இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 30 டிசம்பர், 2010

நான் உனக்காக மட்டுமே அழுகிறேன்

வியாழன், 30 டிசம்பர், 2010

மழைக்காக தவளைகள் அழுகின்றன

அதன் குரல்களில் மரணம் வழிகிறது

அம்மா நீயும் அழுது கொண்டிருக்கிறாய்

மழையில் உறைந்த இரவின் ஆர்ப்பரிப்பை நீவி

எனக்குள் கேட்கிறது உன் குரல்

மழைப்பொழிவை தாங்காத நம் அகதிக்கூடாரம்

அதன் இயலாமையின் ஓட்டைகளால் அழுகிறது

உன்னிடம் இருக்கும் எல்லாப்பாத்திரங்களிலும்

கொட்டில் அழுதூற்றும் கண்ணீரை ஏந்துகிறாய்

உனது கண்ணீரை நான் எந்தப்பாத்திரத்தில் ஏந்த

எருமை மாடுகளுக்கு பிரியமான சகதியை

காலம் நமக்குள் திணித்திருக்கிறது

சேறும் சகதியுமான நம் கூடாரத்துக்குள்ளும்

நீ இரவுக்கான உணவை தயார் செய்கிறாய்

சோற்றில் உப்பாகிக் கலக்கிறது உனது கண்ணீர்

மழைக்காலம் முன்பு போல் என்னை மகிழ்விப்பதில்லை

நடுக்கத்தை விரும்பி ஓடி வந்து இப்போதெல்லாம் நான்

உன் மடியில் சுருண்டு படுப்பதில்லை

அம்மா குளிரிலும் என்னுடல் இப்போது வியர்க்கிறது

நிலத்தில் ஊரும் அட்டைகள் என்னில் ஊர்வதாய்

புளிக்கிறது என்னுடல்

மனம் மட்டும் சிறு கூதல் காற்றிலும்

பூச்சியப்பெறுமானத்தில் உறைந்து சுருழ்கிறது

அம்மா நீ அழுதுகொண்டிருக்கிறாய்

வெளிப்படாத உன் குரல்

தவளைகளின் சத்தத்தை மீறியும் என்னை கொல்கிறது

பறிக்கப்பட்ட உனது நிலத்துக்காகவும்

மழைக்காலம் பறித்த உன் தூக்கத்திற்காகவும்

வானத்தோடு சேர்த்து நீயும்

ஐந்து மார்கழிகள் அழுதுவிட்டாய்

அம்மா நான் உனக்காக மட்டுமே அழுகிறேன்

கண்ணீரற்ற கண்களால்

நிலத்தை பறித்தவன் மீதும்

வீட்டை இடித்தவன் மீதும்

மழையின் மீதும் அழாதே

நீ அழ வேண்டியது என் பொருட்டே

உனது காலத்தை என்னிடமே தந்தாய்

எனது காலம் என்னிடம்

வெறும் சொற்களை மட்டுமே தந்தது

கையாலாகாதவனாய் வாழ்வைக் கரைத்தவனாய்

உனது காலத்தை சுமக்க முடியாத வக்கற்ற வாலிபனாய்

வலி சுமந்து உன் முன்னே நடைப்பிணமாய் திரிகின்ற

எனக்காக இனி அழுவாயா அம்மா

உனது மகனுக்காக மட்டும் இனி அழு

நான் உனக்காக மட்டுமே அழுகிறேன்

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket