இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 7 அக்டோபர், 2010

விளக்குகள் எரியாத நகரம்

வியாழன், 7 அக்டோபர், 2010
பனை வடலிகளில் கூட
விளக்குகள் எரியும் நகரம்
கும் இருட்டில்
குருட்டு விளக்கும் இல்லாது
சுருண்டு விடுகிறது இரவுகளில்…

திராட்சைகள் தொங்;கும்
தெருக்களில்
தெரு நாய்களைத் தவிர
வேறொன்றும் இல்லை
சுப்பிர வாதம் சொல்லும்
அதிகாலைப் பொழுதுகள்
முகாரி ராகங்களை மட்டுமே
ஒலிபரப்புச் செய்கிறது…….

திருமண ஊர்வலம் செல்லும்
ஊர்திகள்
பிணங்களை மட்டுமே காவிச் செல்கிறது
கல்விக் கூடங்களில்
கவிதைகள்
இரங்கலுக்காக மட்டுமே….

ஊரடங்கில்
உறைந்து போகும் நகரத்தில்
ஆந்தைகள் மட்டுமே
விளித்துக் கொள்கின்றன
அதிகாலையிலையே
திறந்து வைக்கப் படுகிறது
எப்போதும் காலியாகும்
சவப் பெட்டிக் கடை

சதைகள் சன்மானமாய்க் கிடைக்கும்
அந்த நகரத்தை நோக்கியே
பருந்துகள்
பயணம் செய்கின்றன

திரும்புகிற பக்கமெல்லாம்
பிணங்ஙள்…..பிணங்கள்….
வயது பால் வேறுபாடின்றி

விளக்குகள்
எரியாத நகரத்தில்
சுடலையில் மட்டுமே
எப்போதும் எரிகிறது நெருப்பு

இப்போது
அழகாக இசையெழுப்பும்
“யாழில்”
ஓசையுமில்லை.....நாதமும் எழவில்லை......

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket