இருத்தல் என் சுதந்திரம்

சனி, 30 ஏப்ரல், 2011

கனவடையும் குழந்தைகள்

சனி, 30 ஏப்ரல், 2011

நிழலற்றலையும் காற்றில்

தீயூறித் திரண்ட கனவுத் திரள்

முட்டியலையும் வெளியில்

அவலக் குரல்களின் சூட்டில்

அதிகாலை புலர்கிறது

நினைவுருண்டைகள் உரசும்

புலர்பொழுதொன்றிலிருந்து

இடைவிடாத் தருணங்களில்

இசைத்தெழும் பாடலொன்றில்

நிரம்பாக் கனவுகளை யாரோ

அள்ளிச் செல்கிறார்கள்

அவாவித்தழும் குழந்தைகள்

அள்ளுண்ட கனவுகளிலிருந்து

சுதந்திரத்தைக் கேட்கிறார்கள்

ஆமோத்தித்தலையும் ஆன்மாக்களின்

குரல்களில் உறங்கும் குழந்தைகளின் மீது

கும்மிச் சரிந்து படிகிறது வல்லிருள்

முன்பொரு நாளில்

நரத்துக்கலையும் மரணம் குந்தியிருந்த

சந்துகளிலும் முட்புதர்களிலும்

தொங்கும் வாழ்வின் சிதிலங்களில்

களைப்பற்றுறங்கும் மனிதர்களின் சுவாசம்

பெருந்தீயெனச் சுடுகிறது

உய்த்துணராப் பெருவலியில்

பனித்தெழும் எனது பாடலில்

சுவர்க்கோழிகள் துனுக்குற்றெழுகின்றன

கொலை வெளியில் கனத்துயிர்க்கும்

கருணைச்சொற்களைக் கேட்டபடி

மண்ணை இன்னும் இறுக்கமாய் பிசைகிறார்கள்

எனது குழந்தைகள்

காலச் சல்லடையில் எல்லாமும் சொரிந்துவிட

இன்னும் ஏதோ ஒன்றுக்காய்

சொரியாதிருக்கிறேன் எனது குழந்தைகளுடன்

போர்வையற்றுறங்கும் குழந்தைகளின் முகங்களில்

காலம் தன்னியல்பில் என்னைப் பூசுகிறது

2 comments:

வளத்தூர் தி.ராஜேஷ் சொன்னது…

//தொங்கும் வாழ்வின் சிதிலங்களில்

களைப்பற்றுறங்கும் மனிதர்களின் சுவாசம்

பெருந்தீயெனச் சுடுகிறது//

நண்பரே மிகவும் அருமை.

Rathnavel Natarajan சொன்னது…

அருமையான கவிதை.
முகப்பு படம் ஓவியமா? புகைப்படமா?
வாழ்த்துக்கள்.

கருத்துரையிடுக

 
◄Design by Pocket