இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 30 டிசம்பர், 2010

பரி நிர்வாணம்

வியாழன், 30 டிசம்பர், 2010

பகல் காட்சிகளைப் புறக்கணித்து

உறங்கும் இரவுகளில்

ஓசைகளற்ற உயிரின் நிசப்தங்களில் ஏறி

வெறிச்சோடிய மனதில் எழும் அதிகாலைக் கனவுகள்

அபத்தங்களைச் சொரிகிறது

மழைக்கோடுகள் மண்ணில் மோதி முறிகின்ற

தடதடக்கும் ஓசையை உதாசினப்படுத்தி உறங்கிய

நேற்றைய அதிகாலையிலும் கனவுக்குள் சஞ்சரித்திருக்கிறேன்

சிவப்பு நிறத்திலான இலைகளையுடைய

போதி மரத்தின் கீழ் சீடர்கள் புடை சூழ

சித்தார்த்தனுடன் இருந்தேன் இல்லையெனில்

அங்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறேன்

யாரும் சொற்களற்றிருந்தோம்

சீடர்கள் குருவின் குற்றேவலுக்குக் காத்திருந்தார்கள்

சித்தார்த்தன் உபதேசிக்கத் தொடங்கினான்

பஞ்சமா பாதகம் பற்றியதாகவே அது இருந்திருக்க வேண்டும்

காமத்தை ஒழி என்ற சித்தார்த்தனின் கருத்துக்களுக்கிடையே

வன் புணர்ச்சியில் ஒரு பெண் கதறிக்கொண்டிருந்தாள்

சீடர்களில் ஒருவன் இடையில் எழுந்து சென்றிருந்தான்

சிவப்பு நிறத்திலான போதிமரத்தின் இலைகள்

என் மடிமீது சொரிந்து கொண்டிருந்தது

சித்தார்த்தனின் நீண்ட பிரசங்கம்

பரி நிர்வாணம் பற்றியதாக அமைந்தது

உபதேசத்தின் முடிவில் சீடர்கள் என் ஆடைகளை

உரிந்தனர்

கைகளையும் கண்களையும் கட்டினர்

பரி நிர்வாணம் அடைந்தேன்

அப்போது சித்தார்த்தன் கொல்லாமை பற்றி

உபதேசிக்கத் தொடங்கியிருந்தான்

இலைகளெல்லாம் சொரிந்து விட பரி நிர்வாணமாகியது

போதிமரம்

கனவில் தப்பி விழித்தெழுந்தேன்

காலை ஒன்றுக்காக ஆடைகளை அவிழ்த்து

பரி நிர்வாணத்திற்குள் மூழ்கிக்கொண்டிருந்தது இரவும்.

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket