இருத்தல் என் சுதந்திரம்

சனி, 30 ஏப்ரல், 2011

இருத்தல் என் சுதந்திரம்

சனி, 30 ஏப்ரல், 2011

அநாதரவுப்பகல் ஒன்றில்

எனது வெறித்த தெருக்களை

விற்றுக்கொண்டிருக்கிறேன்

நிலமற்றலைபவனுக்கு தெருக்களில்

சினேகிதமில்லை

வெறுமை கவியும் வெளிகளில் ஒழுகும்

நிலத்தில் கசிந்தெழும்

எனது பாடல்களில்

நீ எதைக்காண்கிறாய் ?

தருணங்களற்றுக் கசியும்

எனது வாழ்வை நீ புரிந்து வைத்திருக்கிறாயா?

உகுத்தெழும் கண்ணீரில்

காலம் திணித்த எண்ணேலா

காட்சிகளை நான் கண்டுகொண்டிருக்கிறேன்

கோடுகளற்றும் நிறங்களற்றும்

என்னில் உறைந்திருக்கும் ஓவியங்களை

உன்னில் ஊற்ற மார்க்கமற்றலைதலில்

பெரு வலி அடர்கிறது

ஆலிங்கனத்துள் அகப்படாது போன

ஆனந்தத்தின் தகிப்பில்

உயிரற்றும் உடலற்றும் உலவிய

எண்ணற்ற பகல்கள் தேங்கி வழிகின்றன

படைப்பின் இருட்டறைகளின்

வித்தியாசங்களினூடு

வாழ்ந்தலைந்த பின்னும் நீ

இருத்தல் என் சுதந்திரம் என்கிறாய்

மனமற்றிருத்தலும் மனிதமற்றிருத்தலும்

சுதந்திரமெனில்

எனதிருத்தலை நீ எதில் அனுமானிக்கிறாய்

ஏதுமற்றிருத்தலிலும் நிலையற்றிருத்தலிலும்

உயிரற்றிருத்தலிலும் நான் புனைந்திருக்கிறேன்

இருத்தலின் என் சுதந்திரத்தை

2 comments:

rajeshuniverse சொன்னது…

//மனமற்றிருத்தலும் மனிதமற்றிருத்தலும்

சுதந்திரமெனில்

எனதிருத்தலை நீ எதில் அனுமானிக்கிறாய்//

சுயத்தை சுடுகின்ற உண்மை .

சின்னப்பயல் சொன்னது…

//ஏதுமற்றிருத்தலிலும் நிலையற்றிருத்தலிலும்
உயிரற்றிருத்தலிலும் நான் புனைந்திருக்கிறேன்
இருத்தலின் என் சுதந்திரத்தை//

அருமை...கவிதை எழுத்துக்களின் நிறம் வெண்மையாக இருந்தால் இன்னும் எளிதாக வாசிக்க ஏதுவாகும்.

கருத்துரையிடுக

 
◄Design by Pocket