இருத்தல் என் சுதந்திரம்

செவ்வாய், 9 நவம்பர், 2010

மாறா நிலவும் மறையா வலியும்

செவ்வாய், 9 நவம்பர், 2010
மானத்தின் வேரழுகி

வீழ்ந்து விட்ட பின்னாலும்

இருந்தென்ன இனியென்ற

இறுதிநிலை வந்தெய்து

சாவோடு துணியாத

போக்கனத்து வாழ்வதனுள்

சலித்துயிர்த்து இன்னும்

நாமும் இருக்கின்றோம் என்பதுவாய்

நீமட்டும் மாறாமல்

வாசலிலே வாய் நிறைய

பால் சொரிந்து வந்து நின்று

காய்கின்றாய் பெரு நிலவே

முன்பொருநாள் பால் வெளியில்

நீ பாத்திருந்த வேளையில்தான்

பாவியர்கள் கணையெறிந்து

பாட்டனும் அறியாத பாட்டன்கள்

வாழ்ந்து விட்டுப் போனதொரு

எங்கள் பொன்னகரை எரித்ததனை

நீ மட்டும் சாட்சியென

பாத்திருந்தாய் பெருநிலவே

நாய்களைப் போல் சாமத்திலே

நிலம் பிரிந்து போனதுவும்

ஊரெரிந்த கரும்புகையில்

உன் பால் வீதி கறுத்ததுவும்

எனக்கின்னும் நினைவுண்டு

நீ மட்டும் மறப்பாயா

வெண்ணிறத்தின் கூடாரம்

ஓரிடமாய்த் தரித்து நிற்க

கூடார வாசலிலே மல்லாக்கப் படுத்திருந்து

வாழ்வழிந்த பெருவலியை

கடைக்கண்ணில் கசிய விட்ட

அகதி முகாம்வாசலிலும்

வஞ்சகமே இல்லாமல்

நீ சொரிந்தாய் பெரு நிலவே

அனல் மின்னை ஆக்குதற்கு

ஆட்களற்ற வெளியிருக்க

தொன்மத்துள் வாழ்ந்து வந்த

தொல்குடியை நாய்களைப் போல்

நாலாண்டாய் நடுத்தெருவில் துரத்தி விட்டு

மின்சாரம் செய்கின்ற

பாவிகளைக் கண்டதுண்டா

பாவியர்க்கு நீ இரவில் பொழிகின்ற

பால் ஒளிதான் போதாதோ

ஆட்களற்ற திசையெல்லாம்

பார்த்து வரும்பெரு நிலவே

எங்களது திருநாட்டில்

நடக்கின்ற பெருங்கூத்தை

எங்கேனும் கண்டதுண்டா

கண்டு வந்து சொல்லாயா

மாறாது மறையாது என்றெல்லாம்

மனதுள்ளே பூட்டி வைத்த

எல்லாமே மாறிவிட்ட பின்னாலும்

நீ மட்டும்மாறாது வந்துதித்தாய்

பெரு நிலவே

மாறாத எல்லாமே மாறிவிட்ட பின்னாலும்

நீ மட்டும் மாறாது

வந்துதித்து என்ன பயன்

செத்தழியா காலத்துள்

சீரழிந்த வாழ்வதனை

விட்டகலும் மாயத்தை

அறியாமல் தவிக்கின்றோம்

இரக்கத்தின் குணமொன்று

உனக்கிருக்கும் என்றாகில்

உன் பால் ஒளியில் படு விசத்தை

கலந்தெம்மில் ஊற்றிவிடு

வக்கிழந்த வாழ்வழிந்து

பரபதத்துள் மூழ்கட்டும்

(சம்பூர் என்ற எனது கிராமம் யுத்தத்தில் பறித்தெடுக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயமாகி இன்று அனல் மின் நிலையம் அமைப்பதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளது. 4 வருடங்களாக நாங்கள் அகதிக் கூடாரத்னுள்ளே வாழ்வை கழிக்கின்றோம்

1 comments:

Maran சொன்னது…

அண்ணா! நீண்ட நாட்களின் பின்னர் உங்களின் கவிதை வாசிக்க கிடைத்ததையிட்டு மகிழ்ச்சி!!
பாரதத்தில் வைரமுத்துவின் ஊர்!! (வைகையிலே ஊர் முழுக...)
ஈழத்தில் சுயந்துவின் ஊர்!

கருத்துரையிடுக

 
◄Design by Pocket