரங்களையும்

எனக்கு பள்ளத்தாக்குகளின் பயங்கரத்தில்

வெறுப்புக்களையும் விட்டிருந்தது

நீ என் காதல் கடிதங்களை எரித்த போது

நானோ எரிந்து போன ஊரின்

சாம்ல் முகடுகளில் இருந்தேன்

நீகவர்ச்சியான எதிர்காலத்தின்

தோழ்களில் தொங்கிய நேரம்

காவலரனொன்றில் துப்பாக்கிச் சன்னங்களில்

தப்பிக்கொண்டிருந்த தம்பியின் உயிரில்

நிலைத்திருந்தேன்

அடுக்குமாடியில்

நீ அடுத்த காதலை பற்றிச் சிந்தித்த போது

பதுங்குகுழியில் நாளை தொடர்பாக

மண்டாடிக்கொண்டிருந்தேன்

உனது மாடிவீட்டின் கனவின் முரணில்

எனது அகதிக் கூடாரங்கள் விரிந்து கொண்டிருந்தது

நீ பிரிதலின் பொருட்டு காலம்

வித்தியாசங்களின் மேல் சுழன்றது


உன்னதங்கள் உடைந்து

புள்ளியாய்ச் சுருங்கிய என் எச்சத்தின் மீது

இன்றுனது வாழ்வு தொடங்கியிருக்கும்

அருவருப்பூட்டும் முத்தத்தடங்கள்

என்னை நினைக்க வைக்கலாம்

கூடாரங்கள் மேவிய திசை ஒன்றில்

அவலத்தின் சுருக்கங்களை முகத்தில் பொருத்தி

பிடிமண்ணுமற்றலையும்

என் உயிர்ப்பிண்டம் பற்றிய கதையாடல்களை

யாரோ சொல்லியிருப்பர் அல்லது சொல்லுவர்

அந்தக் கணத்தில் காலத்திடம்

ஆயிரம் நன்றிகளைச் சொல்லு காதலியே

பதுங்கு குழியில் உயிர் பிழைத்த

என்னுணர்வு கொண்டு உட்சாகம் கொள்

காலம் வித்தியாசங்கள் மீதும்

பொருத்தப்பாடுகள் மீதுமே சுழல்கிறது

சுடலை ஞானம்

இவர்களுக்கு

சுதந்திரத்தின் மீதான பசி எடுத்த போது

நான் ஒரு வரலாற்றை ஏப்பம் விட்டுக்கொண்டிருந்தேன்..

நான் வரலாற்றுக்குள் இருந்த காலத்தில்

இவர்கள் பஞ்சனைகளின் கூரைகளில் இருந்தார்கள்

எனது காலத்தில்

எனக்காகவும் என்னனோடிணைந்தவர்களுக்காகவும்

பலர் வந்தனர்

பாரதி சொன்ன அக்கினிக் குஞசுகளைப் போலவும்

அர்ச்சுனனைப்போலவும்

எனக்காக வந்தவர் மீது

இன்று சுதந்திரம் பற்றிப் பேசுவோர்

கற்களை வீசினர் காறி உமிழ்ந்தனர் எனினும்

அவர்கள் சிந்திய ரத்தத்தில்

இவர்களுக்கான சுதந்திமும் இருந்தது

எனக்காக வந்தவர்

அவரவர் காரியம் முடித்து

யாரும் வரமுடியாப் பேரிருளுள்

வந்தவர் போயினர்….

எங்களின்காலத்தில்

கருத்துக்கள் மீது நித்திரை கொண்டபடி

நாக்கு வளிக்காமல் பேசித்திரிந்தவர்களுக்கு

இப்போது சுதந்திரப்பசி….

இவர்கள் வரலாறு ஒன்றை ஏப்பமிடும் காலத்தில்

இன்னும் சிலருக்கு சுதந்திரப் பசி எடுக்கும்.

சனி, 9 அக்டோபர், 2010

கனவில் வந்து போன போராளி பற்றிய குறிப்புக்கள்

சனி, 9 அக்டோபர், 2010 0


கோரத்தின் வன்மநெடி
இன்னும் விட்டகலாப் பொழுதொன்றில்
காலத்தை தலையில் சுமந்தலைந்த போராளி
நேற்றயபின்னிரவில்
என் கனவில் வந்தான்
நெடிய வலியனாய் பெருநிலத்தனாய்
பருத்த தோளனாய்
வீரத்தின் கதைகள் உலவிய காலத்தில்
அவனை நானறிவேன்

கணை பிடித்த கரம் பற்றி
ஆற்றாது என்னுள் அமுக்கி அழுகி
சினியடித்துக்கிடந்த
பெருஞ்சினத்தை பேதமையை
போர்வை பாய் நனைய
கண்ணால் ஊற்றாது ஊற்றிவிட்டேன்

தூய கரத்தால் துடைத்தான்
நீ அழத்தெரிந்தவன் அல்லது அழப்பிறந்தவன்
நான் போராளி
உன்னைப்போல் ஆயிரம் கண்களை
துடைக்கப் போனவன்
அதனால் அழமுடியாதென்றான்

தேற்றினான் பாதகரைத் தூற்றினான்
பாழ் விதியைத் தந்தவர் மீது
காறித் துப்பச்சொன்னான்
நான் வந்த செய்தி பற்றி
திருவாய் மொழியாதிரு என்றான்

உரையாடல் முடித்துப் போராளி புறப்பட்டான்
வாசல்வரை அவனை ஓடி மறித்தேன்
போக்கனத்து உயிர் என்னை
விட்டகலாப்பொழதுக்குள்
நேரில் வருவீரா என்றுரைத்தேன்
என் அகதிக் கொட்டிலைப்பார்த்த
போராளியின் கண்கள் சிவந்தன
ஆயிரம் கண்களை துடைக்கச் சென்றவன்
விட்டழுத கண்ணீரில் விழித்து விட்டேன்

கனவில் வந்து போன போராளி பற்றிய குறிப்புக்கள்

கோரத்தின் வன்மநெடி
இன்னும் விட்டகலாப் பொழுதொன்றில்
காலத்தை தலையில் சுமந்தலைந்த போராளி
நேற்றயபின்னிரவில்
என் கனவில் வந்தான்
நெடிய வலியனாய் பெருநிலத்தனாய்
பருத்த தோளனாய்
வீரத்தின் கதைகள் உலவிய காலத்தில்
அவனை நானறிவேன்

கணை பிடித்த கரம் பற்றி
ஆற்றாது என்னுள் அமுக்கி அழுகி
சினியடித்துக்கிடந்த
பெருஞ்சினத்தை பேதமையை
போர்வை பாய் நனைய
கண்ணால் ஊற்றாது ஊற்றிவிட்டேன்

தூய கரத்தால் துடைத்தான்
நீ அழத்தெரிந்தவன் அல்லது அழப்பிறந்தவன்
நான் போராளி
உன்னைப்போல் ஆயிரம் கண்களை
துடைக்கப் போனவன்
அதனால் அழமுடியாதென்றான்

தேற்றினான் பாதகரைத் தூற்றினான்
பாழ் விதியைத் தந்தவர் மீது
காறித் துப்பச்சொன்னான்
நான் வந்த செய்தி பற்றி
திருவாய் மொழியாதிரு என்றான்

உரையாடல் முடித்துப் போராளி புறப்பட்டான்
வாசல்வரை அவனை ஓடி மறித்தேன்
போக்கனத்து உயிர் என்னை
விட்டகலாப்பொழதுக்குள்
நேரில் வருவீரா என்றுரைத்தேன்
என் அகதிக் கொட்டிலைப்பார்த்த
போராளியின் கண்கள் சிவந்தன
ஆயிரம் கண்களை துடைக்கச் சென்றவன்
விட்டழுத கண்ணீரில் விழித்து விட்டேன்

வியாழன், 7 அக்டோபர், 2010

இலவங் கிளியும் நாங்களும்

வியாழன், 7 அக்டோபர், 2010 0
முற்றத்தில்
பெருத்து வளர்ந்த
இலவை மரத்தில்
காலங்காலமாய்க் கிளிகள்
இலவம் பழம் தின்ன……!

அன்று
தாய்க்கிளி காத்திருந்து
ஏமாந்த போக
நேற்று மகள் கிளியும்
ஏமாந்து போனது
அசட்டுத்தனமான நம்பிக்கையில்

இன்று
மகள் கிளி பொரித்த குஞ்சுக்கிளி கிளையில்
நாளைக்காய் கூட்டில்
குஞ்சிக்கிளி பொரித்த முட்டை
இப்படியே தெடர்கிறது
கிளிச் சந்ததியின் இலவை காத்தல்………

நேற்றுத்தான் அறிந்தேன்
முப்பாட்டனும் பாட்டனும்
ஏன் அப்பாவும்
குந்தியிருந்த இலவை மரத்தின் கீழ்
நானும் இருப்பதாய்

நாளை
என் பிள்ளையும்
குந்தியிருக்க முன்
இப்போதே சொல்லி வைக்க வேண்டும்
என் பாட்டன் முப்பாட்டன் கதையை
அவனிடம்………..

விளக்குகள் எரியாத நகரம்

பனை வடலிகளில் கூட
விளக்குகள் எரியும் நகரம்
கும் இருட்டில்
குருட்டு விளக்கும் இல்லாது
சுருண்டு விடுகிறது இரவுகளில்…

திராட்சைகள் தொங்;கும்
தெருக்களில்
தெரு நாய்களைத் தவிர
வேறொன்றும் இல்லை
சுப்பிர வாதம் சொல்லும்
அதிகாலைப் பொழுதுகள்
முகாரி ராகங்களை மட்டுமே
ஒலிபரப்புச் செய்கிறது…….

திருமண ஊர்வலம் செல்லும்
ஊர்திகள்
பிணங்களை மட்டுமே காவிச் செல்கிறது
கல்விக் கூடங்களில்
கவிதைகள்
இரங்கலுக்காக மட்டுமே….

ஊரடங்கில்
உறைந்து போகும் நகரத்தில்
ஆந்தைகள் மட்டுமே
விளித்துக் கொள்கின்றன
அதிகாலையிலையே
திறந்து வைக்கப் படுகிறது
எப்போதும் காலியாகும்
சவப் பெட்டிக் கடை

சதைகள் சன்மானமாய்க் கிடைக்கும்
அந்த நகரத்தை நோக்கியே
பருந்துகள்
பயணம் செய்கின்றன

திரும்புகிற பக்கமெல்லாம்
பிணங்ஙள்…..பிணங்கள்….
வயது பால் வேறுபாடின்றி

விளக்குகள்
எரியாத நகரத்தில்
சுடலையில் மட்டுமே
எப்போதும் எரிகிறது நெருப்பு

இப்போது
அழகாக இசையெழுப்பும்
“யாழில்”
ஓசையுமில்லை.....நாதமும் எழவில்லை......

ஒரு நிமிடமாவது நானாகு

திரும்பத் திரும்ப
எத்தனை முறை கட்டியும்
நீ விடுவதாயில்லை
சம்மந்தமில்லாமலும் காரணமில்லாமலும்
என் வீட்டை
இடித்துக் கொண்டே இருக்கிறாய்

முற்றத்தில் கட்டி
புல்லிட்டு வளர்த்து
பால் ஈணும் பசுக்கள்
உன்னை அறியா…….
குடல் வெளிக் கிளம்ப
அவை உன்னைக் கோலியதுமில்லை
நீயோ அவற்றின் குடல் சிதறி
கபாளம் பிளக்கும் படி செய்கிறாய்

வயல் நிலம்
உனக்கு ஒன்றும் செய்யவல்லை
உழுது கிளறி நெல் விதைத்து
வயிறு நிரப்பும் சேற்று வயலில்
செல் விதைக்கிறாய்

முலை சப்பும்
எனது சின்னக் குழந்தை
பட்டினிக்குப் பழகவில்லை
எனினும் அதன் தாயைப் பறித்த
பசியில் துடிதுடிக்க வைக்கிறாய்……

எல்லாவற்றுக்கும் மேலாய்
தாய் நிலத்திலிருந்து அகதியாய்
துரத்தியிருக்கிறாய்……
இப்படியே தொடர்கிறது
உன் அனியாயங்ள்

வேதனையின்
மொத்த வடிவாய் உலவும் நான்
விதியைத் தவிர ஒரு கணமேனும்
உன்னைத் திட்டியதில்லை

ஒரேயொரு முறை
ஒரு கணப்பொழுதேனும்
அடுத்தவன் வேதனையை
உனதாக்கிப் பார்க்கும்
திராணி உன் மனதுக்கிருந்தால்
ஒருநிமிடம்…ஒரே நிமிடம்
நானாக வாழ்ந்து பார்……

பேரக்குழந்தைக்காய் எழுதும் கவிதை

உறுதியாய்ச் சொல்கிறேன்
என் கவிதைக்கு யாரையும்
கொலை செய்யத்தெரியாது
காயப்படுத்தக் கற்றுக்; கொடுக்கவில்லை

வலி பொறுக்கத் தெரியாத கவிதை
விழி பிதுங்கிய படியே
பீச்சியடிக்கிறது ரணங்களை
மௌனங்களை அணிந்து கொண்டு தாளில்
அப்பி வைக்கிறது வலிகளை….

