இருத்தல் என் சுதந்திரம்

திங்கள், 21 நவம்பர், 2011

விடுதலை ஒரு இனத்தின் கனவு

திங்கள், 21 நவம்பர், 2011 0

அகமும் முகமும் புதைந்த

உருவற்ற வெளியின் சிதைவுகளில்

எனக்கான விடுதலையையும்

எனக்கான சுதந்திரத்தையும்

பாடல்களில் இசைக்கிறேன்

பேய்கள் சிதைத்த நிலத்திலிருந்தும்

கொலையுண்ட கல்லறைகளிலிருந்தும்

எனது பிரகடனத்தின் சொற்கள் எழுகின்றன

துரத்தப்பட்ட ஊரின் குழந்தைகள்

அந்தச்சொற்களை உச்சரிக்கிறார்கள்

கசிகின்ற முதுகண்களில்

அந்த சொற்கள் உறைகின்றன

எரிந்த நிலமெங்கிலும் அலைவுறும் ஆன்மாக்கள்

இன்னுமின்னுமாய் அதே சொற்களை ஆர்ப்பரிக்கின்றன

நிலமெங்கிலும் பேய்கள் பெருநடம் புரிகையில்

பசியில் அலையும் கொடுமிருகம்

மண்ணை தின்னத்தின்ன

மரத்தில் இருந்தும் மலைமுகட்டில் இருந்தும்

எனது சொற்கள் உதிர்கின்றன

மூடப்பட்ட பதுங்கு குழிகளுள்

மூடாது விரிந்த விழிகளின் பார்வை

உறையும் புள்ளிகளெங்கிலும்

விடுதலையின் சொற்கள் அழுகின்ற சத்தத்தில்

குழந்தைகள் அரண்டெழுகிறார்கள்

விடுதலை பிரபஞ்சத்தை உடைக்கிறது

விடுதலை கண்ணீரிலும் உதிரத்திலும்

உயிர்க்கிறது

விடுதலை ஒரு இனத்தின் கனவு

விடுதலை உடைத்துயரும் வீரத்தின் விலை

விடுதலை ஆனந்தத்தின் உச்சம்

விடுதலை ஆன்மாவின் யாத்திரை

விடுதலை ஒரு அறைகூவல்

விடுதலை எப்போதும் அடுக்கப்பட்ட

முன்னோர்களின் சிதைகளிலிருந்தே

எழுவதாயிருக்கிறது

வெள்ளி, 4 நவம்பர், 2011

குழி பூக்கும் காலம்

வெள்ளி, 4 நவம்பர், 2011 0

கொட்டும் மழையில்

கொல்லப்பட்ட நிலமெங்கிலும்

உயிர்க்குழிகள் பூக்கத் தொடங்கையில்

ஆர்ப்பரிப்பற்ற அகழ் வெளியில்

புதைந்த கனவுகளின் வியர்வை

மண்ணில் கசிகிறது

மானம் நிறைந்து குழியில் முளைத்த

காவல் சிலைகள்

நொருங்கிச் சிதறிய துண்டங்கள்

மண்ணில் வீழ்ந்து துடித்த தருணத்தில்

பார்க்க வராத அம்மாவைப் பற்றியும்

பழகி மறந்த உறவைப் பற்றியும்

புலம்பும் வாயின் சொற்கள் உறைந்த

ஆழ் நிலத்தில்

உனதும் எனதும் முகங்களைச் சுமந்து

அவர்கள் அலைகிறார்கள்

உன்னையும் என்னையும் பற்றியே

அவர்கள் பேசிக் கொள்கிறார்கள்

சமுத்திரம் உதைக்கும் அலைகள் அள்ளி வரும்

அவர்களின் குளிர்ந்த சொற்கள் நம்மைப்பற்றியதே

புள்ளி தொடாத கோடுகளோடு

நிலத்தின் அடியில் உலவும் அவர்களிடம்

எனதும் உனதும் மீதிக்கதைகளை

யாருரைப்பர்

அடக்கம் செய்யப்படாடாத நமது கல்லறைகளை

எவ்வாறறிவர்

நம் நிச்சயமற்ற வெளிகளை யார் காட்டுவர்

நாறும் நம் சொற்களை அவர்கள் கேட்காதிருக்கட்டும்

நிலத்தின் காயங்கள் மனமெங்கும் குழியாய் எழ

சீழ் படிந்த நம் காயங்களில் கழுகுகள் பசியாறுமுன்

பூக்களற்ற கைகளோடு பறிக்கப்பட்ட

இடர் நிலத்தைக் கடந்து சென்று

வா குழிப்பூக்களைப் பறித்து

தலையில் சூடிக்கொள்வோம்

ஞாயிறு, 30 அக்டோபர், 2011

பொய்யெனப் பெய்யும் மழை

ஞாயிறு, 30 அக்டோபர், 2011 0

வானத்தின் விழுதுகள்

நிலத்தில் பெருக்கெடுக்கும் இரவுகளில்

இமைகள் துமிக்கும் சிறு நீரினூடே

பொரித்தூரும் கனவுக் குஞ்சுகள்

கன்னத்தில் கறுத்த மயிர்த் திரளில்

கோடாய் குழிகளில் நிறைகிறது

அக்கினிப் பிரவேசத்தில் இருந்து

சீதை இன்னும் மீண்டுவர வில்லை

சிலம்போடு போன கோவலன் தேடப் படுகிறான்

தாலி அறுக்கப் பட்ட பின்னும்

கண்ணகியின் முலைகளில் நெருப்பு

உருப்படாமல் இருக்கிறது

வீதிவிடங்கன் கொன்ற கன்றின் பசு

வாயில் மணியைத் தேடித் தொலைகிறது

ஒரு சுற்றில் அவிழ்க்கப்பட்ட அம்மணத்தோடு

பாஞ்சாலி மீட்கப்படாத பணயத்தில் இருக்கிறாள்

இராமனின் வனவாசத்தில்

நடுகல்லில் உறைந்த அகலிகை

உடைக்கப் பட்டாள்

அத்தினா புரம் திருடப் பட்ட பின்

பாண்டவர் இந்திரப்பிரசத்தை இன்னும் ஏற்கவில்லை

காண்டீபத்தில் கழுகமரும்படி

கண்ணனற்ற தேரில் அர்ச்சுணன் அம்பற்றிருக்கிறான்

மூன்றாம் குலோத்துங்கன்

துறவுக்குகச் சென்றபின்பு

போதிமர முனிவர் நிலங்களை அள்ளுகிறார்

அரிச்சந்திரன் இன்னும் உண்மை சொல்ல வில்லை

பாரி கொடுத்த தேரில் முட் கம்பிகள் படர்கின்றன

ஒரு இனத்தின் தசைகளில் நிரம்பியும்

இன்னும் உயராத சிபியின் தராசில்

கல்லறைகள் குவிகிறது

ஆறு நாள் பெய்த ஓயாத பெருமழையில்

புழுதி படிந்த என் அகதிக் கூடாரம் இன்னும்

சகதியாகவில்லை

திங்கள், 24 அக்டோபர், 2011

இல்லாத போது இருக்கின்ற தேச வெளி

திங்கள், 24 அக்டோபர், 2011 0

நிலாவில் பாட்டி ஒருத்தி

வடை சுட்டுக்கொண்டிருந்த போது

அம்மா எனக்கான பாடலை

இசைத்துக்கொண்டிருந்தாள்

நிறங்களில் நிரம்பிய வெளியெங்கிலும்

நான் மிதந்தேன்

குளங்களில் எனது தூண்டில்கள்

அந்தப் பாடலை இசைத்தன

வாலறுந்து வீழ்ந்த எனது பட்டம்

அதே பாடலையே இசைத்தது

ஆலையிலே சோலையிலே

ஆலம் பாடிச் சந்தையிலே

கிட்டியும் புள்ளும் கிறுகியடிக்க

பாலாறு…. பாலாறு……

என்று தோழர்கள் வாய் விரிய கூவிய பாடலில்

நிலம் அசைந்தது

நான் தோழர்களின் பாடலிலிருந்தேன்

வடை சுட்ட பாட்டி சுடப்பட்ட போது

பாட்டி இறந்து கிடந்தாள்

காகமும் நரியும்

அவளின் பாடலை இசைத்தன

நான் காகத்தின் பாடலிலிருந்தேன்

வீதியில் மரணம் நிரம்பி மலிந்த நாட்களில்

பலர் பாடினர்

பாரதியின் சிட்டுக் குருவியின்

பாடலைப் போல

விடு…. விடு…. என்று அவர்கள் பாடினர்

வெடிச்சத்தங்களையும் மரணங்களையும் கிழித்து

காற்றில் உலவிய அந்தப் பாடல்களை

நான் கேட்ட போது

அம்மா பாடாதிருந்தாள்

ஆலையும் சோலையும் தோழர்களற்றிருந்தது

நான் தூண்டிலின் பாடகனாகவும்

தோழர்களின் பாடகனாகவும் இல்லாதிருந்தேன்

இரவுகள் ஆட்காட்டிப் பறைவையின் பாடலின்

நிறையும் தருணங்களில்

நான் காதலின் பாடகன்

நிலமும் வானும் நிறமற்ற பொழுதில்

இசையற்ற என் சொற்கள் வாழ்வின் ஆசையை

பிரகடனப் படுத்தின

நான் இனத்தின் பாடகனாய் இருந்த போது

காதலின் பாடகனாய் இல்லாதிருந்தேன்

நிலத்தின் பாடகனாய் இருந்த போது

நிலம் என்னிடம் இல்லாதிருந்தது

தேசத்தின் பாடகனாய் இருந்த போது

நான் இல்லாதிருந்தேன்

இருக்கின்ற போது இல்லாத என்னை

இல்லாத போது இருக்கிற என்னை

நாள் முழுக்க அலுக்காத ஓர் காகம்

அதன் கரிய சொண்டுகளில் தினமும்

எனக்கான அதன் பாடலை பாடிச் செல்கிறது

என்னைப் போல் புரியாத அதன் மொழியில்

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

காறி உமிழ அற்ற நிலம்

ஞாயிறு, 16 அக்டோபர், 2011 0


வெடித்தலறும் துப்பாக்கிகள்

மூச்சடங்கிப் போன எனது தேசத்தில்

மரணம் அடங்காது அலைகிறது

வாய்களை அகலத்திறந்து ஒரு பூனை போல

சத்தமின்றி கால் வைத்து

மரணம் இன்னும் அலைகிறது

கணக்கிட முடியா சனத்திரளை

தன் பேய்க்கரத்தால் கிழித்த பின்னும்

பெரு வயிறு அடங்காப் பசியில்

நிலங்களையும் அது விழுங்குகிறது

திருடப்பட்ட நிலத்தின் சனங்கள் மீது

மரணத்தின் குங்சுகள் ஊர்கின்றன

பறித்த நிலத்தை அவாவும் அப்பழுக்கற்ற

அப்பாவிக் குரல்கள்

அதிகாரக் கால்களில் மிதிபட்டு இறஞ்சுகின்றன

நிலத்தை உச்சரிக்க முடியாது அச்சுறுத்தும் கட்டளைகளில்

தளரும் சொற்கள் உறைகின்ற வெளியில்

மரணம் இன்னும் அலைகிறது

மண்ணை உதட்டில் சுமந்து மூச்சிழந்த

முதுமக்களின் ஆவிகளில் வெளி கனத்தசைய

வருடங்களைச் சுமந்த அகதிக்கொட்டில்களின் தாழ்வாரங்களில்

குழந்தைகள் தோண்டும் குழிகளில் கனவுகள் நிறைகின்றன

அதிகாரத்தின் கைகளால் மிக இலகுவாக

நிலங்களை அள்ள முடிகிறது

அதிகாரத்தின் சொற்களால் ஓரிரு வார்த்தைகளில்

காரணம் சொல்ல முடிகிறது

பாட்டனின் சொத்துக்களைப் புதைத்தும்

பரம்பரைகளை சிதைத்தும்

உரிமைக் காகிதங்களைக் கிழித்தும்

சொல்கின்ற இடங்களில் குந்த வைக்க

அதிகாரத்தால் மிக இலகுவாக முடிகிறது

எனது தேசம் தமிழ் நிலங்களை மட்டுமே

தன் அபிவிருத்திக்கு பிரியம் கொள்கிறது

எனது நிலத்தில் எரியும் நிலக்கரிதான்

மின்சக்தியை அழிக்கக்கூடும்

எனது மண்ணில் மட்டுமே

தொழிற்சாலைகள் முளைக்கலாம்

எனது பாட்டன் நடந்த தெருக்கள்தான் சித்தாத்தன்

அமர சௌகரியமானவை

அனாதைக் குலத்தின் மீது ஆக்ரோசமாய் படரும்

கொடிய காலகள் ஓய்ந்தபாடில்லை

தடுப்பற்ற வெளியெங்கிலும் நீளும்

போதி மரத்தின் வேர்கள்

விசப்பற்களோடு பாம்பாய்த் துரத்துகிறது

படுத்துறங்க பிடிநிலத்தை

பிச்சை கேட்கும் சனங்களின் சத்தத்தை

முள் வேலிகளுக்குள் அடைத்து எச்சரிக்கும் தேசத்தில்

மரணம் இன்னும் அலைகிறது

என்னினத்தில் இங்கொன்றாய் அங்கொன்றாய்

மீந்திருக்கும் சனங்கள் செத்தொளிந்து

வாய்க்குழிக்குள் ஊறுகின்ற தமிழ் எச்சில் ஒரு துளியை

காறி உமிழ நிலமில்லை என்னும்

காலம் உருப்பட்டால் உலகம் சிலவேளை

எனக்கான சுதந்திரத்தை

பிரகடனப்படுத்தக் கூடும்

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

நதிகளிறங்கும் காலம்

ஞாயிறு, 9 அக்டோபர், 2011 0

உயிருகி நீராய் உருப்பட்டு

ஓர் நாளில் என் நதிகள் இறங்கும்

எரிமலையின் சீற்றமாய் இருக்கும்

முகடொன்றில் அது புறப்படலாம்

விறு விறுவென வீரியத்துடன்

கூர்ப்பாறைகள் சிதைய

மஞ்சள் நீலம் பச்சை சிவப்பாய்

என் நதிகள் இறங்கும்

நானும் இறங்குவேன்

இருண்ட சிலுவையிலிருந்தும்

இடித்த சிறைகளிலிருந்தும்

நான் இறங்கும் போது

நீயும் இறங்கிக்கொள்

மண் அணைகளையும் முட்கம்பிகளையும்

நான் உடைக்கும் போது

நீயும் உடைத்துக் கொள்

இறங்கும் நம் நதியில்

அழுகிப்போன எமது மானத்தை

கழுவுவிக் கொள்வோம்

உந்தி வீழும் நதியில்

நிலம் பிளக்கும் குருத்து மணல் பாயும்

நிலப் பிளவுகளிலிருந்து

நம் தொன்மத்தையும்

மூதாதயரின் சொற்களையும் கல்லறைகளையும்

நான் பொறுக்குவேன்

நீயும் பொறுக்கிக் கொள்

நிலத்தில் அடியில் உறைந்து போன

ஓர் தேசிய கீதம் துடித்துக்கொண்டிருக்கும்

அதையும் அள்ளியெடு

விறு விறுவென நதியிறங்கும் காலத்தில்

சிலுவையிலிருந்தும் சிறைகளிலிருந்தும்

நான் இறங்குவேன்

மறக்காது நீயும் இறங்கிக்கொள்

திங்கள், 3 அக்டோபர், 2011

நிலத்தில் முளைக்கும் சொற்கள்

திங்கள், 3 அக்டோபர், 2011 0

இருள் கசியும் போர்வையின் சந்துகளில் சயனிக்கும்

மூச்சின் வெற்றிடமற்ற வெளியெங்கிலும்

நரைத்துப்போன கனவுகள் முளைத்து முகைக்கின்றன

அழுதூற்றியயர்ந்த கண்களில்

அரைத்தூக்கம் கவியும் தருணத்தை அணைத்து

புலம்பும் குரல்களில் நிலம் அசைகிறது

மண்ணைச் சுமந்த அவர்களின் நெஞ்சில்

திண்மித்த கனவுகள் எரியும் வெளிச்சத்தில்

தெற்கில் ஒருவன் பிரகாசிக்கிறான்

கூட்டில் தவறிய குஞ்சொன்று தன் சொண்டில்

நிலத்தை கிளறுகிறது

உதிரும் அதன் பிஞ்சிறகில் வாழ்வின் ஆசையை

அள்ளுகிறேன்

மழை சுடும் இவ்விரவில்

பூஞ்செடி நட தாயிடம் முற்றம் கேட்ட சாரு

உறங்கியிருப்பாள்

தாயிடம் முற்றமில்லை முகமுமில்லை

சாரு அதை எங்கு நட்டிருப்பாள் ?

நட்டுவைக்க முற்றமின்றி அவள் அணைத்துறங்கும்

செடியின் வேர் என்னைப் படர்கிறது

பிடி மண் மீதான அவளின் கோரிக்கையின் அழுகுரல்

என் வெட்கத்தைக் குடைகிறது

பறிக்கப்படாத சொற்கள் உசுப்பிவிட்டுப் போகும்

தொகை வலியில்

நான் நானற்றிருக்கிறேன்

நிலம் என்னுள் கனவுகளை உதிர்க்கிறது

நிலம் என்னை கோபத்தோடு அலைவிக்கிறது

நிலமே என்னை அழுகிறது

நிலமே என்னை நிரப்புகிறது

நிலத்தில் மட்டுமே என் சொற்கள் முளைக்கின்றன

நிலத்தில் மட்டுமே நான் குவிகிறேன்

நிலம் என்னுள் வாழ்கிறது

நிலம் என்னைக் கொல்கிறது

நிலம் அரட்டும் தூக்கத்தில் இருந்து விழிக்கிறேன்

நிலவும் நட்சத்திரங்களும் எரியும் இரவில்

மூர்க்கத்தைச் சுமந்து முறுவலித்த என் பார்வையில்

பிரபஞ்சம் எரிவதாயில்லை

 
◄Design by Pocket