இருத்தல் என் சுதந்திரம்

திங்கள், 29 ஆகஸ்ட், 2011

உன் தாத்தாவிடம் ஒரு தாய்நிலம் இருந்தது

திங்கள், 29 ஆகஸ்ட், 2011 0

பறவைகள் அமரும் கிளைகளில்

உறைகின்ற என் விழிகள்

நிலத்தில் முளைக்கின்றன.

ஒரு பைத்தியக்காரனைப் போல

உன்னிடம் என்னைச் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

கரங்களை உயர்த்தி நிலம் கதறியழுத பொழுதில்

உயிர் மூட்டையைச் சுமந்துகொண்டு

தலைகால் புரியாது உன் நிலத்தைப் பிரிந்து

நீ என்றேனும் ஓடியிருக்கிறாயா?

நான் ஓடியிருக்கிறேன்.

நட்ட மாமரம் குலையாய் காய்க்கும் முன்

தங்கை அடுப்பில் வைத்த மண்சோற்றை இறக்க முன்

வாழ்வின் ஆசையை கைகளில் அள்ளிக்கொண்டு

நான் ஓடியிருக்கிறேன்.

ஒரு தமிழனாக நானிருந்த காலத்தில் அது நிகழ்ந்திருப்பின்

நீ அப்போது கர்ப்பத்தில் இருந்திருப்பாய்.

முன்பொருகாலத்தில் எனக்கென்றொரு

தாய் நிலம் இருந்தது.

எனது சிறுவர்கள் முற்றத்தை தோண்டினர்.

அன்று எங்களிடம் முற்றமுமிருந்தது.

வாரியள்ளிய நிலத்தை போர்வையென

நான் பூசிக்கொண்ட நாளில்

நிலம் என்னைப் புன்னகைத்தது.

என் கனவுகள் இன்றெனது மண்ணில்

மேடாகிக் குவிந்திருக்கும்

சாலை விழிகள் என் வருகை தோற்று

பூத்திருக்கும்

முட்கம்பிகளால் எனது நிலத்தைக் கொள்ளையடித்தவர்களிடம்

புனித நிலம் அழுகுரலை உயர்த்தி

என் பிரியத்தைப் பகிர்ந்திருக்கும்.

இப்படி நீ என்றேனும் உனது நிலத்தை நேசித்திருக்கிறாயா?

என்னைப் போல் நீயும் நேசித்தாக வேண்டுகிறேன்

ஒரு மரத்தைப் போல

கால்களை மண்ணில் புதைத்துக் கொண்டு

உரக்கக் கூவி சூரியனைப் பார்த்தபடி

யுகம் ஒன்று தீரும் வரை வாழ்ந்து

தாய் நிலத்தில் கரையத்துடித்த என் விருப்பை

மறவாது உன் காலத்திடம் பகிர்வாயா?

எனது சார்பில் உனக்கிது உரைக்கின்றேன்

உனக்கென்றொரு நிலம், மண்தோண்ட ஒரு முற்றம்

உனது காற்று, நீ உரத்துப்பேச ஒரு வெளி

இன்ன பிறவும் நீ கொள்ள விரும்பின்

உனது தாத்தாக்களைப் போல

வீரம் தெறித்து முறுகித்திமிர்த்த தமிழனாய் இருக்கும்

சாத்தியங்களைச் சிந்தனை செய்…

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

பூதங்கள் அலைவுறும் நிலம்

திங்கள், 22 ஆகஸ்ட், 2011 1

நிம்மதியின் நிழலும் கவியாத எனது வாழ்வெங்கும்

சித்தாத்தன் தன் கோடுகளை வரைகிறான்

நிறங்களை அவனே தூவுகிறான்

தூக்கம் விழிப்பு எங்கிலும்

அவனின் சொற்களே நிறைகின்றன

அவனே நிலமாக இருந்தான்

நீரும் காற்றும் அவனே

அவனின்றி என்னில் அணுவும் அசைந்த நினைவில்லை

சிறுவயதில் சோறூட்டும் போது

அம்மா அவனை அறிமுகப்படுத்தினாள்

ஒரு துப்பாக்கி காக்கி உடை தவம் கலைந்த முகம்

இப்படியே அவனைப்பார்த்தேன்

என் குறும்புத்தனங்கள் அதிகரிக்கும் போது

அவனிடம் என்னை கொடுக்கப்போவதாக அம்மா மிரட்டுவாள்

பள்ளி வகுப்பொன்றில் போதிமரத்தின் கீழ்

நிர்வாணமடைந்ததால்

சித்தாத்தன் கடவுள் என்று படித்தேன்

இருப்பினும் சித்தாத்தனும் சீடர்களும்

எங்கள் ஊருக்குள் வரும்போதெல்லாம்

அப்பா காட்டில் ஒழிந்து கொள்வார்

நினைவு வந்த நாளில் எனக்குள் அவன்

அசூரனாய் வெளிப்பட்டான்

வீடுகளை எரித்தான்

சீடர்களை அனுப்பி சூறையாடினான்

அரசமரக்கிளைகளில் காமம் சொரியும் போதெல்லாம்

எங்கள் பெண்கள் நிர்வாணமாகினர்

எல்லாம் அவன் மயமென்றான பின் கொலைகளும்

அவன் பொருட்டே நிகழ்ந்தது

நாட்டைத் துறந்தவனே எனது நிலத்தை பறித்தான்

அவனது திருவோடு எனது கைகளில் விழுந்தது

எல்லா யுகங்களிலும் அவனுக்கு வேறு வேறு முகங்கள்

அவன் அவதாரமெடுத்த எந்த முகத்திலும்

எனது இனத்தின் மீதான இரக்கக் கோடுகளை

நான் கண்டதில்லை

நேற்றும் சித்தாத்தனை சிலர் கண்டதாகக் கூறினர்

உடல் முழுவதும் கறுப்பாகி நகங்கள் நீண்டு

பூதத்தைப் போல அவன் இருந்ததாகப் பயந்தனர்

பூதங்கள் அலைவும் நிலத்தில்

போதிமரங்கள் இல்லை

வேலி பயிரை மேயும் காலத்தில்

சித்தாத்தனின் முகங்களை நானறிவேன்

நீயறிவாயா?

சனி, 13 ஆகஸ்ட், 2011

உயிர்த்தசையும் காலம்

சனி, 13 ஆகஸ்ட், 2011 1

என் உயிர்க்கொடியில் இருந்து

எழுகின்ற ஓசைகளில்

சொற்களைக் கொறித்தபடி

ஒரு பாடகன் எனக்குள் என்னை இசைக்கிறான்

நேற்றும் இன்றும் நாளையுமென

அள்ளிச்சொரியும் பாடல்களில்

இசைக்குறியென

நெளிந்தும் வளைந்தும் காற்றில் அலைகிறது

என் உயிர்ப்பிரவாகம்

சொற்களில் நிரம்பி வழிகின்ற தருணங்களில்

யுகங்களை சுமந்தபடி பிறக்கிறேன்

வாழ்வுச்சுவர்களில் மோதியும் தொங்கியும்

நிலத்தில் வீழும் என் சொற்களில்

பறவைகள் உயித்தெழுகின்றன

வெந்து தீய்ந்து மணக்கும் என் நம்பிக்கையின் சொச்சங்களை

குளிர் தேசங்களுக்கு காவிச்செல்கின்றன பறவைகள்

என்னினத்தின் மீதும் மொழியின் மீதும்

என்னைப் பூசிச்செல்கின்ற காற்று

ஓர் கணத்தில் என்னை விடுதலை செய்யும்

என் வார்த்தைகளை அள்ளியெடுத்து

தாய் ஒருத்தி என்னை கர்ப்பத்தில் சுமக்கக் கூடும்

நிலமும் சுதந்திரமும் நீண்ட பெருவாழ்வும்

அற்றவனென்றெனது நெடுந்துயரை

காலம் காற்றெல்லாம் தூவியெறியும்

மோதி விழுந்தரற்றும் என் வார்த்தைகளில்

மீண்டெழுந்த பறவைகள்

கூடு திரும்பும் காலமொன்றில்

நரைக்கண்கள் மூடாது விழிந்திருந்து

பொன்னிலத்தின் பிடி மண்ணை நான் அள்ளி முகர

பெருநிலம் என்னை இசைத்தெழும்

நிலமும் நீரும் காற்றுமென

வழிந்துருகும் வார்த்தைகளில் நிறைந்தசையும்

எனது குழந்தைகளின் முகத்தில் வாழ்வேன் நான்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

நினைவேந்தித் துடித்தழுதல்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011 0

