இருத்தல் என் சுதந்திரம்

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

தொலை தேசத்து தோழனுடன் உரையாடுதல்

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

காதல் கசிவுகள் அற்று

பிரியத்தின் நிழலும் படராத

நெருஞ்சி வெளியென்றிருக்கும் என்னில்

நேசிப்புக்குரியவனாகிக் கொண்டிருக்கும்

தூர தேச நண்பனே

பருவகாலப் பெயர்வில் வந்தமரும்

பெயரறியாப் பறவையைப்போல அனுமதியற்று

என்னில் கூடு கட்டியிருக்கிறாய்

தூர்ந்து போன என் தெருக்களை

திரும்பிப்பார்க்கிறேன்

நீ முளைதுக்கொண்டிருக்கிறாய்

நம் தொடர்புக்கான அசாத்தியங்களின்

ஆயிரத்தெட்டுக் காரணங்களுக்குள்ளும்

என்னிலும் உன்னிலும் ஓடுகின்ற

ஏதோ ஒரு இழைக்கயிறு

நம்மை பின்னிக்கொண்டிருக்கிறது

நீ என் நம்பிக்கைக்குரியவனாகி விட்ட பிறகு

உன்னிடம் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள

மனதின் ஆழத்தில் கிடக்கிறது ஆயிரம் கதைகள்

நீ எனக்கும் சேர்த்தே தோற்றாய்

எனது தோல்வியும் உனக்கும் சேர்த்தே இருந்தது

நமது தேசம் இன்னும் மாறவில்லை நண்பா

நீ விட்டுச்சென்றதைப் போலவே

இன்னும் இருக்கிறது

சில விரும்பத்தகாத ஏற்பாடுகளுடன்

நம் தெருக்கள் நீ நினைப்பது போலில்லை

நாய்கள் அடங்கும் சத்தத்தில் இருந்து

இன்னும் அவை மீளவில்லை

வெளியில் ஓய்ந்துவிட்ட சத்தங்கள்

மனதில் ஆர்ப்பரிக்கத்தொடங்கியிருக்கிறது

வெளி உடலில் சாவதிலும் கொடியது நண்பா

மனதால் செத்துக்கொண்டிருப்பது

நிலாக்காலத்தில் கைவீசி நடந்த தெருக்கள்

தொலைந்துவிட்டதாய் உணர்கிறேன்

தூரிகையற்ற ஓவியனைப்போல

வெற்றுத்தாள்களில்

என்னை பிரதி செய்ய முயல்கிறேன்

கற்பனைகள் சிதைய சிதைய

தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு

மீண்டும் கோட்டைகளைக் கட்டுவதில்

மனம் வசப்பட்டிருக்கிறது

உண்பது உறங்குவது இவையே

இன்னும் பறிபோகாமல் இருக்கிறது

எனது தேவதைக்கிராமம் செம்மண் வீதி

மூச்செறிந்து இளைப்பாறும் முற்றம்

என எல்லாம் தொலைந்தாயிற்று

முன்பிருந்தவற்றில் எதுவுமில்லை நண்பா

நீச்சலடித்த வில்லுக் குளம்

தூண்டல் மீன் பிடித்த தோணாப்பாலம்

காதல் தேடும் காளி கோயில்

இப்படி எதுவுமில்லை

உன்னைப் போலவே பரிச்சயமாகிவிட்ட

தோழி ஒருத்தி

நான் புண்ணியம் செய்த நாட்டில் வாழ்வதாய்

என்னை பரிகசிக்கிறாள்

என் இருத்தல் விருப்பத்தெரிவுகள் அற்றது என்பதை

அவளிடம் எப்படி புரியவைக்க

பார்த்தாயா நண்பா

நீ நினைத்தது போல் எதுவுமில்லை

நீ இன்னொரு தேசத்தில் இருந்து

உன் தேசத்தை எண்ணி அழுகிறாய்

நான் எனது தேசத்தில் இருந்தே

அதை எண்ணி அழுகிறேன்

அன்னியக்காற்றை சுவாசிப்பதாய்

நீ இன்னொரு தேசத்தில் இருந்து குறுகுறுக்கிறாய்

நான் எனது தேசத்தில் இருந்து கொண்டே

அப்படி உணர்கிறேன்

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket