இருத்தல் என் சுதந்திரம்

புதன், 3 நவம்பர், 2010

தொன்மத்தின் வன்மக்கனவு

புதன், 3 நவம்பர், 2010

பேய் இருட்டைப் பிழந்து நடுநிசியில்

கவிகிறது நிலவு

சலனங்களற்ற நிசப்தத்தின் கரைகளில்

சஞ்சரிக்கும் என் உயிர்

அமானுசியங்களின் சிதைவில்

தாயின் வற்றிய முலைகளை சப்பிய

குழந்தையின் முனகலில் சிதைகிறது

மூச்செறிந்துறங்கும் சொறிநாயின் சப்தங்கள்

சுவரில் படிந்து காற்றிறுகிய மரங்களில்

வழிந்தொழுகும் நிலவின் துளியை நக்கி அடர்கிறது

பல்லியின் நிழல்

விறைத்த ஆண்குறி சூடுதணியத் துலாவுகிறது

வன்மத்தில் மறியேறிய

கறுப்பு வெள்ளை மாட்டின் அலறலில்

அம்மா அரட்டப்பட்டாள்

கழுத்துச் சுருக்கங்களில் பிசிபிசுத்து வடியும்

வியர்வையின் நிமித்தம்

கலைந்த என் தூக்கத்தில் தொன்மங்கள்பற்றிய

தொடர்பறுந்த கனவு மீதியை அவாவுகிறது

பேய்கள் பற்றி அச்சுறுத்திய படி

அம்மா முதுமைக் கண்களால் அயர்கிறாள்

வறண்ட தொண்டை நனைத்து

தொன்மத்துள் புதையும் மனது

ஒட்டிய கனவின் மறுபாதியில்

ஓரு துப்பாக்கியின் குழல் சூட்டில்

கருகித் தீய்ந்து நாற்றமெடுக்கிறது

என்னினத்தின் கருமுட்டையும் விந்தும்

சூடுதணியத் துலாவிய ஆண்குறி சுருங்க

கறுப்பில் தோய்ந்த சப்பாத்தின் நிழலில்

மறைகிறது என் தொன்மம்

காலத்தின் புரியறுந்த நார்களில் தொங்கி

இறைஞ்சித் துடித்தது சுயம்

காறிச்செருமி பசியின் பொருட்டு

மழைக்காக வானம் பார்த்த

அப்பாவின் சத்தத்தில்

அம்மா மீண்டும் அரட்டப்பட்டாள்

1 comments:

சஞ்சயன் சொன்னது…

முகப்புத்தகத்தில் உங்கள் ஆக்கம் பார்த்து, அதன் மூலமாக உங்கள் வலைப்பதிவு வந்தேன். உங்கள் எழுத்து வசீகரமாயும், வலிகளை உரத்துச் சொல்வனவாயும் இருக்கின்றன.வாழ்த்துக்கள்.

நட்புடன் சஞ்சயன்
visaran.blogspot.com

கருத்துரையிடுக

 
◄Design by Pocket