இருத்தல் என் சுதந்திரம்

செவ்வாய், 25 ஜனவரி, 2011

இயல்பற்றிருத்தலின் சாத்தியம்

செவ்வாய், 25 ஜனவரி, 2011 0

அதீத பிரயத்தன முயல்தலுக்குப் பின்னும்

இன்னும் என் கைப்பிடிக்குள் சிக்கிவிடாதிருக்கிறது

மனம் என்னும் மாயத்திரள்

கட்டளைக்கு கீழ்படிதல் என்னுமியல்பற்று

தன்னுள் வசப்படுத்தி அதன் பாட்டில்

என்னை இழுத்தலைதலில் அதற்கிருக்கும் தனிப்பட்ட

பிரியத்தைக் காண்கிறேன்

இருத்தல் மீது விருப்பைச் சொரிவதும்

முட்தரைகளில் என்னை உலாவ விடுவதும்

அதன் ஆசைகளில் ஒன்றென்று மொழிதலின் சாத்தியம்

பெருக்கெடுத்துக் கொண்டேயிருக்கிறது

ஈக்கிலில் சுருக்கிட்டுப்பிடித்த வேலி ஓணானை

கொண்டாடும் குழந்தைகளின் தெருக்களை

ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனர் மனிதர்கள்

வனாந்தர வெளிகளின் கற்பாறைகளில் என் எழுத்துக்கள்

பொறிக்கப்படுகின்றன

முற்றுமிழந்திருத்தல் என்பது இரவுகளில் மட்டுமே

வசப்பட்டிருக்கிறது

ஊர்கள் எரிந்து மணக்கும் சாம்பல் முகடொன்றுக்குள்

என்னை ஒருவன் புதயலாய்த் தோண்டுகிறான்

நான் இன்னும் நானாக இருக்கிறேன் என்னும்

மாயைக்குள் இருந்து அவன் விடுபடவில்லை

எப்போதோ எரிந்து போன நான்

அவனிடம் நழுவி சாம்பலாய்

காற்றில் கலந்து கொண்டிருக்கிறேன்

மனதின் துயர்மிகு பாடல்

வாழ்வின் கரைகளில் சதா மடிந்து

அழுதுயிர்கின்றன அலைகள்

நீளமாய் இன்னும் நீளமாய் இடையறாது

என் மனதில் ஒலிக்கிறது துயரின் பாடல்

அலக்கழிக்கப்பட்ட காற்றின் சொற்களில்

மொழிதல் ஏதுமற்று நனைகிறேன் நான்

முகமற்றிருக்கின்றன காலமும் காற்றும் நானும்

ஓய்வற்று வாழ்வை மோகித்தழுகிறது என் பாடல்

மெளனத்தை யாரோ என் மீது பூசி விட்டு போகிறார்கள்

அதை உடைத்து பிரவாகிக்கிறது உள்ளிருந்து உயிர்

வானம் நிறமற்றிருக்கிறது என்னில்

மனதில் எழும் நீளப்பாடல்களில் ஒன்று

நாளை பற்றியதாக இருக்காலாம்

வெற்றுடலை சுமந்தலையும் சலிப்பில்

விறைக்கிறது குதிகால்களில் ஒன்று

நான் என்னும் பிண்டம் தொலையாதிருக்க

சொற்களைத்தேடுகிறேன்

தேடித்தொலையும் விதி இன்னும் கைப்படவில்லை

காலத்தின் முடிவுறாக்கரைகளில்

அங்கொன்றும் இங்கொன்றுமாக சுவடுகள்

சுவர்க்கடிகாரத்தின் முட்களில்

நொடி நொடியாய் கசிகிறது

அள்ள அள்ள தீர்ந்து போகாத கனவு

சிலந்தி பூச்சியை போல காலம்

மிக இயல்பாய் வலைகளை நெய்துகொண்டிருக்கிறது

சிக்கிவிடாதிருக்கும் சூக்குமங்களில்

சிக்கிக்கொண்டிருக்கிறேன் நான்

புதன், 19 ஜனவரி, 2011

தண்ணீர் தேசம்

புதன், 19 ஜனவரி, 2011 0

போரின் தீக்காயங்கள்

இன்னும் ஆறாத எங்கள் தழும்புகளில்

நீரின் காயங்கள் சுடுகிறது

பேயென பெய்கிறது வானம்

மனங்களை ஈட்டியின் கூர்களைக் கொண்டு

குத்திக் கிழிக்கிறது மழைக் கால்கள்

வானம் குளிரில் நடுங்குகிறது

அதன் பொத்தல்களை மூடிவிட

முகில்கள் அலைகின்றன

நீரின்றி அமையாத உலகில் மூழ்கி மூச்சித்திணறுகிறது

எங்கள் இயலாமை

காகிதக்கப்பல் விட மனமற்ற சிறுவர்கள்

தாய்ச்சூட்டில் சுருள்கிறார்கள்

நீ தண்ணீர் தேசத்தை பாத்திருக்கிறாயா ?

மூக்கு முட்ட மூச்சித்திணறியபடி நான் இப்போது பார்க்கிறேன்

மண்ணும் சபித்து மரத்தால் விழுந்த எம்மினத்தை

வானும் சபிக்க மழையேறி மிதிக்கிறது

வீட்டின் பொருட்களையும்

முடிவுற்ற எங்கள் கனவுகளையும் முதுகில் ஏற்றி

ஊரூராய் அலைகிறது வெள்ளம்

உயர்த்தப்பட்ட விளம்பர பலகைகளும்

மின்சார கம்பிகளும் நகரின் இருப்பை காத்துகொண்டிருக்கிறது

பாலின்றி குளிரில் விறைத்த முலைகளை சப்பி

விறைக்கின்றனர் குழந்தைகள்

பெருவெள்ளத்தில் திடுக்கிட்டழுகிறார்கள் பிஞ்சுகள்

காலாவதியான முதியோரின் உடல்சூடு

வெள்ளக்குளிரில் நம்பிக்கையற்ற

தீர்மானம் ஒன்றை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது

தொடர்பற்று துண்டிக்கப்பட்ட நீர் வெளிகளில்

நாளைக்காய்ப் பிராத்திக்கிறார்கள் மக்கள்

எந்த சலனமும் அற்று தூறுகிறது வானம்

குளங்களை உடைக்கிறது நீரின் போர்க்குணம்

பல மடங்கு விலை உயர்வில் கிடைக்காத உணவு பொருட்களை

எண்ணி விம்முகிறது ஏழைகளின் மனது

உயிர் காக்கும் நீர் ஊன் அழித்துப் பாய்கிறது

ஈரத்தரைகளில் மூட்ட மூட்ட அணைகிறது நெருப்பு

முதுகில் பொருட்களை ஏற்றும் பெருவெள்ளம்

பிணங்களையும் சுமக்கிறது

இருப்பதை அவிக்க ஒரு வேளை மட்டும் நிறையும் வயிறு

எப்போதும் மழைக்காக வானம் பார்க்கும் கண்கள்

இப்போது தொலைந்த சூரியனை தேடுகின்றன

மிக இயல்பாய் காட்சியளிக்கிறது தண்ணீர் தேசம்

எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல்

எப்போதும் போலவே

அதன் பாட்டில் பெய்கிறது மழை

செவ்வாய், 4 ஜனவரி, 2011

காதலி எழுதிய கடிதங்கள் - 1

செவ்வாய், 4 ஜனவரி, 2011 0


என்னில் எல்லாமாகிவிட்ட காதலனுக்கு

வாழ்வு இற்று விட்ட பின்னும்

நீ இருக்கின்றாய் என்னும்

என்னுயிரை மீட்டுதருகின்ற செய்தி ஒன்றுக்காய்

இன்னும் செத்துவிடாமல் இருக்கும்

காதலி எழுதிக்கொள்வது

தீப்பிளம்ப்பாய் சுடுகின்ற ஒவ்வரு நிமிடங்களில்

ஓங்கியழ உரமுமின்றி உன்னினைவில் ஊனுருகி

உன்னுருவம் கண்களிலே மறையாதிருக்க என்று

தூங்காது விழித்திருக்கும் என்விதியை அறிவாயா

எதை நினைத்து அழுவதென்று

கண்களுக்கு தெரியவில்லை

எங்கென்று தெரியாதா எந்தன் தம்பிக்கா

தாலியிட்ட கணவனின்னும் மீண்டுவரா பெருவலியில்

துடித்தழும் என் அக்காக்கா

இத்தனைக்கும் மேலாக என்னுயிரென்று ஆகிவிட்டு

இன்னும் மீழாமல் இருக்கின்ற உந்தனுக்கா

இத்தனைக்கும் அழுதழுது கண்கள் இன்னும் ஓயவில்லை

ஆறாத பெருவலியில் அடிமனது துடித்தாலும்

மாறாத உன் நினைவே இன்னும் எனை

உயிர் வாழ வைக்குதடா

போர் கொண்டு போய்விட்ட என்வாழ்வின் நின்மதியை

நீவந்து தருவாயா என்று மனம் ஏங்குதடா

எங்கோ நீ இருக்கின்றாய்

என்னினைவில் துடிக்கின்றாய்

மீண்டு வந்தென்னை மார்பு தழுவி விட

மனம் ஏங்கி தவிக்கின்றாய்

என்றெல்லாம் அடிமனது எனக்குள்ளே

உரைக்கின்ற ஒன்றில்தான்

இன்னும் இந்த பிச்சை உயிர்

என்னில் ஒட்டிகிடக்கிறது

காற்றோடு கலந்துவிட்ட

உன் மூச்சுக்காற்றுத்தான் எதோ எந்தனுக்கு

தைரியத்தை கொடுக்கிறது

சனி, 1 ஜனவரி, 2011

காலத்தைத் தோற்றவனின் சாட்சியங்கள் 1

சனி, 1 ஜனவரி, 2011 0

காலம் என்னை தனது கூண்டில் நிறுத்தி

சாட்சியத்தைத் திணிக்கிறது

எனது கண்ணீர் பகிர்ந்தளிக்கப்படுகிறது

இது என்னினத்தின் முதுமைகளின் பங்கு

மழைவிட்ட பின்பு இலையில் தொங்கிக்கொண்டிருக்கும்

மழைத்துளி ஒன்றின் கடைசி நம்பிக்கையாய்

கூன் விழுந்து குருடு தட்டிய காலத்திலும்

விடுதலைக்காக காத்திருந்த தாத்தாக்களே பாட்டிகளே

இன்று உங்களுக்காக அழுகிறேன்

நீங்கள் வடித்த முதுமைக் கண்ணீர்

என்னை சுடுகிறது என்னை சபிக்காதீர்கள்

கழியாமல் இருக்கும்

என் மீதிக்காலத்திற்காக பிராத்தியுங்கள்

நீங்கள் துணியாத ஒன்றிற்காக நாங்கள் துணிந்தோம்

உங்கள் தவறுகளைச் சரி செய்வதாகவும் அது இருந்தது

உங்கள் பிள்ளைகளும் பேரர் பேத்திகளும்

கண்முன்னே வீழ்ந்தபோதெல்லாம்

அவர்களின் ரத்தச்சிவப்பில் விடியலின் வானம்

சிவந்து கருக்கொள்வதாய் தேற்றிக்கொண்டீர்கள்

அடிமைக்காற்றில் அழுக்காகிப்போன

உங்கள் சுவாசப்பையை உயிர் அகலும் காலத்துள்

ஒருநொடிப் பொழுதேனும்

சுதந்திரக்காற்றை மூச்சுமுட்ட உள்ளிழுத்து

கறைச்சுவரை கழுவி விட

நீங்கள் காத்திருந்ததில் நியாயமிருக்கிறது

உங்களில் விழுந்திருக்கும்

நிமிர்த்தமுடியாத கூனைப்போலவே இருந்தது

எங்கள் விடுதலை

இருந்தும் தியாகத்தை சொரிந்தோம்

ரவைக்கூடுகள் காலியாகும் வரை இருந்தது

எங்களின் நெடும் பயணம்

யாரிடமும் கையேந்தாத வைராக்கியத்தை

பாலுடன் ஊட்டியது நீங்கள்

அதனால்தான் எங்கள் விடுதலை கையேந்தாதிருந்தது

எம்மில் விழுந்திருக்கும் போரின் காயங்களை விட

உங்களில் விழுந்த வாழ்வின் காயங்கள் வலியதுதான்

ஊரிழந்து மனையிழந்து கூடாரம் ஒன்றிற்குள்

சுருண்டு படுத்தபடி நீங்கள் விடும்

பெருமூச்சின் வெம்தணலில் அநீதி கருகட்டும்

ஊர்செல்லும் காலத்தை எதிர்பார்த்து எதிர்பார்த்து

உயிர் பிரிந்து சென்று விட்ட உங்களைப்போன்ற

மூப்புற்ற ஆன்மாக்களின் பரிதாபமே

அடி நெஞ்சில் கனக்கிறது

எங்களின் முதுமை எங்கள் மகன்களிடம்

கண்ணீரை பரிசளிக்கக் கூடாது என்பதற்காகவே

இத்தனை பாடுபட்டோம்

உங்கள் முதுமை எம்மை மன்னிக்கட்டும்

நாங்கள் மனிதர்களிடம் தோற்கவில்லை

காலத்திடம் தோற்றோம்

எங்கள் தோல்வி

எங்களின் இயலாமைகளில் இருக்கவில்லை

காலத்தின் இயலுமைகளில் இருந்தது



 
◄Design by Pocket