காற்றுந்தும் வீதிகளில்

கால் தடங்களை அள்ளி

முகத்தில் அப்பும் புழுதிக் கந்தைகளூடு

கல்லறைகளைத் தேடி அலைகிறேன்

தூபிகளற்ற நினைவுகளைச் சுமந்து

காணிநிலம் துடித்துக்கசியும் சகதியில்

என்னைப் புதைக்கிறேன்

நினைவேந்தித் திரியும் அந்தியில்

பறவைகள் கூடுதிரும்புகின்றன

பழங்சோறு சுடும் காலத்தில்

சித்தாத்தன் துறவில் இருந்து மீண்டிருக்கிறான்

போதியரசனின் திருவோடு

எனது இனத்தின் ஆன்மாக்களில்

நிரம்பி வழிகிறது

தர்மச்சக்கரத்தில் கழுகுகள் ஓய்வெடுக்கின்றன

போதிமரம் வெற்றிக்களிப்பில்

மின் விளக்கென ஒளிர்கிறது

எமக்கு நினைந்தழும் வரத்துக்காக

தவத்தில் யுகங்களைக் கரைத்தவனின்

புனித்தந்தங்கள் அசைகின்றன

முலைகளைச் சிதைத்து

குழந்தைகள் பசித்திறந்த நாளில்

பாற்சோறு பகிரும் கரங்களில்

இன்னும் மறையாதிருக்கிறது

துடித்தழும் பல்லாயிரம் உயிர்களின் முகங்கள்

சரித்திரம் முடிவுற்ற நாளொன்றில்

வராமல் போனவர்களின் வார்த்தைகளை

தேடியழும் விதியில் தீபங்கள் எரிகின்றன

கிடைக்காத எனது சுதந்திரத்தின் பொருட்டு

கொல்லப்பட்ட

என் உறவுகள் என்னை மன்னிப்பார்களாக

பரிதவித்திறந்த குழந்தைகள்

என்னை சபிக்காதிருப்பார்களாக

கொலைக்கென அவர்களைப் படைத்த

கடவுளின் பெயரால் கேட்கிறேன்

சொர்க்கத்திலாவது அவர்கள்

சுதந்திரத்தை அடையட்டும்

காதல் அலையும் வெறித்த தெருக்கள்


நினைவுகளில் படுத்துறங்கும் விதியில்

நீ வந்து போகிறாய்

கணம் எனக்கழியும் நினைவில்

இன்னும் நீர்த்துவிடாத நீ

தொலைவுற்றுப் போனாய்

முன்பொரு காலத்தில் எனக்கென்றொரு

தாய் நிலம் இருந்தது

ஒரு வானம் ஒரு பூமி

இப்படி ஏதேதோ……

நான் நிலத்தில் இருந்த காலத்தில்

உனது காதலில் இருந்தேன்

பள்ளியுடையில் உன்னை தினம் கடந்தேன்

உனது தெருவே பிரியமானதாகவும்

உனது பெயரே என் மொழியாகவும் இருந்த காலம் அது

எனதும் உனதும் நிலத்தை ஓர் நாள்

அவர்கள் பறித்தனர்

நள்ளிரவில் குண்டுகளை அள்ளி எறிந்தனர்

சாமத்தில் எரிந்த நகரத்தில்

எனக்குப்பிரியமான உனது தெரு

வெறித்துக்கிடந்தது

சம்பூர் சாம்பலூரானது

ஓலங்களுக்குள் உனது குரலை

தேடியலைந்தேன்

முகம் தெரியாத இருள் வெளியில்

ஊர் பிரிந்தோம்

எடுத்துவர மறந்த பொருட்களில்

நமது காதல் கடிதங்களும் அடங்கிற்று

நம் நிலத்தை திருட அவர்கள் சொன்ன

ஆயிரம் பொய்க்காரணங்களில்

உனதும் எனதும் காதல் செத்துக்கொண்டிருந்தது

நான் மண்ணையும் உன்னையும் பிரிந்தேன்

பின்பொருநாளில்

வாலிபம் தொய்வுற்ற அந்தியொன்றில்

நீ என்னைக்கடந்திருந்தாய்

ஒரு கடைத்தெரு

வெறித்த சாலை

மூச்சிறுகிய திருவிழாக்கூட்டம்

இப்படி ஏதோ ஒன்றில் அது நிகழ்ந்திருக்கும்

மௌனங்கள் மட்டும் பேசிக்கொள்ள

நம் உடல்கள் நகர்ந்தன

உனது கைக்குழந்தையின் அழுகையை

சரி செய்யும் அவகாசத்தில்

என்னை மறந்திருப்பாய்

நாம் நடந்த தெருக்கள்

நிழல்வாகை மரம் காளிகோயில் இப்படி

எதுவும் இன்று என்னிடமில்லை

நமது காதலின் சாட்சிகளாக

நம் காதல் தெருக்கள் இன்று பாழடைந்திருக்கும்

நிலத்தை அள்ளும் பேய்கள் உலவும் நகரங்களில்

காதலில்லை

ஊரின் சாட்சியாகவும் உனது நினைவாகவும்

எனக்கென்று இப்போதிருப்பது

ஒரு அகதிக்கூடாரம் மட்டும்தான்

 
◄Design by Pocket