இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 7 அக்டோபர், 2010

தோழனுக்காய் ஒரு தோழனின் காத்திருப்பு

வியாழன், 7 அக்டோபர், 2010

பால்ய வயதுத் தோழா

83 களில் எம்மவர்கள் நிர்வாணமாய்

எரியுண்ட போது

நானும் நீயும் ஏதுமறியாது முலை சப்பினோம்

87 களில்

எனதும் உனதும் வீடுகள் எரிந்து

வீதியில் பிணங்கள் கிடக்க

நம் தண்ணீர்த் துப்பாக்கி எரிந்து போனதற்கு

அழுது தொலைத்தோம்

7.7.90 இல்

ஊரே தலை தெறிக்க ஓட

நாமும் புத்தகப் பையுடன் வீட்டுக்கு ஓடினோம்

மறுநாள் நம்மூர் சுடுகாடாய் மாற

நூறு பிணங்கள் எரிந்து கிடந்தது

அன்றும் புதினம் பார்ப்பதைத் தவிர

எதுவும் புரியவில்லை

மீசை அரும்பிய வயதில்

கொஞ்சம் புத்தி தெரிய

படு கொலைகளில் கொல்லப்பட்டவர்களில்

எனக்கும் உனக்கும் பரிட்சயமான

பள்ளித் தோழியின் அப்பாவும் அண்ணாவும்

என்றறிய சற்றே கலங்கினோம்

அன்று அந்தக் கலக்கமும் தோழிக்காகத்தான்…….

மீசை கறுத்த காலத்தில்

நம்மூரில் நடந்தேறிய மரணங்கள்

நம்மிருவரையும் உலுப்பிப்போட்டது….

அப்போது ஒரு தோழிக்காக மட்டும்

கவலைப் பட வில்லையென்பது

எனக்கும் உனக்கும் தெரிந்த கதை

அவை நமக்குள் ஒரு புறமாக இருக்கட்டும்…

இது தாடி முளைத்து கறுத்துப் போன வயது

நீ ஊரில் இருந்தாய் நான் அங்கில்லை

2006.4.26 அன்று

ஊரே சுடுகாடாகி பின் பாலை வனமாகி

உயர் பாதுகாப்பு வலயமாய் மாற

நம்முறவுகள் உயிரோடு

தூக்கியெறியப்பட்டனர் தொலைவில்

நெத்தியில் அகதி முத்திரை குத்தி

உப்புச் சப்பற்றிருந்த மனதுடன்

உன்னை எதிர்பார்த்தேன்

கூட்டம் கூட்டமாய்த் தேடினேன்

எல்லோரும் வந்தார்கள்

பொய்த்துப் போனது என் காத்திருப்பு

நீதான் தோழா வரவில்லை

நீ வரமாட்டாய்………

எனக்குத் தெரியும்தானே

உனக்கு

மீசை முளைத்துத் தாடி படர்ந்த வயதென்று

அதனால் நீ வரமாட்டாய்……..

என் பிரிய தோழனே..!

நம்பிக்கையிழக்கவில்லை நான்

என்றோ ஒரு நாள்

நம் ஊரின் எல்லையில் நின்ற படி

என்னைக் கூவி அழைப்பாய்

அப்போது வருகிறேன்

ஆயிரம் கவிதைகளுடன்

உன்னைக்

கட்டித் தழுவிஆனந்தக் கண்ணீர் வடிக்க…..!

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket