இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 7 அக்டோபர், 2010

கஞ்சா ரொட்டியும் காடேறிப் பிசாசுகளும்

வியாழன், 7 அக்டோபர், 2010
எங்கள் கிராமத்து
சின்னச் சாமிகளுக்கு
வருடமொரு முறை நாமெலாம் கூட
நடக்கும் கூடார மடை

சாட்டையை நீட்டிப் பிடித்து
பூசாரிகள் மந்திரம் சொல்ல
அகோர முகத்தோடு உருவேறி ஆடும்
சின்னச் சாமிகள.

கஞ்சா ரொட்டியும்
சாராயப் போத்தலும்
கறுத்தச் சேவலும்
பலிமடையில் கிடக்க

காடேறியும் கரையாக்கனும்
ஊத்தை குடியனும் கபாள வைரவனும்
சுற்றி நிற்கும் பரிவாரங்களும்
படையலுக்குப் போட்டியிட்டு
உருNறி ஆடும்

பிசாசுகளெல்லாம்
கஞ்சா ரொட்டிக்குப் பின்னால் அலைந்து
பிய்த்துக்கிழித்து சப்பி விழுங்கும்
கறுத்தச் சேவலை தலையால் கடித்து
இரத்தம் உறிஞ்சும்
காலம் மாறி…….

இன்று
நாங்கள் பலிமடையில் கிடக்க
பிசாசுகள்
வேப்பிலை எறிந்து இரும்புகள் ஏந்தி
கள்ளப் பூசாரிகளின்
மந்திரம் கேட்டு
எம்மை ஓட ஓட விரட்டி
சொத்தழித்து உயிர் குடிக்க
நரபலிக்காய்
எப்போதும் காத்திருக்கிறது
கூடார மடை

இன்று
கஞ்சா ரொட்டியாய்
நாங்கள்……..
காடேறிப் பிசாசுகளாய்
அவர்கள்……!

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket