இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 7 அக்டோபர், 2010

கடைசி மனிதனின் மரணம்.

வியாழன், 7 அக்டோபர், 2010 0
வாழ்கையை
அழகாய் நேசித்த
அந்த நல்ல மனிதனும்
நேற்று வீதியில் இறந்து கிடந்தான்
அவனேதான் நான் நம்பியிருந்த
கடைசி மனிதன்…..

அவன் முகத்தில் ஏதோ
பிடிப்பற்ற வெறுப்பு
அறிந்த வரை…..
வாழ்க்கையை உலகத்தை
நேசித்திருந்தான்.

எனது
கடைசி மனிதனின் மரணத்தில்
எந்தக் காரணமும்
முழுசாய்த் தென்பட வில்லை

அவனது
நாட்குறிப்பின் நடுப்பக்கத்தில்
இரண்டு கவிதைகள்

முதல் கவிதை
வாழ்க்கையைப் பற்றியது
அடுத்த கவிதை
மரணத்தைப் பற்றியது…!

முயலாமை

அப்பன் காலத்தில்
நடந்த கதைகளையெல்லாம்
மறந்துவிட்டு
காட்டு விலங்கெல்லாம் அழைத்து
சத்தம் போட்டது முயல்

காட்டில் அழகான மிருகம்
தானே என்றும்
தனக்கு வேகமாக ஓடத் தெரிவதால்
தன்னில் சிறிய விலங்குகளுக்கு
தான்தான் தலைவனென்றும்
உரத்துப் பேசியது

அப்பன் காலத்து
கதைகளை மறக்காமல்
பற்றைக்குள் அமைதியாய்
படுத்திருந்த ஆமை
சிரித்துக் கொண்டே தலையாட்டியது
பொறு……பொறு…….
வேகமாய் ஓடினாலும்
தூங்குவாய்தானே என்று…..

அப்பாவின் வாழ்க்கைப் பயிற்சி

சின்ன வயதில
நான் சாப்பிடாட்டி அப்பா
பெரிய கம்போட நிப்பார்
சாப்பிடாட்டி அடிப்பன் என்று அதட்டியதட்டி
அந்த நேரம் கோபந்தான் வரும்
என்ன செய்யிறது
அப்ப நான் சின்னப் பெடியன்

வாயும் வயிறும் என்ரது
பசிச்சாத்தான் சாப்பிடலாம் என்ற
உரிமையும் என்ரது
ஆனாலும்
பசிக்காட்டியும் சாப்பிட வைக்கும் அதிகாரம்
அப்பாக்கிட்டத்தான் இருந்தது
அந்த நேரம்
கோபமும் வெறுப்புந்தான் வந்திச்சி
ஆனால் இப்ப வரல

அப்பாக்கு இப்ப
நன்றி சொல்லனும்
பசிக்காட்டியும் சாப்பாட்ட
திணிச்சித் திணிச்சி அப்ப
என்னப் பழக்கப்படுத்தினத்துக்கு…

சின்ன வயதிலயே
விருப்பமில்லாம ஏறறுக் கொள்ளப் பழகினதால
நான் வாழுற இத்க்காலத்தில
கொஞ்சம் லேசாச் சீவிக்க முடியுது….

தோழனுக்காய் ஒரு தோழனின் காத்திருப்பு

பால்ய வயதுத் தோழா

83 களில் எம்மவர்கள் நிர்வாணமாய்

எரியுண்ட போது

நானும் நீயும் ஏதுமறியாது முலை சப்பினோம்

87 களில்

எனதும் உனதும் வீடுகள் எரிந்து

வீதியில் பிணங்கள் கிடக்க

நம் தண்ணீர்த் துப்பாக்கி எரிந்து போனதற்கு

அழுது தொலைத்தோம்

7.7.90 இல்

ஊரே தலை தெறிக்க ஓட

நாமும் புத்தகப் பையுடன் வீட்டுக்கு ஓடினோம்

மறுநாள் நம்மூர் சுடுகாடாய் மாற

நூறு பிணங்கள் எரிந்து கிடந்தது

அன்றும் புதினம் பார்ப்பதைத் தவிர

எதுவும் புரியவில்லை

மீசை அரும்பிய வயதில்

கொஞ்சம் புத்தி தெரிய

படு கொலைகளில் கொல்லப்பட்டவர்களில்

எனக்கும் உனக்கும் பரிட்சயமான

பள்ளித் தோழியின் அப்பாவும் அண்ணாவும்

என்றறிய சற்றே கலங்கினோம்

அன்று அந்தக் கலக்கமும் தோழிக்காகத்தான்…….

மீசை கறுத்த காலத்தில்

நம்மூரில் நடந்தேறிய மரணங்கள்

நம்மிருவரையும் உலுப்பிப்போட்டது….

அப்போது ஒரு தோழிக்காக மட்டும்

கவலைப் பட வில்லையென்பது

எனக்கும் உனக்கும் தெரிந்த கதை

அவை நமக்குள் ஒரு புறமாக இருக்கட்டும்…

இது தாடி முளைத்து கறுத்துப் போன வயது

நீ ஊரில் இருந்தாய் நான் அங்கில்லை

2006.4.26 அன்று

ஊரே சுடுகாடாகி பின் பாலை வனமாகி

உயர் பாதுகாப்பு வலயமாய் மாற

நம்முறவுகள் உயிரோடு

தூக்கியெறியப்பட்டனர் தொலைவில்

நெத்தியில் அகதி முத்திரை குத்தி

உப்புச் சப்பற்றிருந்த மனதுடன்

உன்னை எதிர்பார்த்தேன்

கூட்டம் கூட்டமாய்த் தேடினேன்

எல்லோரும் வந்தார்கள்

பொய்த்துப் போனது என் காத்திருப்பு

நீதான் தோழா வரவில்லை

நீ வரமாட்டாய்………

எனக்குத் தெரியும்தானே

உனக்கு

மீசை முளைத்துத் தாடி படர்ந்த வயதென்று

அதனால் நீ வரமாட்டாய்……..

என் பிரிய தோழனே..!

நம்பிக்கையிழக்கவில்லை நான்

என்றோ ஒரு நாள்

நம் ஊரின் எல்லையில் நின்ற படி

என்னைக் கூவி அழைப்பாய்

அப்போது வருகிறேன்

ஆயிரம் கவிதைகளுடன்

உன்னைக்

கட்டித் தழுவிஆனந்தக் கண்ணீர் வடிக்க…..!

வெள்ளைப் புறாவும் அண்டங்காக்கையும்.

தீனி பொறுக்கத் தெரியாத

குயில் குஞ்சொன்றை

அண்டங்காக்கைகள் முற்றத்தில்

கொத்திக் கிழித்த போது அழுது முடித்திருந்தேன்…

காக்கையின் கூட்டில்

குயில்முட்டையிடுவதாயும்

காக்கையின் சூட்டில்

குயில் குஞ்சு பொரிப்பதாயும்

பின்னாளில் அறிந்து கொண்டேன்..

ஒரு காலைப் கொழுதில்

இடைவெளியற்றிருந்த எங்கள் வீட்டின் கூரையின்

நெருக்குவாரங்களை நீக்கி

சின்ன இடைவெளியில்

வெள்ளைப் புறா ஒன்று

கூடு கட்டியதாய் ஞாபகம் எனக்கு..!

தீனி பொறுக்கச் செல்லும்

மாலை கூடு திரும்பும்

அழகான அந்த வெள்ளைப் புறாவின்

வாழ்கையை சில நாட்களேனும்

ரசித்ததாய் எனக்குள் ஒரு உணர்வு

சில காலம் புறா

தீனி பொறுக்கச் செல்லாத கவலையில்

மேசைகளை அடுக்கி

ஒரு நாள் எட்டிப் பார்த்தேன்

மூன்று முட்டைகளை அடைகாத்திருந்தது புறா…!

சில காலம் கழிக்க

குஞ்சுகளின் கீச்சொலி கேட்டு

மீண்டும் கூட்டை எட்டிப் பார்த்தேன்

இட்டதென்னவோ புறா முட்டைதான்

பொரித்துக் கிடந்தன

பாம்பொன்றும்;;;;…..பருந்தொன்றும்…பச்சோந்தியொன்றும்.

வன்முறையற்ற வெள்ளைப் புறா

காக்கை போல் குஞ்சுகளை

கொத்திக் கிழிக்காமல்

பறந்து போயிருந்தது கூட்டை விட்டு….

நேற்று

மேசைகளை அடுக்கிகூட்டை உற்றுப் பார்த்தேன்

என்னைப் பய முறுத்திய படி

மூன்று முட்டைகள். 

Sujanthan's Blog: இல்லாத பிறப்பொன்றளித்த மூலவனே

Sujanthan's Blog: இல்லாத பிறப்பொன்றளித்த மூலவனே

இல்லாத பிறப்பொன்றளித்த மூலவனே

எங்கள் முதுகுகள் எரிந்த போதும்

முக்கண்ணில் ஒரு கண்ணும் காட்டாது

நீ முப்புரம் எரித்த

மூத்த கதைகளுக்குள்

இன்னும் உலவித் திரிகின்ற

மூலத்தின் பராபரமே…!

உன் படைப்பில் உள்ளது போல்

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகி

பல்மிருகமாகி பறவையாய்ப் பாம்பாகி

கல்லாய் மனிதராய் பேயாய்க் கணங்களாய்

வல்அசுரராகி முனிவராய்த் தேவராய்

செல்லாது நின்ற தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும்

பிறந்திழைத்தேன் என் பெருமான்

உன் கணக்கில் சொல்லாத

ஈழத்தமிழன் எனும்

ஈனப்பிறப்பொன்றை எங்கிருந்து

ஏனளித்தாய் சொல்லு….?

 
◄Design by Pocket