இருத்தல் என் சுதந்திரம்

வியாழன், 7 அக்டோபர், 2010

வாழ்தலுக்கான அவகாசம்

வியாழன், 7 அக்டோபர், 2010
வாழ்தல் எவ்வளவு
மகத்தானது
அதிலும் ஒரு மனிதனாய்
அதிலும் கூன் குருடு செவிடு நீங்கி……

நிறையவே இருக்கிறது
பூமியில்
ஒவ்வொன்றாய்….சின்னச்சின்னதாய்;;;;;;;;;;…..
அனுபவித்து வாழ…!
அதனால்தான் சொல்கிறேன்
இன்னும் நான் வாழ்ந்துn முடிக்கவில்லை
அவகாசம் கொடு
மிகச் சிறியதாய் இருந்தாலும்
வாழ்ந்து விட்டு வருகிறேன்……

இலக்குகள் இன்றிஅ அலையும்
உன் சன்னங்களுக்கு
என் வாழ்தலை இலக்காக்க முன்
சின்ன அவகாசம் கொடு……

மழை விட்ட பின்னும்
பீலியில் தொங்கிக் கொண்டு
உயிர் வாழுமே மழைத் துளி
அதனளவாவது
சின்னதாய் மிகச் சின்னதாய்
அவகாசம் கொடு….!

குட்டி போட்டவுடன்
துள்ளிக் குதித்தோடிய
ஆட்டுக் குட்டியல்ல நான்…
எழுந்து நடக்கவே ஒரு வருடம்
பழகிய மனிதன்…
அதனால்தான் என் வாழ்தல்
பெரிதென்கிறேன்…..!

இரக்கமின்றி
உயிர்க்காய் அலையும் உன்னிடம்
என் வாழ்தலுக்கான அவகாசம்
இல்லாமல் போகுமெனில் …

உன் முகத்தில்
காறித் துப்ப முடியாமல்
எனக்குள் கடுப்பேறிக்கிடக்கும்
என் கடைசிக் கவிதையையாவது
எழுதி விட்டு வருகிறேன்
அவகாசம் கொடு……….!

0 comments:

கருத்துரையிடுக

 
◄Design by Pocket