ஏன் கவிதை
இதுவரை யாரையும்
கொலை செய்யவில்லை என்ற
நம்பிக்கையிலும் சவந்தோசாசத்திலும்தான்
அழிந்து அழிந்து எழும்
பீனிக்;ஸ் குருவியாய்
இன்னும் வாழ்கிறேன்…..

சித்தம் தெளியாமல்
கடவாய்ப்பற்களில் ரத்தம் வழிய
நரபலிக்காய்த் துரத்தும் உன்னை
என் கவிதை
பின் தொடர்கிறது…..
ஒரு புகைப்படக் காரனைப்போல

புத்தி தெளிந்த பின்
என் கவிதையைப் படி
உன் கழுத்துச் சட்டையைப் பிடித்து உலுப்பும்
மனச்சாட்சியின் சுவர்களிளெல்லாம்
ஆணி அடிக்கும்
முகத்தில் காறித்துப்பும்
உன்னை வெளிச்சமிட்டுக் காட்டும்
நீ செய்ததையெல்லாம் பட்டியலிடும்
அன்று வெட்கித் தலை குனிவாய நீ…;

;
இறுதியில்
உன்னையும் என்னையும்
மரணம் விழுங்க புதிதாய்ப் பிறக்கும்
என் பேரக்குழந்தைக்கு
உன்னை அடையாளப்படுத்தும்

அதற்காகத்தான்
உயிரைபிச்சைப் பாத்திரத்தில் சுமந்தபடி
இன்னும்…..
செத்துச் செத்து எழுதுகிறேன்
எனது பேரக் குழந்தைக்காக……..

களவாடப்பட்ட விடுமுறை நாட்கள்

விடுமுறை நெருங்க
மனதில் நீளும் நிகழ்ச்சிப்பட்டியல்
ஆடைகள் அடுக்கபட்டு
முன் பதிவு செய்து பொண்டது போல்
தயாராகும் பயணப்பொதி

உறவுகள் எல்லோருக்கும் பொருட்கள்
ஏற்கனவேஇலக்கமிடப்படடிருக்க……….
ஊடம்பெல்லாம் சிறகுமுளைத்து
இறுதிப்பரீட்சையை எதிர்பார்த்து
தவம் கிடக்கும் விழிகள்.

கூட்டத்துடன் பேரூந்தில் அமர்ந்தாலும்
வீடு போய்ச்சேரும் வரை
வீதியை அளந்து கொண்டே வரும் எதிர்பார்ப்பு
என் வவுக்காய் காத்துக்கிடக்கும்
தாய்நிலம்.

வீட்டின் படலை திறக்க
அம்மாவை முந்தி வந்து
தோளில் பாயும் நாய்க்;குட்டி
பயணக்களைப்பே காணாமல் போகும்
காளிகோயிலும் வயல் வெளியும்
சொந்தங்களின் வீடும்
சொல்லாமலே பருகிவிடும் நாட்களை

என் வரவை அறிந்ததும்
நிழல்வாகைச் சந்தியில் குந்தி
ஊர் வம்பளக்க
நக்கலடித்து உரக்கச் சிரிக்க
ஊர்க்கதைகளை சுமந்தபடி
சூழ்ந்து கொள்ளும் நண்பர் கூட்டம்
வீடு களைகட்டிக்கிடக்கும்

வேலன்ர பெட்டை கூட்டிட்டு ஓடியது
பக்கத்து வீட்டுக் காதல் கல்யாணம்
ஏல்லா விபரமும் காதில் எட்டும்……
குளத்து வெட்டையில் பாட்டியும் நடக்கும்
மறுநாள் சிரித்து வயிறு வெடிக்கும்
இப்படி……
முப்பது நாள் விடுமுறை ஊரில்
நிமிடம் போல் கரையும் வாழ்க்கை வசிகரம்தான்

நீண்ட நாட்களின் பின்
நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது
என் மனம் செத்துக்கிடந்தது
முன்பு போல எல்N;லாரும் தயாராகினர்
விடுமுறை கழிக்க……
என் பயணப்பொதி மட்டும்
விறைத்துக்கிடந்தது வெறுமையாய்
வலிகளின் வடிவான
அகதிக்கூடாரத்தினுள் விடுமுறை
எப்படி வசிகரமாய்த் தோன்றும் என்ற ஏக்கத்தோடு……..

வரலாற்றுள் வாழும் பாக்கியம்

எங்கள்
வீட்டின் கூரை நீக்கி
எந்த விடியலும் இதுவரை
எட்டிப் பார்க்க வில்லை…..

எங்கள் பிள்ளைகள்
பாடசாலை செல்கிறார்கள்
ஆசிரியரிடம் இன்பம் என்பதற்கு
அர்த்தம் கேட்டு……
சுதந்திரத்திற்கு சொல்
விளக்கம் கேட்டு……
இவற்றுக்கெனல்லாம் அர்த்தம் தெரியாமலே
வாழப் பழகிக் கொள்கிறது
எங்கள் சந்ததி……

துன்பமும் அவலமுமே
எமக்கு நெருக்கமானவை
எம்மோடு உறவாடுபவை…….
எனினும் வாழப் பழகிக் கொண்டோம்
விதியை நொந்து கொண்டு……..!

ஒரு வகையில்
பெருமிதமடைகிறோம்
துன்பத்துள் வாழ்கிறோம்
என்பதற்கப்பால்
ஒரு வரலாற்றுக்குள்
வாழப்பிறந்ததை எண்ணி……!

அறியப்படாத போதும் அறியப்பட்ட போதும்.

எல்லாம் நிறைந்து
பூரணமாகிய
சம்பூர் மண்ணை
வேறுலகம் அறியாது
நாங்கள் மட்டும்
அறிந்த போது
அங்கிருந்தோம் நாம்….

சம்பூரே செய்தியாகி
ஊலகத்திசையெல்லாம்
ஓலித்த போது….
என் இனிய தாய் நிலமே
நாங்கள் உன்னோடில்லை
இன்று தனித்திருக்கிறாய் நீ…
உன் பிள்ளைகளின்
சுவடுகளை மட்டும் சுமந்தபடி……!

குஞ்சு பறிகொடுத்த தாய்ப் பறவை

ஏழையாய்ச் சபிக்கப்பட்ட
என் வயிற்றில் பிறந்து
மலையாய் வளர்ந்தவனே…….!
எட்டுத்திக்கும் தேடிவிட்னே உன்னை….
எங்கே இருக்கிறாய்
என் அழு குரலும் எட்டாத
தூரத்துள்..!

நேற்றிரவும்
என் கனவில் நீதான்
நீயின்றிக் கனவில் இப்போது
வேறு பொருள் தெரிவதில்லை
உன்னுருவம் கனவில் தெரிகின்ற
இரவெல்லாம் ஊரே கூடிவிடும்
என் ஒப்பாரி ஒலி கேட்டு……….

அம்மா நான்
பட்டினியால் துடித்தாலும்
விறகு விற்றும் கூலிஜ வுலை செய்தும்
உன் உடலை வளர்த்த கதை
நான் அறிவேன் நீயறிவாய்
பாதகர்கள் அறிவாரோ…..?

உயிர் காக்க வந்த நம்மை
ஏன் பிரித்தான் கடவுள்…..
என் தொங்கல் சேலையில்
பற்றிப்பிடித்திருந்த உன்னை
பறித்தெடுத்துப் போனாரே
யமன் உருவில் பாதகர்கள்……..
கடசியாய் நீ கடித்த சோளங் கதிர் கூட
இப்போதும் என்னிடத்தில் உளுத்துப்போய்………!

என்ன சொல்லி அழுதிருப்பாய்
அடிவாங்கும் போது…..
அம்மாவை அழைத்திருப்பாய்
பதறுதடா மனது…….
உன்னினைவில் அழுதழுது
உயிரின்றி உலாவுகின்றேன்.
நான் உன்னை
தேடாத இடமில்லை
கேக்காத ஆழில்லை
சாத்திரிகள் சொன்னார்கள்
நீ உயிரோடிருப்பதாய்…!
என் கருவில் வந்தவனே
அழுகுரலும் கேட்காதா உன் காதில்…..
சத்தியமாய்ச் சொல்கிறேன் மகனே..!
இன்னும் நானுனக்கு
சாக்கிரியை செய்யவில்லை……!

மீளப்பலித்தல்

பழைய கதைகளென
பள்ளியில் படித்தவையெல்லாம்
நான் வாழும் காலத்தில்
கொஞ்சம் கொஞ்சமாய்
பலிக்கக் காண்கிறேன்…….!

அன்று
யூதர்கள் யேசுவை
சிலுவையில் அறைய கல்வாரி மலைக்கு
கூட்டிச் சென்ற போது
கூடி நின்று ஒப்பாரிவைத்த
பெண்களிடம்
பிள்ளைகள் பெறாத பெண்களை
புண்ணிய வதிகளெனப் போற்றும்
காலம் வரும் என்றாராம் யேசு…….!

முந்தநாள்
உச்சி வெயிலில் வீதியால்
பறட்டைத் தலையுடன்
ஒப்பாரி வைத்துப் போனாள்
ஒரு தாய்க்கிளவி……

ஆண்டவா…….!
என்னை பிள்ளை பெறாதவளாய்
படைத்திருக்கக் கூடாதா என்றபடி…..!

உரு மாறிய காலங்கள்

ஊழிக்காலத்தின் அறிகுறிகளை
அலங்கரித்து விட்டபடி
அசையும் அணு யுகத்தில்
கொஞ்சம் கொஞ்சமாய்
உய்ய வழி தேடி மனிதர்கள்…..!

யுகம் யுகமாய் ஒளிரும்
சந்திரன் சூரியன் எல்லாம்
இன்று சாட்டுக்குத்தான்
கால நகர்வில்
இவற்றிலும் மாற்றம் வரும்

மனிதர்கள்
மிருகங்களாய் உருமாறி
வாழ்க்கை நடத்தும் காலம்
அமுலுக்கு வந்துள்ளது

பருவ காலத்தில்
இடம் பெயரும் பறவைகளயாயும்
நீர் நிலை தேடிக்காடு மாறும்
மிருகங்களாயும்
இன்று நிம்மதியாய் ஓரிடத்தில்
வாழ முடியாமல்……!

தம்மைத்தாமே தின்னும்
மிருகத்தனமான மூர்க்கக் குணத்துடன்
அலைகிறது மனிதம்

சன்னங்களின் கைகளில்
செங்கோலும்
இரும்புக் குழல்களிடம்
சிம்மாசனமும் அமைந்திருக்க
வெள்ளை அலரி என
எழுகின்றன அரச மாளிகைகள்

ஊழி முற்றிப் பெருத்துக் கிடப்பதாய்
உணர முடிகிறது எல்லோராலும்
எனினும்
அலரி முழைத்த மாளிகையில்
எருக்கலை முளைக்க
வெள்ளை அரண்மனையில்
பாசி பிடித்து நெரிஞ்சி படர……
ஊழிக்காலம் முடியும் என நேற்று
பத்திரிகையில் படித்தேன்….!

கனவு துரத்தும் வாழ்வு

அடிக்கடி என்னை
உசுப்பி விட்டுப்போகும்
கனவுகள் தொடர்கின்றன…….
நம்பிக்கை இழந்து போகும் .
என் கனவின் இறுதிப் பகுதியில்
திடுக்கிட்டு எழுகிறேன்……..

நேற்றும் இப்படித்தான்
என் மரண ஊர்வலம்
நடந்துகொண்டிருந்த போது
விழித்தேன்

கனவு பலிக்காதிருக்க
அதிகாலை எழுந்து
கிணற்றில் கல்லைப் போடுவதே
இப்போது
என் வேலையாகிவிட்டது

அன்று
இரண்டு துப்பாக்கிகள்
என்னைத் துரத்த
தலை தெறிக்க
ஓடிக்கொண்டிருந்தேன்

முண்டங்களை
கடந்து கடந்து ஓடி
மூச்சி வாங்கி
ஒரு மூலையில் ஒழிந்தேன்
மூலையில்
என் மார்பைத் தொட்டபடி
இன்னொரு துப்பாக்கி
நல்ல வேளை
விளித்துக் கொணடேன்….

ஒவ்வொரு முறையும்
கனவின் முடிவிலிருந்து
தப்பி விடுவதும்
கிணற்றில் கல்லைப் போடுவதுமே
இப்போது
என் வேலையாகி விட்டது….!

வாழ்தலுக்கான அவகாசம்

வாழ்தல் எவ்வளவு
மகத்தானது
அதிலும் ஒரு மனிதனாய்
அதிலும் கூன் குருடு செவிடு நீங்கி……

நிறையவே இருக்கிறது
பூமியில்
ஒவ்வொன்றாய்….சின்னச்சின்னதாய்;;;;;;;;;;…..
அனுபவித்து வாழ…!
அதனால்தான் சொல்கிறேன்
இன்னும் நான் வாழ்ந்துn முடிக்கவில்லை
அவகாசம் கொடு
மிகச் சிறியதாய் இருந்தாலும்
வாழ்ந்து விட்டு வருகிறேன்……

இலக்குகள் இன்றிஅ அலையும்
உன் சன்னங்களுக்கு
என் வாழ்தலை இலக்காக்க முன்
சின்ன அவகாசம் கொடு……

மழை விட்ட பின்னும்
பீலியில் தொங்கிக் கொண்டு
உயிர் வாழுமே மழைத் துளி
அதனளவாவது
சின்னதாய் மிகச் சின்னதாய்
அவகாசம் கொடு….!

குட்டி போட்டவுடன்
துள்ளிக் குதித்தோடிய
ஆட்டுக் குட்டியல்ல நான்…
எழுந்து நடக்கவே ஒரு வருடம்
பழகிய மனிதன்…
அதனால்தான் என் வாழ்தல்
பெரிதென்கிறேன்…..!

இரக்கமின்றி
உயிர்க்காய் அலையும் உன்னிடம்
என் வாழ்தலுக்கான அவகாசம்
இல்லாமல் போகுமெனில் …

உன் முகத்தில்
காறித் துப்ப முடியாமல்
எனக்குள் கடுப்பேறிக்கிடக்கும்
என் கடைசிக் கவிதையையாவது
எழுதி விட்டு வருகிறேன்
அவகாசம் கொடு……….!

பூசாவும் குழந்தையும்

பிள்ளைக்கு சோறூட்டிய
தமிழ்த்தாய் ஒருத்தி
உண்ண மறுத்த குழந்தைக்கு
பேயைச் சொல்லி…..
கரடியைச் சொல்லி…
பூச்சாண்டியைக் காட்டி
சோறூட்டினாள்
உண்ண மறுத்தது குழந்தை.
தோற்றுப் போன தாய்
பூசா என்றாள்
வாயை அகலத் திறந்தது
பிள்ளை…….



(பூசா என்பது இலங்கையில் உள்ள சிறைச்சாலை)

உரு மறைக்கப் பட்ட பதுங்கு குழி ஒன்றிலிருந்து என் உணர்வுகள்

வேட்டை நாய்களுக்குப் பயந்து
என் வீட்டின்
பின் புறத்தில் எங்கள்
இறுதிக் கணங்களை
எதிர்பார்த்தபடி
உருமறைக்கப் பட்ட பதுங்குகுழி
ஒன்றில் நான்…….

ஆம்மாவும் அப்பாவும்
ஒரு பதுங்கு குழியில்
நானும் தம்பியும் இன்னொரு பதுங்கு குழியில்
எறிகணை கக்கும் கரும் புகையில்
இன்னும் உரு மறைகிறது
எங்கள் பதுங்கு குழிகள்
இரண்டில் எந்தப்பதுங்கு குழி
தகர்க்கப் பட்டாலும்
வாழ்க்கை இருண்டு விடும்
என்ற நடுக்கம் தோய்ந்த பயத்தில்
நாங்கள்………!

மழையாய்ச் சொரியும்
ஏறிகணைகளில்
எரிகிறது எங்கள் ஊர்
வெடிச் சத்தங்களைத் தாண்டி
எங்கும் எதிரொலிக்கிறது
அழு குரல்கள்;……

எல்லாக் கடவுள்களையும்
எங்கள்
பதுங்கு குழியினுள் அழைத்து
உயிர்ப் பிச்சை கேக்கிறோம்
எனினும்
காளி கோயிலின்
கூரை பிரித்து இறங்கி
வெடிக்கிறது குண்டு……!

சாவைக் கண் முன் நிறுத்தி
ஊசலாடுகிறது உயிர்…
ஏந்த எறிகணை எங்கள்
பதுங்க குழியைத் தகர்க்கப் போகிறது என்ற
பயம் கலந்த எதிர்பார்ப்போடும்
எந்த எறிகணையும் எங்கள்
பதுங்கு குழி மேல் விழக்கூடாது என்ற
பயங் கலந்த வேண்டுதலோடும்
கழியாமல் கழிந்தது
அன்றைய இராப் பொழுது…….!

பதிலீடு இல்லாத இழப்புக்கள்

நீங்கள்
இப்போது எத்னையோ
காரணங்கள் சொல்லலாம்
உங்களை நியாயப்படுத்தத் துடிக்கலாம்
இவையெல்லாம்
தார்ச் சாலையாய்க் கொதிக்கும்
எங்கள் மனங்களை ஈரப்படுத்தாது..!

நீங்கள்
இப்போது எதையும் தரலாம்
அவியாத பருப்பை
ரொட்டித் துண்டுகளை
சிறை போல்
அடைக்கப் பட்ட கூடாரத்தை
இப்படி எதை எதையோ
இவையெல்லாம் எங்கள்
கண்ணீரைத் துடைக்கக் கைக்குட்டையாகாது……!

உங்களால் திருப்பித் தரமுடியுமா…?
நாங்கள் உருண்டு புரண்டகிராமத்தை
பாட்டனும் பாட்டியும்
கலவி செய்த கட்டிலை………
காட்டுத் தேங்காய் மரத்தடிக்
காளி கோயிலை…..
புழுதி படிந்த கிறவல் வீதியை…….
உழுது களிக்கும் பச்சை வயலை…….
இத்தனைக்கும் மேலாய்
எங்கள் நிம்மதியை……..!

இவற்றையெல்லாம்
திருப்பித் தந்தாலும்
நீங்கள் திருப்பித் தரும் பட்டியலில்
பாதி வயதில் செத்துப் போன
நண்பன் இருக்கமாட்டான்.
முற்றத்து மல்லிகை பட்டுப்போயிருக்கும்.
எங்கள் விடு முழுசாய் இருக்காது.
உறகள் ஒன்று சேராது.

உங்கள்
திருப்பித் தரும் பட்டியலில்
புதிதாய்ச் சில விபரங்களிருக்கலாம்…….
உடைந்து போன வீடுகளின் எண்ணிக்கை.
புதைக்கப்பட்டிருக்கும்
வெடி குண்டுகளின் விபரம.;
காலியான சொத்துக்களின் கணக்கெடுப்பு.
முள் கம்பிகளின் மொத்த எi.ட
ஊரில் கடைசியாய்க் காணாமல் போனோரின்
எலும்புகள் என
நீழும் பட்டியல்……

எமக்காய்
புதியதொரு உலகத்தை
உற்பத்தி செய்தாலும் எப்படி முடியும்
இவற்றை அப்படியே
உங்களால் திருப்பித்தர………

ஊர்க் குருவி.

உயிர் பருகும்
ஊர் நினைவில் தினமும்
உருக்குலைந்து போகிறது
மனது…….!
நடக்க இருக்க படுக்க என
சம்மந்தமில்லாமலும்
காரணமில்லாமலும்
மின்னல்கீற்றாய்
உசுப்புகிறது
ஊர் நினைவு…

நான் நடக்கப் பழகிய
தாய்மடியே….!
உன் மேனியில் புரண்டு புரண்டு
ஊத்தை படிந்த என் தேகம்
இப்போதும் அந்தப் புரள்வுக்காய்
காத்துக்கிடக்கிறது…..

முன்பு காலால் மண்கிளறி
அதிலெழும் புழுதியெல்லாம்
மோந்து மோந்து மணப்பேன்
அந்தப் புழுதியெல்லாம்
என் சுவாசப்பைகளின் ஓரத்தில்
இறுகிப் போய் இருக்குமெனில

சின்ன வயதில்
அம்மாவைக் காணாமல்
கோடிப் புறத்தில்பதுங்கி
மண் கட்டி திண்பேன்
அந்த மண்ணின் கட்டியெல்லாமம்
இரைப்பையில் செரித்து
உடம்பெல்லாம் இரத்தமாய் ஓடுமெனில்…..

நானும் தம்பியும்
மண்ணில்உருண்டு
மணல் வீடு கட்டி விளையாடுவோம்
அந்த ஊத்தையெல்லாம்
என் தோலில் இப்போதும்
ஒட்டியிருக்குமெனில்……

மண்ணோடும்
ஊரின் நினைப்போடும்
இந்தப் பிறப்பில் வாழ
இப்போதைக்கு
இவை போதும் எனக்கு…!

காணாமல் போவதற்கு சில நிமிடங்களின் முன்னும் பின்னும்

பக்கத்து வீட்டுத் தங்கராசு அண்ணன்
இன்னும் வரலயாம்
விடிய எழும்பி
முடி வெட்டப் போனவராம்
இன்டைக்கு நல்ல வடிவா
இருந்தவராம்

அம்பது வயசெண்டாலும்
மனுசன் நல்ல உருப்படி
இண்டைக்குத்தான்
தாடியும் வழிச்சவராம்
பொஞ்சாதிக்காரி
சொல்லிச் சொல்லிக் கத்திறா

ஒரு நாளும்
இல்லாத புதினமா
மரக்கறி வாங்கிக் குடுத்தாராம்
சாமியும் கும்பிட்டவராம்
கடைசிப் பெட்டையோட
வெளையாடித் தரிஞ்சவராம்

அந்தளவுக்குப்
பெரிசா வசதிக்காரனுமில்ல
ஓட்டச் சைக்கிள்தான் ஓடித்திரிவார்
கையில காசும் வெச்சிருக்கிறலயாம்
மதியம் கறியாக்க
கொச்சிக்காத் தூள் வாங்கத்தான்
காசுகொண்டு போனவராம்
கடக்காரந்தான் சொன்னவனாம்
கறுத்தக் கண்ணாடி பூட்டின
வேனில தங்கராசு அண்ணன்
போறாரெண்டு

ஊர்ச்சனமெல்லாம்
பாழடஞ்ச கிணறெல்லாம்
தேடுறதப் பாத்தா
தங்கராசு அண்ணன் என்ன
சின்னப்பிள்ளையா?
கிணத்துக்குள்ள தவறி விழ

முன் வீட்டுக்காரன் கதச்சான்
பத்து வரிசத்துக்கு முதல்
ஆரோ பசிக்குதெண்டு கேக்க
சோறோ ஏதோ குடுத்தவராம்..…………..!

காணமல் போன கடவுள்கள்

அமைதி
உறைந்து கிடந்த
அன்றைய பின்னிரவில்
கடவுளைத்க் காலம் முழுக்கத் தேடி
தோற்றுப் போன களைப்பில்
வேருத்து விருவிருக்க
பிரமாவும் திருமாலும்
என் கனவில் தோன்றினர்………


கடவுள் இல்லாத உலகில்
தேடுதல் பொய்த்துப் போனதால்…?
இருவரும் நிறையக்கதைத்து
இறுதியாய் ஒரு முடிவெடுத்தனர்.
இலங்கையில் காணாமல் போனோரை
பன்றியாயும் பறவையாயும் மாறித்
தேடுவதென்று…!


மகிழ்ச்சியில்
அழகுத் தூக்கம் கலைத்து
விழித்துப் பார்த்தேன்
இருவரையும் காணவில்லை…..!

கஞ்சா ரொட்டியும் காடேறிப் பிசாசுகளும்

எங்கள் கிராமத்து
சின்னச் சாமிகளுக்கு
வருடமொரு முறை நாமெலாம் கூட
நடக்கும் கூடார மடை

சாட்டையை நீட்டிப் பிடித்து
பூசாரிகள் மந்திரம் சொல்ல
அகோர முகத்தோடு உருவேறி ஆடும்
சின்னச் சாமிகள.

கஞ்சா ரொட்டியும்
சாராயப் போத்தலும்
கறுத்தச் சேவலும்
பலிமடையில் கிடக்க

காடேறியும் கரையாக்கனும்
ஊத்தை குடியனும் கபாள வைரவனும்
சுற்றி நிற்கும் பரிவாரங்களும்
படையலுக்குப் போட்டியிட்டு
உருNறி ஆடும்

பிசாசுகளெல்லாம்
கஞ்சா ரொட்டிக்குப் பின்னால் அலைந்து
பிய்த்துக்கிழித்து சப்பி விழுங்கும்
கறுத்தச் சேவலை தலையால் கடித்து
இரத்தம் உறிஞ்சும்
காலம் மாறி…….

இன்று
நாங்கள் பலிமடையில் கிடக்க
பிசாசுகள்
வேப்பிலை எறிந்து இரும்புகள் ஏந்தி
கள்ளப் பூசாரிகளின்
மந்திரம் கேட்டு
எம்மை ஓட ஓட விரட்டி
சொத்தழித்து உயிர் குடிக்க
நரபலிக்காய்
எப்போதும் காத்திருக்கிறது
கூடார மடை

இன்று
கஞ்சா ரொட்டியாய்
நாங்கள்……..
காடேறிப் பிசாசுகளாய்
அவர்கள்……!

பூசனிக்காய்ப் பூதம்

மொட்டைத்தலைக்கும்
முழங்காலுக்கும்
முடிச்சிப்போட்டு முடிச்சிப்போட்டு
களைத்துப் போனவர்கள்
இன்னும் ஓய்ந்தபாடில்லை

இன்று….?
முழுப்பூசனிக்காயை சுற்றியிருந்து
சோற்றுக்குள் மறைக் முயன்று
பாதிப் பேரின் பானை
காலியாய்………

பூசனிக்காய் சோற்றுக்குள்
காணாமல் போனது உண்மைதான்
சோற்றுக்குள் மறைந்த
பூசனிக்காய்
பூதமாய் வளர்வதை
பாழாய்ப் போனவர்கள் இன்னும்
அறியவில்லை….?

பூசனிக்காய்ப் பூதம்
முற்றிப் பெருத்து வளர்கிறது
வெறும் உண்மையில் ஊதி வளரும்
பூசனிக்காய்ப் பூதம் பொல்லாது
இன்றோ நாளையோ
நாளை மறு நாளோ
கடவாய்ப் பல் காட்டி
பூதம் வெளிப்படும்………!

பூசனிக்காய்ப் பூதம்
வெளிப்படும் காலத்தில்
முடிச்சிப் போட
மொட்டைத் தலையும் இருக்காது
முழங்காலும் இருக்காது…!

தெருப்பிணங்கள் இரண்டு

பேரூந்துகள்
உரசிப் போகும்;
நீளப் பாதையின் ஓரத்தில்
காக்கைகள் கொத்தும் படி
செத்துக்கிடந்தது நாயொன்று….

அதே பாதையில்
சற்றுத் தொலைவில்
நாய்கள் கூடக் கவனிக்;காமல்
அம்மணமாய்க் கிடந்தது
ஒரு ஆணின் சடலம்.

செத்துக்கிடந்த நாய்க்கு
வயசாகியிருந்தது
மயிர்கள் சொரிந்து
உடம்பெல்லாம் குட்டை….
தோலில் சுருக்கங்கள்……!

அம்மணமாய்க் கிடந்த
மனிதப் பிணத்தின் முகத்தில்
அப்போதுதான்
மீசையம் தாடியும் அரும்பியிருந்தது……!

கடைசி மனிதனின் மரணம்.

வாழ்கையை
அழகாய் நேசித்த
அந்த நல்ல மனிதனும்
நேற்று வீதியில் இறந்து கிடந்தான்
அவனேதான் நான் நம்பியிருந்த
கடைசி மனிதன்…..

அவன் முகத்தில் ஏதோ
பிடிப்பற்ற வெறுப்பு
அறிந்த வரை…..
வாழ்க்கையை உலகத்தை
நேசித்திருந்தான்.

எனது
கடைசி மனிதனின் மரணத்தில்
எந்தக் காரணமும்
முழுசாய்த் தென்பட வில்லை

அவனது
நாட்குறிப்பின் நடுப்பக்கத்தில்
இரண்டு கவிதைகள்

முதல் கவிதை
வாழ்க்கையைப் பற்றியது
அடுத்த கவிதை
மரணத்தைப் பற்றியது…!

முயலாமை

அப்பன் காலத்தில்
நடந்த கதைகளையெல்லாம்
மறந்துவிட்டு
காட்டு விலங்கெல்லாம் அழைத்து
சத்தம் போட்டது முயல்

காட்டில் அழகான மிருகம்
தானே என்றும்
தனக்கு வேகமாக ஓடத் தெரிவதால்
தன்னில் சிறிய விலங்குகளுக்கு
தான்தான் தலைவனென்றும்
உரத்துப் பேசியது

அப்பன் காலத்து
கதைகளை மறக்காமல்
பற்றைக்குள் அமைதியாய்
படுத்திருந்த ஆமை
சிரித்துக் கொண்டே தலையாட்டியது
பொறு……பொறு…….
வேகமாய் ஓடினாலும்
தூங்குவாய்தானே என்று…..

அப்பாவின் வாழ்க்கைப் பயிற்சி

சின்ன வயதில
நான் சாப்பிடாட்டி அப்பா
பெரிய கம்போட நிப்பார்
சாப்பிடாட்டி அடிப்பன் என்று அதட்டியதட்டி
அந்த நேரம் கோபந்தான் வரும்
என்ன செய்யிறது
அப்ப நான் சின்னப் பெடியன்

வாயும் வயிறும் என்ரது
பசிச்சாத்தான் சாப்பிடலாம் என்ற
உரிமையும் என்ரது
ஆனாலும்
பசிக்காட்டியும் சாப்பிட வைக்கும் அதிகாரம்
அப்பாக்கிட்டத்தான் இருந்தது
அந்த நேரம்
கோபமும் வெறுப்புந்தான் வந்திச்சி
ஆனால் இப்ப வரல

அப்பாக்கு இப்ப
நன்றி சொல்லனும்
பசிக்காட்டியும் சாப்பாட்ட
திணிச்சித் திணிச்சி அப்ப
என்னப் பழக்கப்படுத்தினத்துக்கு…

சின்ன வயதிலயே
விருப்பமில்லாம ஏறறுக் கொள்ளப் பழகினதால
நான் வாழுற இத்க்காலத்தில
கொஞ்சம் லேசாச் சீவிக்க முடியுது….

தோழனுக்காய் ஒரு தோழனின் காத்திருப்பு

பால்ய வயதுத் தோழா

83 களில் எம்மவர்கள் நிர்வாணமாய்

எரியுண்ட போது

நானும் நீயும் ஏதுமறியாது முலை சப்பினோம்

87 களில்

எனதும் உனதும் வீடுகள் எரிந்து

வீதியில் பிணங்கள் கிடக்க

நம் தண்ணீர்த் துப்பாக்கி எரிந்து போனதற்கு

அழுது தொலைத்தோம்

7.7.90 இல்

ஊரே தலை தெறிக்க ஓட

நாமும் புத்தகப் பையுடன் வீட்டுக்கு ஓடினோம்

மறுநாள் நம்மூர் சுடுகாடாய் மாற

நூறு பிணங்கள் எரிந்து கிடந்தது

அன்றும் புதினம் பார்ப்பதைத் தவிர

எதுவும் புரியவில்லை

மீசை அரும்பிய வயதில்

கொஞ்சம் புத்தி தெரிய

படு கொலைகளில் கொல்லப்பட்டவர்களில்

எனக்கும் உனக்கும் பரிட்சயமான

பள்ளித் தோழியின் அப்பாவும் அண்ணாவும்

என்றறிய சற்றே கலங்கினோம்

அன்று அந்தக் கலக்கமும் தோழிக்காகத்தான்…….

மீசை கறுத்த காலத்தில்

நம்மூரில் நடந்தேறிய மரணங்கள்

நம்மிருவரையும் உலுப்பிப்போட்டது….

அப்போது ஒரு தோழிக்காக மட்டும்

கவலைப் பட வில்லையென்பது

எனக்கும் உனக்கும் தெரிந்த கதை

அவை நமக்குள் ஒரு புறமாக இருக்கட்டும்…

இது தாடி முளைத்து கறுத்துப் போன வயது

நீ ஊரில் இருந்தாய் நான் அங்கில்லை

2006.4.26 அன்று

ஊரே சுடுகாடாகி பின் பாலை வனமாகி

உயர் பாதுகாப்பு வலயமாய் மாற

நம்முறவுகள் உயிரோடு

தூக்கியெறியப்பட்டனர் தொலைவில்

நெத்தியில் அகதி முத்திரை குத்தி

உப்புச் சப்பற்றிருந்த மனதுடன்

உன்னை எதிர்பார்த்தேன்

கூட்டம் கூட்டமாய்த் தேடினேன்

எல்லோரும் வந்தார்கள்

பொய்த்துப் போனது என் காத்திருப்பு

நீதான் தோழா வரவில்லை

நீ வரமாட்டாய்………

எனக்குத் தெரியும்தானே

உனக்கு

மீசை முளைத்துத் தாடி படர்ந்த வயதென்று

அதனால் நீ வரமாட்டாய்……..

என் பிரிய தோழனே..!

நம்பிக்கையிழக்கவில்லை நான்

என்றோ ஒரு நாள்

நம் ஊரின் எல்லையில் நின்ற படி

என்னைக் கூவி அழைப்பாய்

அப்போது வருகிறேன்

ஆயிரம் கவிதைகளுடன்

உன்னைக்

கட்டித் தழுவிஆனந்தக் கண்ணீர் வடிக்க…..!

வெள்ளைப் புறாவும் அண்டங்காக்கையும்.

தீனி பொறுக்கத் தெரியாத

குயில் குஞ்சொன்றை

அண்டங்காக்கைகள் முற்றத்தில்

கொத்திக் கிழித்த போது அழுது முடித்திருந்தேன்…

காக்கையின் கூட்டில்

குயில்முட்டையிடுவதாயும்

காக்கையின் சூட்டில்

குயில் குஞ்சு பொரிப்பதாயும்

பின்னாளில் அறிந்து கொண்டேன்..

ஒரு காலைப் கொழுதில்

இடைவெளியற்றிருந்த எங்கள் வீட்டின் கூரையின்

நெருக்குவாரங்களை நீக்கி

சின்ன இடைவெளியில்

வெள்ளைப் புறா ஒன்று

கூடு கட்டியதாய் ஞாபகம் எனக்கு..!

தீனி பொறுக்கச் செல்லும்

மாலை கூடு திரும்பும்

அழகான அந்த வெள்ளைப் புறாவின்

வாழ்கையை சில நாட்களேனும்

ரசித்ததாய் எனக்குள் ஒரு உணர்வு

சில காலம் புறா

தீனி பொறுக்கச் செல்லாத கவலையில்

மேசைகளை அடுக்கி

ஒரு நாள் எட்டிப் பார்த்தேன்

மூன்று முட்டைகளை அடைகாத்திருந்தது புறா…!

சில காலம் கழிக்க

குஞ்சுகளின் கீச்சொலி கேட்டு

மீண்டும் கூட்டை எட்டிப் பார்த்தேன்

இட்டதென்னவோ புறா முட்டைதான்

பொரித்துக் கிடந்தன

பாம்பொன்றும்;;;;…..பருந்தொன்றும்…பச்சோந்தியொன்றும்.

வன்முறையற்ற வெள்ளைப் புறா

காக்கை போல் குஞ்சுகளை

கொத்திக் கிழிக்காமல்

பறந்து போயிருந்தது கூட்டை விட்டு….

நேற்று

மேசைகளை அடுக்கிகூட்டை உற்றுப் பார்த்தேன்

என்னைப் பய முறுத்திய படி

மூன்று முட்டைகள். 

Sujanthan's Blog: இல்லாத பிறப்பொன்றளித்த மூலவனே

Sujanthan's Blog: இல்லாத பிறப்பொன்றளித்த மூலவனே

இல்லாத பிறப்பொன்றளித்த மூலவனே

எங்கள் முதுகுகள் எரிந்த போதும்

முக்கண்ணில் ஒரு கண்ணும் காட்டாது

நீ முப்புரம் எரித்த

மூத்த கதைகளுக்குள்

இன்னும் உலவித் திரிகின்ற

மூலத்தின் பராபரமே…!

உன் படைப்பில் உள்ளது போல்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி

பல்மிருகமாகி பறவையாய்ப் பாம்பாகி

கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்

வல்அசுரராகி முனிவராய்த் தேவராய்

செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும்

பிறந்திழைத்தேன் என் பெருமான்

உன் கணக்கில் சொல்லாத

ஈழத்தமிழன் எனும்

ஈனப்பிறப்பொன்றை எங்கிருந்து

ஏனளித்தாய் சொல்லு….?

 
◄Design by Pocket