இருத்தல் என் சுதந்திரம்

புதன், 17 நவம்பர், 2010

பாடைவரை படருகிற ஊர் நினைவு

புதன், 17 நவம்பர், 2010 0
ஊரே பெரு நிலமே

ஒப்பில் தாய் முலையே

உருப்பட்ட காலமொன்றை

எனக்கீந்த உயிர்ச்சுரப்பே

கிளட்டுவத்துள் தீர்ந்துவிடும்

வாழ்வினுக்கப்பாலும்

நீர்க்கமற நிறைந்து விட்ட

பெருந்தரையே

பாடை வரை உன்னினைவில்

ஊனுருகி உறுப்புகளில்

உயிர் பிதுங்கி வளிந்தொழுக

காலமெலாம் உனை

கவி எழுதிச் சாவதற்கா

என்னை நான்கைந்து சொற்களுடன்

உன்மீது பிறக்க வைத்தாய்

பாதாளம் வரை படர்ந்த

உன் கூடாரச் சிறகுகளுள்

தெய்வத்துள் பேய்களுள்

பெருவெறியர் கூட்டத்துள்

வாழும் தைரியத்தை உருட்டியெடுத்ததொரு

மனங்கொண்டு உருப்பட்டேன்

அண்டபகிரண்டம்

ஆட்களற்ற பெருவெளியும்

அகல வாய் திறந்து பரந்து கிடக்கையிலே

கற்கால வேடுவர்கள் வாழுகின்ற இத்தீவில்

உன் பொன்னிலத்தின் துண்டத்தை

பொருத்திவிட ஏன் துணிந்தாய்

இத்தீவில் உன்னுடம்பு

ஒட்டாமல் போயிருந்தால்

நானும் வந்திங்கு பிறப்பேனா

இன்பமே மயமென்று

பிரபஞ்சம் வழிகையிலே

அள்ளிப்பருக துளியும் மனமின்றி

என் வாலிபத்தை பெருவலியில் கரைப்பேனா

கடல் சூழ களனி வயல் காடு மலையென்று

பார்த்தவரை மலைக்க வைக்கும்

ரம்மியத்தில் நீயிருந்தால்

மண்பறிக்கும் சாதியிலே

வந்துதித்த பெருங்குடிதான்

உன்னைச் சும்மாதான் விடுவாரா

இல்லை கைதூக்கித் தொழுவாரா

தொடர் கணையில் எரித்து விட்டார்

சுடுகாடாய் மாற்றிவிட்டார்

எம்மைத் துரத்தி விட்டார்

அம்மா புதைத்த எந்தன்

தொப்புள் கொடியுந்தன்

மேனியிலே அறுகாகிப் படராதா

மூக்கு வாய் வழி புகுந்த

பூ மணக்கும் உன் புழுதி

நுரையீரல் சவ்வுகளில்

சுவராக எழும்பாதா

புனிதரின் கால் நடந்த

உந்தன் பொன்மேனி இன்று

பூதங்களின் கால் படர்ந்து

பேயுறைந்து கிடக்கிறது

மடி நிறையப் பிள்ளைகளை

பெற்று வைத்த உன் பிழைப்பு

இன்று மலடுகளைப் புணர்ந்த படி

மல்லாக்கப் படுக்கிறது 

கடவுளும் மயிராண்டிக் கதைகளும்

முன்பு முப்புரம் எரித்த

மூத்த கதைகளுக்குள்

இற்றுவிட்ட சுவடிகளில்

இன்னும் உலவித் திரிகின்ற

மூலத்தின் திருவுருவே

எங்கள் முதுகுகள்

எரிந்த போதும் உன்

எக்கண்ணும் திறக்கவில்லை

ஓர் அசுரன் வந்துவிட்டால்

வில்லோடும் விடக்கணையோடும்

மண்மீது பிறப்பாயென்று

மாகதைகள் சொல்வதுண்டு

கொடுவெளியில் எம்மக்கள்

ஒன்றற்ல இரண்டல்ல

காலிழந்து கையிழந்து

குறையுயிரைக் காப்பதற்கு

பல்லாயிரம் பேர் கூவியழைத்தும் நீ

வில்லோடு பிறக்கவில்லை

உன் தாயென்ன மலடா

இல்லை கருத்தடைதான் செய்தாளா

மழைபொழிய கோவியர்க்கு

மலை பெயர்த்து குடைபிடித்த

உன் பெருங்கைகள்

வீடின்றி மரத்தின் கீழ்

கூடார ஓட்டைகளில்

மழை ஒழுகி வழிந்த போது

குடைகொண்டு நீழவில்லை

தேவர்களின் குரல் கொண்டு

எமக்கழவுந் தெரியவில்லை

மானிடர்கள் சொல்லிவைத்த

மயிராண்டிக் கதைகளுக்குள்

தூக்கம்கலையாது தூங்குகிறாய்

அது நிற்க...

மூலத்தின் பராபரமே…!

உன் படைப்பில் உள்ளது போல்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி

பல்மிருகமாகி பறவையாய்ப் பாம்பாகி

கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்

வல்அசுரராகி முனிவராய்த் தேவராய்

செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும்

பிறந்திழைத்தேன் என் பெருமான்

உன் கணக்கில் சொல்லாத எங்கும் இல்லாத

ஈழத்தமிழர் எனும்

ஈனப்பிறப்பொன்றை எமக்கு

எங்கிருந்து

ஏனளித்தாய் சொல்லு….?

நாயை நினைந்தழுதல்

நிலம் பிரிந்து போனவனின்

நெடுமூச்சிக்கப்பாலும்

முற்பிறப்பின் வினையொன்றில்

கரைந்துவிடும் மாயத்துள்

வாலைச்சுருட்டி வந்து

என்வீட்டு வாசலிலே

உமிழ் நீர் சொரிந்து நிற்கும்

உந்தன் விம்பந்தான்

இடிவிழுந்து இறுகிவிட்ட

இருதுதயத்தின் சுவர்களிலே

உன்வாயில் வழிகின்ற

உமிழ்நீராய் வியர்க்கிறது

விட்டுந்த வீட்டினுள்ளே

பூட்டிவைத்த பெட்டகத்துள்

பாட்டன் முப்பாட்டன்

பரம்பரைகள் போனபோதும்

கலங்காத கல்மனது

நீயென்ற ஐந்தறிவில்

நீர்த்திவலையாயிற்று

நிலம் பிரிந்த இரு தினத்தில்

அந்திக்கு அப்பாலே

விழுங்கணையில் உயிர் பிழைக்க

முகம் புதைய விழுந்தெழும்பி

ஊர் நுழைந்தேன் உன்பொருட்டு

பேயுறையுந்தெருவொன்றில்

முன்காலில் முகம்வைத்து

பார்த்தபடி படுத்திருந்தாய்

படு இருளில் கண்டவுடன்

தாவிக்குதித்தெழுந்தாய்

முனகி முனகியென்மேல்

பாய்ந்து நகம் பதித்தாய்

வந்து விட்ட பேருவப்பில்

மூச்செல்லாம் முட்டிவிட

நக்கி நக்கியென்னை

ஈரத்தில் குளிக்க வைத்தாய்

கண்பூளை காய்ந்த படி

ஒட்டிய உன் வயிறு

அடி மனது உறைய

என்னுயிரை உசுப்பியது

அரிசிகளை இறுத்தெடுத்து

அவிந்தும் அவியாமல்

கடைசிப்பசி தீர்த்தேன்

நடு நாக்கு வெந்து

தோலுரியும் படியாக

சுடு சோற்றில் பசி முடித்தாய்

ஊருக்கும் உனக்குமாய்

விடைபெற்ற அக்கணத்தில்

மூச்சிரைக்க ஓடிவந்து

வீரிட்டலறி ஊழையிட்ட

உன் குரலின் பாசைகளை பெயர்த்தால்

என்னோடு நீயும்

வருவதற்கு எத்தணித்த

மொழியொன்று இருந்திருக்கும்

அந்தப் பொழுதொன்றே

இன்னுமென் நடுநெஞ்சில்

குறுகுறுத்துக் கிடக்கிறது

நீமட்டும் வாய் பேசும்

வரம் பெற்று வந்திருந்தால்

நிலம்பிரித்த பாவியரை

திட்டி முடித்திருப்பாய்

குரல்வளையைப் பாய்ந்து

கடிக்க நினைத்திருப்பாய்

ஏதிலியுள் மூழ்கி

இற்று விட்ட வாழ்வினுள்ளும்

நினைவின் இடுக்குகளில்

என்னைச் சுற்றிச் சுற்றிவரும்

நாய்க் குட்டியே

இன்றுனது வாழ்வு

முடிவுற்றுப் போயிருக்கும்

உன் மரணத்தின் கணங்கள்

உன்னூரில் அந்தப் பொன்னிலத்தில்

நிகழ்ந்து போயிற்று

எங்களைப் போல் நீயொன்றும்

மானமிழந்து மாற்று நிலம்

போனதில்லை என்றதொரு

ஆறுதலில் மட்டும்தான்

உக்கிய என்வாழ்வில்

உசும்புகின்ற உன்னினைவு

இடர் நிலத்தின் வலிகளுள்ளும்

இன்னும் வாழ்கிறது

என் பிரிய நாய்க் குட்டியே

செவ்வாய், 9 நவம்பர், 2010

மாறா நிலவும் மறையா வலியும்

செவ்வாய், 9 நவம்பர், 2010 1
மானத்தின் வேரழுகி

வீழ்ந்து விட்ட பின்னாலும்

இருந்தென்ன இனியென்ற

இறுதிநிலை வந்தெய்து

சாவோடு துணியாத

போக்கனத்து வாழ்வதனுள்

சலித்துயிர்த்து இன்னும்

நாமும் இருக்கின்றோம் என்பதுவாய்

நீமட்டும் மாறாமல்

வாசலிலே வாய் நிறைய

பால் சொரிந்து வந்து நின்று

காய்கின்றாய் பெரு நிலவே

முன்பொருநாள் பால் வெளியில்

நீ பாத்திருந்த வேளையில்தான்

பாவியர்கள் கணையெறிந்து

பாட்டனும் அறியாத பாட்டன்கள்

வாழ்ந்து விட்டுப் போனதொரு

எங்கள் பொன்னகரை எரித்ததனை

நீ மட்டும் சாட்சியென

பாத்திருந்தாய் பெருநிலவே

நாய்களைப் போல் சாமத்திலே

நிலம் பிரிந்து போனதுவும்

ஊரெரிந்த கரும்புகையில்

உன் பால் வீதி கறுத்ததுவும்

எனக்கின்னும் நினைவுண்டு

நீ மட்டும் மறப்பாயா

வெண்ணிறத்தின் கூடாரம்

ஓரிடமாய்த் தரித்து நிற்க

கூடார வாசலிலே மல்லாக்கப் படுத்திருந்து

வாழ்வழிந்த பெருவலியை

கடைக்கண்ணில் கசிய விட்ட

அகதி முகாம்வாசலிலும்

வஞ்சகமே இல்லாமல்

நீ சொரிந்தாய் பெரு நிலவே

அனல் மின்னை ஆக்குதற்கு

ஆட்களற்ற வெளியிருக்க

தொன்மத்துள் வாழ்ந்து வந்த

தொல்குடியை நாய்களைப் போல்

நாலாண்டாய் நடுத்தெருவில் துரத்தி விட்டு

மின்சாரம் செய்கின்ற

பாவிகளைக் கண்டதுண்டா

பாவியர்க்கு நீ இரவில் பொழிகின்ற

பால் ஒளிதான் போதாதோ

ஆட்களற்ற திசையெல்லாம்

பார்த்து வரும்பெரு நிலவே

எங்களது திருநாட்டில்

நடக்கின்ற பெருங்கூத்தை

எங்கேனும் கண்டதுண்டா

கண்டு வந்து சொல்லாயா

மாறாது மறையாது என்றெல்லாம்

மனதுள்ளே பூட்டி வைத்த

எல்லாமே மாறிவிட்ட பின்னாலும்

நீ மட்டும்மாறாது வந்துதித்தாய்

பெரு நிலவே

மாறாத எல்லாமே மாறிவிட்ட பின்னாலும்

நீ மட்டும் மாறாது

வந்துதித்து என்ன பயன்

செத்தழியா காலத்துள்

சீரழிந்த வாழ்வதனை

விட்டகலும் மாயத்தை

அறியாமல் தவிக்கின்றோம்

இரக்கத்தின் குணமொன்று

உனக்கிருக்கும் என்றாகில்

உன் பால் ஒளியில் படு விசத்தை

கலந்தெம்மில் ஊற்றிவிடு

வக்கிழந்த வாழ்வழிந்து

பரபதத்துள் மூழ்கட்டும்

(சம்பூர் என்ற எனது கிராமம் யுத்தத்தில் பறித்தெடுக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயமாகி இன்று அனல் மின் நிலையம் அமைப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 4 வருடங்களாக நாங்கள் அகதிக் கூடாரத்னுள்ளே வாழ்வை கழிக்கின்றோம்

தீபத்தைத் தின்னும் நரவதம்

நரவதத்தின் ஒப்பனைகளுள்

மூழ்கியது தீபாவளிக்காலம்

அடம்பிடித்த தங்கையின் கன்னத்தில்

உப்பாகிக் கரைந்தது புதுச்சட்டை

எட்டாத தூரத்தில் வெடித்து

அகதிக்கூடாரத்தின் கூரையில்

சாம்பல் படிய

தூர்ந்து போன பதுங்குகுழிக் காலத்தை

எண்ணும்படி அதிர்ந்தது

யாரோ விட்ட புஸ்வாணம்

இழந்து போன ஊருக்காகவும்

இன்னும் பலதுக்குமாய்

அகதி வாசலில் சிப்பியில்திரியிட்டு

நரகாசூரனைப் புனைந்து கொண்டிருந்தாள் அம்மா

இம்முறையும் தீபாவளி

ஊரில் ஒளிராமல் போன

அப்பாவித்தனமான ஏமாற்றத்தில்

மோட்டில் உறைகிறது

அப்பாவின் முதுமை எண்ணங்கள்

கடைக்கண் பார்வையற்றும்

கைவீசி நடக்கிறது காலம்

ஆயிரம் தீபங்களைத் தூர்த்தும்

அடியில் படிகிறது இருள்

ஆர்ப்பரித்து வெடித்து

அடங்கிச் சிதறிய பட்டாசிப் பேப்பர்களை

பொறுக்கிக் கொண்டாடினர் சிறுவர்கள்

நான் என்னைப் பொறுக்கிக் கொண்டிருந்தேன்

தீபத்தைத் தின்றபடி

நரவதத்தின் ஒப்பனைகளைக் கலைத்து

வல்லிருளில் படிந்தது

சிப்பியில் அம்மா புனைந்த

நரகாசூரனின் அரூபநிழல்

புதன், 3 நவம்பர், 2010

தொன்மத்தின் வன்மக்கனவு

புதன், 3 நவம்பர், 2010 1

பேய் இருட்டைப் பிழந்து நடுநிசியில்

கவிகிறது நிலவு

சலனங்களற்ற நிசப்தத்தின் கரைகளில்

சஞ்சரிக்கும் என் உயிர்

அமானுசியங்களின் சிதைவில்

தாயின் வற்றிய முலைகளை சப்பிய

குழந்தையின் முனகலில் சிதைகிறது

மூச்செறிந்துறங்கும் சொறிநாயின் சப்தங்கள்

சுவரில் படிந்து காற்றிறுகிய மரங்களில்

வழிந்தொழுகும் நிலவின் துளியை நக்கி அடர்கிறது

பல்லியின் நிழல்

விறைத்த ஆண்குறி சூடுதணியத் துலாவுகிறது

வன்மத்தில் மறியேறிய

கறுப்பு வெள்ளை மாட்டின் அலறலில்

அம்மா அரட்டப்பட்டாள்

கழுத்துச் சுருக்கங்களில் பிசிபிசுத்து வடியும்

வியர்வையின் நிமித்தம்

கலைந்த என் தூக்கத்தில் தொன்மங்கள்பற்றிய

தொடர்பறுந்த கனவு மீதியை அவாவுகிறது

பேய்கள் பற்றி அச்சுறுத்திய படி

அம்மா முதுமைக் கண்களால் அயர்கிறாள்

வறண்ட தொண்டை நனைத்து

தொன்மத்துள் புதையும் மனது

ஒட்டிய கனவின் மறுபாதியில்

ஓரு துப்பாக்கியின் குழல் சூட்டில்

கருகித் தீய்ந்து நாற்றமெடுக்கிறது

என்னினத்தின் கருமுட்டையும் விந்தும்

சூடுதணியத் துலாவிய ஆண்குறி சுருங்க

கறுப்பில் தோய்ந்த சப்பாத்தின் நிழலில்

மறைகிறது என் தொன்மம்

காலத்தின் புரியறுந்த நார்களில் தொங்கி

இறைஞ்சித் துடித்தது சுயம்

காறிச்செருமி பசியின் பொருட்டு

மழைக்காக வானம் பார்த்த

அப்பாவின் சத்தத்தில்

அம்மா மீண்டும் அரட்டப்பட்டாள்

வேட்டுவச் சொற்களோடு புணருகிறாள்

இகம்பரமற்று சூரியன் குருடாகிக் குமைய

அபத்தத்தின் அரூபம் படிந்து

ஆதர்சியத்தை இழக்கிறது பெருவெளி

மூர்க்கத்தில் நேற்று வீங்கிய முலைகளில்

நீல வல்லிருள் படர

சோபிதங்களின் சுருக்கத்துள் சுருள்கிறது

அவள்தேகம்

சில்லீறுகளின் சத்தத்தில்

எரிந்த சிறட்டையின் கரியை மீண்டும்

அடுப்பில் போட்டு ஊதும் கிழவியின் சத்தம்

போர்வைகளில் ஊர்ந்து அவளின் ஆண்மாவைச் சுடும்

அடர் மழையொன்றுக்கு கறுப்புப்பிய மேகம்

கால்நீட்டும் கணத்தில்

திமித்த அவளின் மங்கலான உடலில்

துமிக்கிறது பயத்தின் மழை

வேட்டுவத்தின் சொற்களோடும்

மிருகத்தின் பற்களோடும்

அவளுக்காக சுறனையற்று விறைத்து நீழ்கிறது

வக்கிரத்தில் ஊதிய குறி

பல்லியைப் புணர படர்கிறது பாம்பின் நிழல்

அவள் வேட்டுவச் சொற்களோடு புணருகிறாள்

ஆடைகற்ற பொழுதுகளுக்கப்பால்

அவளின் வெட்கம் தற்கொலைத் தினவற்ற

வாழ்தலின் ஆசை மீதே சிவக்கிறது

தடுப்புக்காவல்களுக்குள் தொலையாதிருக்க

விதியின் மீது படுக்கை விரிக்கிறாள்

ஆதியூழிக்குள் சஞ்சரிக்கிறது காண்டவம்

மந்திகள் கொப்பிழக்கப் பாயும் இருள்

சிறுவர்களின் மூத்திரத்தில் சுருப்பிய

குழிகளை மூடியும் அதற்கு மேலுமாய்

வானத்தைப் பெய்கிறது மழை

கால் இடுக்கில் கைகள் புக

குளிரில் சுருங்கிற்று

காலத்தில் தோற்ற வாலிபம்

ஏதிலிக் கூடாரத்தில்

போர்வைகளில் கசிகிறது ஈரம்

அநுபாலத்தை இழந்து

சயனத்தில் யனிக்கிறது பிரபஞ்சம்

தூர்ந்த காலத்தை கக்கத்தில் அடக்கி

மழையைக் கொல்லும்படி

காண்டவத்தில் எழுகிறது

ஆட்காட்டிப் பறவையின் குரல்

தொலைவுற்ற காலமொன்றில்

ஆட்காட்டிச் சத்தத்தில் நாய்கள் அடரும்

அம்மா நரைக்கண்களால் விழிப்பாள்

ஊர்ந்தூர்ந்து உருவம் வரும்

களைத்துண்ணும் கால்நீட்டி கண்ணயரும்

ஆட்காட்டிச் சொண்டுகள் அடங்காப்பொழுதுள்

பேரிருளில் பெருவுரு கரையும்

தூர்வுற்ற காலத்துக்கப்பால்

அர்த்தப்பிரமாணங்களற்று சுருள்கிறது

ஆட்காட்டும் பறவையின் சத்தம்

அம்மா நரைக்கண்களில் துஞ்சுகிறாள்

மழையைக் கொல்லத்தொடங்கிற்று தவளைகள்

அகாலத்துள் அமிழ்கிறது மனம்

ஆதியூழியுள் சஞ்சரிக்கிறது காண்டவம்

 
◄Design by Pocket