இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 7 அக்டோபர், 2010

காணாமல் போவதற்கு சில நிமிடங்களின் முன்னும் பின்னும்

வியாழன், 7 அக்டோபர், 2010
பக்கத்து வீட்டுத் தங்கராசு அண்ணன்
இன்னும் வரலயாம்
விடிய எழும்பி
முடி வெட்டப் போனவராம்
இன்டைக்கு நல்ல வடிவா
இருந்தவராம்

அம்பது வயசெண்டாலும்
மனுசன் நல்ல உருப்படி
இண்டைக்குத்தான்
தாடியும் வழிச்சவராம்
பொஞ்சாதிக்காரி
சொல்லிச் சொல்லிக் கத்திறா

ஒரு நாளும்
இல்லாத புதினமா
மரக்கறி வாங்கிக் குடுத்தாராம்
சாமியும் கும்பிட்டவராம்
கடைசிப் பெட்டையோட
வெளையாடித் தரிஞ்சவராம்

அந்தளவுக்குப்
பெரிசா வசதிக்காரனுமில்ல
ஓட்டச் சைக்கிள்தான் ஓடித்திரிவார்
கையில காசும் வெச்சிருக்கிறலயாம்
மதியம் கறியாக்க
கொச்சிக்காத் தூள் வாங்கத்தான்
காசுகொண்டு போனவராம்
கடக்காரந்தான் சொன்னவனாம்
கறுத்தக் கண்ணாடி பூட்டின
வேனில தங்கராசு அண்ணன்
போறாரெண்டு

ஊர்ச்சனமெல்லாம்
பாழடஞ்ச கிணறெல்லாம்
தேடுறதப் பாத்தா
தங்கராசு அண்ணன் என்ன
சின்னப்பிள்ளையா?
கிணத்துக்குள்ள தவறி விழ

முன் வீட்டுக்காரன் கதச்சான்
பத்து வரிசத்துக்கு முதல்
ஆரோ பசிக்குதெண்டு கேக்க
சோறோ ஏதோ குடுத்தவராம்..…………..!

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket